தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • நீர்வண்ணப்பெருமாள் கோவில் - திருநீர்மலை

    சிறப்புக்கள்
    1. பூலோகத்தில் அவதாரம் முடிந்தபின் வைகுண்டத்திற்கு திரும்பும்
      காட்சி இங்கு ஸேவையாகிறது. அதாவது.

      அமர்ந்த நிலையில் - நரசிம்மராக
      நின்ற நிலையில் - நீர்வண்ணராக
      சயன நிலையில் - ரெங்கநாதனாக
      நடந்த நிலையில் - உலகளந்த திரிவிக்ரமனாக

      அதாவது மேலே கண்ட அவதாரங்களின் முடிவில் எம்பெருமான்
      நேராக மீண்டும் வைகுண்டம் சென்று விடுகிறார். அவதார
      ரகஸ்யம் முடிந்துவிடுகிறது.

    2. இந்த ஸ்தலம் ஆயுள் விருத்தியைத் தரக்கூடியது. திருமணப்
      பிராப்தி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு செய்யக் கூடிய
      புண்ணியங்கட்கு (தர்மங்கட்கும் யாகங்கட்கும் 100 மடங்கு பலம்
      அதிகரிப்பதால்) பலமான பலன் கிடைக்கிறது.இங்கு செய்யப்படும்
      ஆயுள் விருத்தி ஹோமங்களும், திருமணத்தடை அல்லது
      திருமணம் நடைபெறாமல் இருத்தல் போன்றன நீங்கி திருமணம்
      விரைவில் நடக்க இப்பெருமானிடம் வேண்டும் வேண்டுதல்கள்
      விரைவில் கைகூடுகின்றன என்பது இங்கு காணப்படும்
      அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.

      இங்கு இராமபிரான் கல்யாணராமனாக அதாவது வனம் ஏகும்
      முன் உள்ளசீத்தா ராமனாக திருமணக் கோலத்தில் காட்சி
      தருவதும் (திருமண வேண்டுதல்கள் நிறைவேறும்)நிகழ்ச்சிக்கு ஒரு
      காரணமாகும்.

      108 திவ்ய தேசங்களில் சோளிங்கபுரம் போல் இப்பகுதி வாழ்
      மக்களும் இதையொரு பிரார்த்தனை ஸ்தலமாகவே கொண்டு
      வழி பாடியாற்றுகின்றனர்.

    3. பூலோக வைகுண்டமென போற்றப்படும் திருவரங்கம், திருமலை,
      திருக்கோட்டியூர் ஆகிய ஸ்தலங்கட்கு உண்டான புகழோடு
      இத்தலத்தையும் இணைத்துப் பாசுரித்திருக்கிறார் பூதத்தாழ்வார்.

    4. திருக்கோவிலூர் அஹோபிலம் (சிங்கவேள் குன்றம்) திருவரங்கம்,
      அயோத்தி ஆகிய திவ்ய தேசங்களை ஒரு சேர சேவித்த
      உணர்வை இம்மலையில் உள்ள பெருமாள்களை தரிசித்து
      திரும்பும்போது உணர முடிகின்றது.

    5. திருமங்கையாழ்வாராலும், பூதத்தாழ்வாராலும் 20 பாசுரங்களால்
      மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.

    6. திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தபோது நீர்சூழ்ந்து
      கொண்டதால் 6 மாத காலம் அவர் தங்கியிருந்த மந்திரகிரி
      என்னும் ஊர் இங்கிருந்து சமீப தொலைவில் உள்ளது.

    7. வாணாசுரன் என்னும் அரக்கனை கண்ணபிரான் கொன்றான்
      அவன் சிவபக்தன். அவனுக்கு ஆயிரம்கைகள். தன் மகள்
      பொருட்டு அநிருந்தனைச் சிறை வைத்தான் அவன்.அநிருந்தனை
      கண்ணன் மீட்டுப் போக வந்தான்.தன் உடல்வலியே பெரிதென்று
      எண்ணி கண்ணபிரானோடு பொருதான். கடும் யுத்தம் செய்தான்.
      அவனுக்கு உதவவந்த அரக்கர்கள் அனைவரையும் கண்ணன்
      வீழ்த்தினான். வாணன் மட்டும் தவறாது கடும்போர் புரிந்தான்.
      இறுதியில் கண்ணன் தன் சக்ராயுதத்தால் அவனது கரங்களை
      அறுத்து வீழ்த்தினான். இந்நிலையில்தன் பக்தனுக்கு இரங்கிய
      சிவன் அவனுக்கு உயிர் பிச்சை அளிக்க கண்ணனை
      வேண்டினான். அதனால் கண்ணன் அவனது 4 கரங்களை
      வெட்டாது விட்டான். மிகவும் வெட்கிப்போன வாணாசுரன் தனது
      நான்கு கரங்களால் கண்ணனைத் தொழுது அவனது நீர்மைத்
      தன்மையே பெரிது என்று கூறி, நீர்மலையெம் பெருமானைச் சுட்டி
      காட்டி தொழுது நின்றான். நான்கு வேதங்களும் எம்பெருமானைத்
      தொழுவது போல நான்கு சுரங்களால் திருநீர்மலையினைத்
      தொழுது நின்றான். நீரினை அரணாகக் கொண்ட நீர்மலையானே
      தனக்கும் அரண் சர்வ உலகத்தையும் அவனே ரச்சிப்பவன்
      என்று தொழுதான். இதனைப் பிள்ளைப் பெருமாளையங்கார்
      தமது நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில்,

      இரங்கு முயிரனைத்து மின்னருளால் காப்பான்
          அரங்க னொருவனுமேயாதல் - கரங்களால்
      போர்மலை வான் வந்த புகழ்வாணன் காட்டினான்
          நீந்மலை வா ழெந்தையெதிர்நின்று
      என்று கூறி இத்தலத்தின் மாண்பிற்கு மேலும் மெருகூட்டுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:51:38(இந்திய நேரம்)