2. அற இலக்கியம்

நாலடியார்

பாடல் கருத்து
Theme of the Poem


குடிப்பிறப்பு

(1)  சிங்கம் தனக்குப் பசியாகிய துன்பம் வந்த போதும் புல்லைத் தின்னாது. அதுபோல மேலான குடியில் பிறந்தவர், தம் ஆடை அழுக்கேறி உணவின்றி உடல் மெலிந்த போதும், தம் குடிக்குரிய கொள்கையிலிருந்து தவறமாட்டார்.

குடிபிறப்பு

உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்

குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;

இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா

கொடிப்புல் கறிக்குமோ மற்று. (141)

மேன்மக்கள்

(2) அகன்ற வானில் தோன்றி உலகிற்கு ஒளி தருகின்ற நிலவும் உயர்குடியில் பிறந்து மக்களுக்கு நன்மை செய்கின்ற சான்றோரும் ஒப்புமை உயடையவர். ஆனால் நிலவோ தன்னிடம் களங்கத்தைக் கொண்டிருக்கும். சான்றோர் அதைப் பொறுத்துக் கொண்டு வாழார். தம் பெருமைக்குக் களங்கம் ஏற்படுமாயின் தம்மையே அழித்துக் கொள்வர்.

மேன்மக்கள்

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்

திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்

மறுவாற்றும் சான்றோரஃ தாற்றார் தெருமந்து

தேய்வர் ஒருமா சுறின் (151)

பெரியாரைப் பிழையாமை

(3)  அருவிகள் ஒலிக்கின்ற அழகிய மலைகளையுடைய குறிஞ்சி நாட்டுத் தலைவனே! குற்றமற்ற பெரியோர் பொறுமை மிக்கவர் என்று எண்ணி வெறுப்பனவற்றைச் செய்யாதிருக்க வேண்டும். தவறுகண்டு வருத்தமும் சினமும் ஏற்படுமாயின் யாராலும் தாங்குவது முடியாது.

பெரியாரைப் பிழையாமை

பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்

வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின்

ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட!

பேர்க்குதல் யார்க்கும் அரிது. (161)

நல்லினம் சேர்தல்

(4)  இளமைப் பருவத்தில் அடக்கமில்லாத தீயருடன் பழகி முறையற்ற செயல்களைச் செய்யக் காரணமாக இருந்த தீய பண்புகளும், நல்லொழுக்கம் அறிந்த பெரியாருடன் சேர்ந்தவுடன் கதிரவனின் வெப்பம் கண்டு புல்லின் நுனியில் தங்கியிருந்த பனிநீர்த் துளி ஆவியாகி மறைதல் போல நீங்கும்.

நல்லினம் சேர்தல்

அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த

நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்

புற்பனிப் பற்றுவிட் டாங்கு. (171)