பழமொழி
பாடல் கருத்து
Theme of the Poem
(1) நன்மை மிக்க அழகிய நீர்வளம் நிரம்பிய ஊரையுடையவனே! பாம்பின் கால்களைத் தம் இனமான பாம்பே அறியும். அது போல அறிவிற் சிறந்தவரை அறிவினால் அறிந்து கொள்ளுதல் அவர்களைப் போன்ற அறிவிற் சிறந்தவர்க்கே இயலும். எளிய அறிவுடையவர்க்கு அறிந்து கொள்ளல் இயலாது.
புலமிக் கவரை புலமை அறிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே
பாம்பறியும் பாம்பின் கால். .

(2) ஒலிக்கும் அருவிகளோடு மூங்கில் முதிர்ந்து முத்து உதிரும் மலைநாட்டை உடையவனே! மற்றவர்க்குக் கொடுத்தலும், தான் அனுபவித்தலும் இல்லாதவன் பெற்றுள்ள பெருஞ்செல்வம், நாய் பெற்ற தேங்காய் போன்றதாகும்.
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழமே

(3) வரிசைப்பட உயர்ந்து எழுந்த மூங்கிலைப் போல் திரண்ட தோள்களையும், வேல் போன்ற கண்களையும் கொண்ட பெண்ணே! வானில் உலவும் சூரியனை கையால் மறைப்பார் இல்லை. அதே போன்று பரந்த அறிவும் ஆற்றலும் உடையவரை பாசியைப் போன்ற அடாத சொல், செயல்களால் அவரது புகழை மறைக்கவும் முடியுமோ? முடியாது.
பரந்த திறலாரைப் பாசிமேல் இட்டு கரந்து
மறைக்கலும் ஆமோ? - நிரந்தெழுந்த
வேயின் இரண்டதோள் வேற்கண்ணாய்! விண்ணியங்கும்
ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்.
(4) நெருக்கமான மடல்களையுடைய அழகிய தாழைகள் மிகுந்த கடல் நாட்டவனே! காட்டில் படர்ந்திருந்த முல்லைக்குத் தேரையும், வாடைக் காற்றால் வாடிய மயிலுக்குப் போர்வையும், முன் நாளில் அளித்தவர்களைக் கேட்டு அறிந்துள்ளோம். எனவே, அறிந்து கொண்டே அறியாத போல நடப்பது சான்றோர்க்கே அழகாகும்.
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின்
நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!
அறிமடமும் சான்றோர்க்(கு) அணி.
