திருக்குறள்
பாடல் கருத்து
Theme of the Poem
கல்வி
(1) கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்கவேண்டும். அவ்வாறு கற்ற பிறகு, கற்றபடி நடக்க வேண்டும்.
குறள் - 1
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
(2) எண் மற்றும் எழுத்து என்று சொல்லப்படும் இந்த இரண்டும் வாழும் உயிர்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
குறள் - 2
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
(3) கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகிறவர் கற்றவரே. கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.
குறள் - 3
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.(4) மகிழும்படியாகக் கூடிப் பழகி, வருந்தி நினைக்கும்படியாகப் பிரிதல் புலவர் தொழிலாகும்.
குறள் - 4
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
(5) செல்வர் முன் வறியவர் நிற்பதுபோல் ஆசிரியர்முன் ஆசையால் தாழ்ந்துநின்று கல்வி கற்றவரே உயர்ந்தவர்; அவ்வாறு கல்லாதவர் இழிந்தவர்.
குறள் - 5
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.
(6) மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். அதுபோல மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவு அறிவு உருவாகும்.
குறள் - 6
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

7. கற்றவனுக்கு எந்த நாடும், ஊரும் தன் நாடாகும்; ஊராகும். ஆகையால் ஒருவன் இறக்கும் வரையில் கல்லாமல் காலம் கழிப்பது ஏன்?
குறள் - 7
யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
(8) ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வி அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையதாகும்.
குறள் - 8
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
(9) தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் அக்கல்வியையே விரும்புவர்.
குறள் - 9
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
(10) ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே யாகும். கல்வியைத் தவிர மற்ற பொருள்கள் அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல.
குறள் - 10
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
அறிவுடைமை
(1) அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அத்துடன் பகைவர்களாலும் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் ஆகும்.
குறள் - 1
அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
(2) மனத்தைக் கண்ட இடத்தில் செல்லவிடாமல் தீமையானதில் இருந்து நீக்கிக் காத்து, நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
குறள் - 2
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

(3) எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும், அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
குறள் - 3
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
(4) தான் சொல்லுவதை எளிய பொருளுடையனவாகவும் பதியுமாறும் சொல்லித் தான் பிறரிடம் கேட்டவற்றில் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பதே அறிவாகும்.
குறள் - 4
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
(5) உலகத்தில் உயர்ந்தவரை நட்பாக்கிக் கொள்ளுவது சிறந்த அறிவாகும்; அந்நட்பை முதலில் மகிழ்ந்தும், பின்பு வருந்தியும் வராமல் காப்பது அறிவு.
குறள் - 5
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.

(6) உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றனரோ, அவ்வாறே அவரோடு பொருந்தி தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
குறள் - 6
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு.

(7) அறிவுடையார் எதிர்காலத்தை முன்னே எண்ணி அறிய வல்லார்; அறிவில்லாதவர் அதனை அவ்வாறு அறிய முடியாதவர்.
குறள் - 7
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
(8) அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாமல் இருப்பது அறியாமையாகும். அஞ்சத்தகுந்ததைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையோர் செயலாகும்.
குறள் - 8
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
(9) வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளும் அறிவுடையோருக்கு நடுங்கும்படி வரும் துன்பம் எதுவும் இல்லை.
குறள் - 9
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
(10) அறிவுடையார் எல்லாம் உடையவரே ஆவர். அறிவு இல்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
குறள் - 10
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.