Primary tabs
-
ஆண்டளக்குமையன் கோவில் - திருஆதனூர்சிறப்புக்கள்
காமதேனு இங்கு தவம் இருந்த படியால் இத்தலத்தில்
காமதேனுவுக்கும்,காமதேனுவின் புத்திரி நந்தினிக்கும் சிற்பங்கள்
உண்டு.இத்தலமும் ஸ்ரீரங்கமும் பலவகைகளில் மிகவும் ஒற்றுமை
வாய்ந்தது. ஸ்ரீரங்கத்திற்கு இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும்
ஓடுதல் போன்று இத்தலத்திற்கும் 2 கல் தொலைவில்
இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் ஓடுகிறது.ஒரு காலத்தில் திருவரங்கம் போன்று இங்கும் 7 மதில்கள்
இருந்ததாகவும் பிற்காலத்தே காலவெள்ளத்தே அழிந்துபட்டது
என்றும் அறிய முடிகிறது.பரமபதத்தில் எம்பெருமான் வீற்றிருந்த திருக்கோலத்தில்
உள்ளார் அங்கு விரஜா நதியும் உள்ளது. அங்கு இணையாக
(ஒரே மாதிரியாக) இரண்டு தூண்கள் உள்ளது. நமது ஆத்மா
அங்கு சென்றதும் பன்மடங்கு பெருத்துவிடுகிறது. அப்போது
அந்தத் தூண்களைத் தழுவிக் கொண்டோ மானால் எமலோகம்
இல்லாது போவதுடன் நித்ய சூரிகளாகவும் மாறி விடுகின்றோம்.அது மாதிரியான இரண்டு தூண்கள் 108 திவ்ய தேசங்களில்
திருவரங்கத்திலும், இந்த ஆதனூரில் மட்டுமே உண்டு.
திருவரங்கம் கர்ப்பகிருகத்தில் அமைந்துள்ள இந்த இரண்டு
தங்கத் தூண்களை மணத்தூன் என்றும் சொல்வார்கள்.
இதேபோன்று ஆதனூரிலும் எம் பெருமானின்
கர்ப்பகிருஹத்திற்குள் இத்தூண்கள் உண்டு. இவைகளை இந்த
மானிட சாரீரத்துடன் நாம் தழுவிக்கொள்வோமாயின் நாமும்
எமனுலகம் செல்லும் பாக்கியத்தை இழக்கிறோம்.சரபோஜி மன்னருக்கும், இத்தலத்திற்கும் தொடர்புகள்
இருந்ததை கல்வெட்டுக்களிலும், ஓலைச்சுவடிகளாலும்
அறியமுடிகிறது.மிகச் சிறப்புற்று விளங்கிய இக்கோவிலின் பழைய அமைப்பு
பூமிக்கு அடியில் புதைந்துவிட அச்சமயம் காஷ்மீர் தேசத்து
ராஜாவின் புதல்விக்கு (பேய்) பிர்ம்மராட்சஸு பிடித்து, எவ்வளவு
பாடுபட்டும் அதைத் தீர்க்க முடியாது அம்மன்னன் தவித்துக்
கொண்டிருக்கும் வேளையில் அவனது கனவில் தோன்றிய
இப்பெருமான் இக்கோவிலை செப்பனிடுமாறு தெரிவிக்க, அவன்
பரிவாரங்களுடன் வந்து தங்கி இப்போதுள்ள மாதிரியை
ஒத்துக்கட்டி முடிக்க அவன் மகளைப் பிடித்திருந்த
பிர்ம்மராட்சஸு ம் ஒழிந்தது. எனவே இதுபோன்ற பில்லி,
சூன்யாதிகளை விலக்குவதிலும் இத்தலம் இப்பகுதியில் பெயர்
பெற்று விளங்குகிறது.திருமுழிக்களத்து எம்பெருமானும் இப்பெருமானும் ஒருவரே
என்பது ஐதீஹம். என்னை மனங்கவர்ந்த ஈசனையென்று
திருமங்கை தனது மங்களாசாசனத்தை இப்பெருமானுக்காக
ஆரம்பிக்கிறார். என்னை மனங்கவர்ந்த என்று சொல்லி
நம்மாழ்வார் திருமுழிக்களத்து எம்பெருமானுக்காக எடுத்தாண்ட
முழிக்களத்து வளத்தின் என்பதை இவர் மூழிக்களத்து
விளக்கினையென்று மங்களாசாசித்தார்.
மூழிக்களத்தின் வளமாவது - ஸம்பத்து
இங்கு ஆண்டளக்கும் ஐ யன் என்பதே
ஸம்பத்திற்கு அடையாளமன்றோதிருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார்.
இத்தலத்திற்கென்று தனிப்பாசுரமோ, மற்ற ஸ்தலங்கட்கு
உள்ளதைப்போன்று பதிகங்களோ இத்தலத்திற்கு இல்லை.
தலைப்பில் காட்டப்பட்டுள்ள பாடலில் பெரிய திருமடலில்
ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் என்று ஒரேவரியில்
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.திருமங்கையாழ்வார் அரங்கநாதனுக்கு திருமதில் கட்டும்
பணியில் ஈடுபட்டிருந்த போது சமயங்கையில் இருந்த பொருள்
எல்லாம் தீர்ந்துவிட கைங்கர்யத்திற்குப் பணம் இல்லையே
என்று பெருமானிடம் வேண்ட கொள்ளிடக்கரைக்குவா
பணந்தருகிறேன் என்று சொல்ல அவ்விதமே வந்து நிற்க,
எம்பெருமான் தலைப்பாகை அணிந்து கையில் ஒரு எழுத்தாணி,
மரக்கால் சகிதிமாய் ஒரு வணிகரைப் போன்று வர, இவரைக்
கண்ட திருமங்கை, யாரென்று வினவ, அதற்கு அந்த வணிகர்
உம்பொருட்டே என்னை ஸ்ரீரங்கத்தில் உள்ள அழகிய
மணவாளனே அனுப்பிவைத்தான் என்று சொல்ல, சரி,
அப்படியானால் சுவாமி, காலியான மரக்காலுடன்
வந்திருக்கிறீர்களே என்று கேட்க, அதற்கந்த வணிகர் இந்த
மரக்காலைக் கையில் எடுத்து வேண்டிய பொருளை மனதில்
தியானித்து எம்பெருமானே சரண் என்று 3 தடவை சொன்னால்
அப்பொருள் சித்திக்கும் என்று சொன்னார்.அப்படியானால் இங்குள்ளவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும்.
இந்த மணலை அளந்து போடும் என்று கூறினார். அதற்குச்
சரியென்று ஒப்புக் கொண்ட வணிகர் ஒரு நிபந்தனை விதித்தார்.
அவர்களின் கூலிக்காக இந்த மணலை நான் அளந்து
போடுகிறேன். உண்மையாக உழைத்தோருக்கு பொன்னாகவும்
சோம்பலுடன் ஏமாற்றியவர்களுக்கு மணலாகவே காட்சி தரும்
என்று கூறி அளந்து போட பெரும் பாலானோர்க்கு
மணலாகவே தெரிய, இவன் மந்திரவாதி என்று பலர் அடிக்கவர,
வணிகர் மெல்ல நகர, திருமங்கை பின்தொடர, இவருக்கு
காட்சியளிக்க நினைத்த எம்பெருமான் மிகவிரைவாகச் செல்ல
திருமங்கை தமது குதிரையிலேறி பின் தொடர்ந்தார்.இவ்விதம் ஓடிவந்து திருமங்கைக்கு காட்சி கொடுத்து மரக்கால்,
ஓலை, எழுத்தாணியோடு ஆதனூரில் புகுந்து கொண்டதாக
ஐதீகம்.அவ்வாறு ஓடிவரும்போது இவ்வூருக்கு (ஆதனூருக்கு) அருகில்
உள்ள ஓர் ஊரில் ஓலை எடுத்து கணக்கு எழுதியதால்
அவ்வூருக்கு ஓலைப்பாடி என்றும் கம்பீரமாக நடந்துவந்த
ஊர்க்கு விசயமங்கை எனவும், ஓடிவரும் போது
திரும்பிப்பார்த்த ஊர் திரும்பூர் எனவும், திருமங்கையாழ்வார்
விரட்டிக்கொண்டு வருகின்றானா இல்லையா என்று மயங்கி
நின்ற ஊர் (மாஞ்சுபோனது) மாஞ்சேரி எனவும், மரக்காலுக்குள்
கை வைத்த ஊர் வைகாவூர், என்றும் புகுந்தது பூங்குடி
என்றும், அமர்ந்தது ஆதனூர் என்றும் கூறுவர்.ஊர்கள் எல்லாம் இன்றும் அதே பெயரில் வழங்கி வருகின்றது.
எனவே இந்நிகழ்ச்சியும் (அரங்கனே இங்குவந்ததால்)
திருவரங்கத்திற்கும் ஆதனூருக்கும் உள்ள ஒற்றுமையை புலப்
படுத்துகிறது.இத்தலத்தின் கோபுரத்தில் மஹாவிஷ்ணு சிலை உள்ளது.
“ஒங்காரோ பகவான் விஷ்ணு” என்ற ப்ரமானத்தின் பேரில்
ப்ரணவ விமானத்தில் வாசுதேவன் உள்ளான். இவன் திருவடி
தெரிந்துவிட்டால் இந்த யுகமானது (கலியுகம்) முடிந்து பிரளயம்
உண்டாகும். இந்தச் சிலை வளர்ந்து வருவதாக ஒரு ஐதீகம்.
இப்போது முழங்கால்வரை தெரிகிறது. இச்சிலை வளர்ந்து
வருவதாக இங்குள்ள பெரியோர்கள் கூறுகின்றனர்.இவ்வூருக்கு அருகே நரசிம்மபுரம் என்ற சிற்றூர் உள்ளது. இது
ஒரு காலத்தில் மிகச்சீரும் சிறப்புடன் விளங்கியதோடு
இத்தலத்தோடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. இந்தக்
கிராமம் சரபோஜி மன்னரால் அஹோபில மடம் 25வது
பட்டத்தின் ஜீயர் ஸ்வாமிகளுக்கு அளிக்கப்பட்டது.
இவரைப்பின் தொடர்ந்து 26வது பட்டத்தின் ஜீயர் சுவாமிகள்
30,37,38வது பட்ட ஜீயர்களும் இங்கேயே எழுந்தருளி
இத்தலத்தினையும் கவனித்து இவ்விடத்திலேயே
அடங்கியுள்ளனர். இவர்களின் நினைவாக இன்றும் 5
பிருந்தாவனங்கள் இங்கு உள்ளன. இன்றும் இத்திருத்தலம்
(ஆதனூர்) அஹோபில மடத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்து
வருகிறது. அஹோபிலம் தான் எம்பெருமான் நரசிம்ம அவதாரம்
எடுத்த இடம். இதன் நினைவாகவே இங்கு தங்கியிருந்த
அம்மடத்தின் ஜீயர்களும் இவ்வூருக்கு நரசிம்மபுரம் என்றே
பெயரிட்டனர்.இந்த அஹோபில மடத்தின் 41வது பட்ட ஜீயர் சுவாமிகள் தான்
ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு தெற்கு கோபுரத்தில் மீதியிருந்த
வேலையை முடித்து ஆசியாவிலேயே பெரிய கோபுரமாகச்
செய்துவிட்டார்.ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்ரீமதி ஆண்டிபயோடின் என்ற
பெண்மணியும், அவளது கணவன் தியோடர் மில்லர் என்பவனும்
இல்வாழ்க்கையில் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து
இந்தியாவிற்கு சுற்றுலா வந்து ஆலய ஆராய்ச்சி
செய்யுங்காலையில் இவ்விருவரும் (ஒருவருக்கொருவர்
தெரியாமல்) இச்சன்னதியில் எதிரும் புதிருமாக தென்பட,
மெய்மறந்து மயிர்சிலிர்ப்ப, ஒருவரையொருவர் ஆரத்தழுவி
மீண்டும் தாம்பத்யம் தொடங்கினர்.இலங்கையிலிருந்து அயோத்தி செல்லும்போது ஆஞ்சநேயர்
இவ்வூரில் இரண்டு தினங்கள் தங்கி இளைப்பாறி ஸந்தியா
வந்தனமும் செய்துவிட்டுப் போனதாகவும், உடனே
ஸ்ரீஇராமபிரான் இங்கே வந்து எனது சகாயான் இங்கு வந்தாரா
என்றுகேட்டுத் தனது திருவடியை வைத்துவிட்டுச்
சென்றதாகவும், வரலாறு. இந்த ஆஞ்சநேயருக்கு “வீரசுதர்சன
ஆஞ்சநேயர்” என்பது பெயர். ஸ்ரீராமன் திருவடியும்,
ஸ்ரீஆஞ்சநேயரும் இப்போது இங்கு உளர். சிறந்த
வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் இந்த ஆஞ்சநேயர்.ஒரு காலத்தில் மிகச் சிறப்புடன் நடந்துவந்த இத்தலத்தின்
பரிபாலனத்திற்கு நித்யபடி, தளிகை வந்ததாகவும், அந்த இடம்
இப்போது கிராமமாகி அந்தப் பழைய பெயரிலேயே (தளிகையூர்)
தளியூர் என்று வழங்கிவருகிறது.திருவரங்கத்து அரங்கனைப் போல இப்பெருமானும் காணத்
தெவிட்டாத பேரழகு வாய்ந்தவர்.