தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • யோகநரசிம்மப் பெருமாள்கோவில் - திருக்கடிகை
    சிறப்புக்கள்
    1. சுமார் ஒரு கடிகை (24 நிமிடம்) இங்கு தங்கியிருந்தாலே மோட்சம்
      கிடைக்கும் என்று ஐதீஹமிருப்பதால் இதற்கு திருக்கடிகை
      என்னும் பெயர் வந்தது. கடிகை - நாழிகை அசலம் - மலை
      எனவே கடிகாசலமானது.

    2. இது ஒரு விசேஷமான பிரார்த்தனைத் தலம் பேய், பிசாசு, சூனியம்
      என்று சொல்லப்படும் அதீத நோய்கள், தீர இங்கே வந்து விரதம்
      கடைபிடித்து பிரதி தினமும் தக்கான் குளத்தில் நீராடி, மலைமீதேறி
      பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு மகிழ்ச்சியுடன்
      செல்லும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாகும்.

    3. தொட்டாச்சார்யார் என்னும் ஆச்சார்ய புருஷர் இத்தலத்தில்
      பிறந்தவர். இவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப்
      பெருமாளை இடைவிடாது தரிசிப்பதை விரதமாகக் கொண்டிருந்தார்.
      ஓராண்டு உடல் நலிவால் காஞ்சி செல்ல இயலாது போகவே
      தக்கான் குளக்கரையிலமர்ந்து காஞ்சி வரதராஜப் பெருமாளின்
      கருட சேவையை மனதில் எண்ணித்துதித்து கண்ணீர் சிந்த கருட
      வாகனத்தில் காஞ்சிப் பெருமாள் இவருக்குக் காட்சி தந்தார். இதன்
      நினைவாக இன்றும் காஞ்சியில் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம்
      நாள் காலை கருட வாகனத்தில் எழுந்தருளும்போது கோபுர
      வாயிலில் தாமதித்து நின்று சோளிங்கபுரம் தொட்டையாசர்
      சுவாமிகள் சேவை சாதிப்பதாய்க் கற்பூர ஆர்த்தி நடந்து வருகிறது.
      இத்திருக்கடிகையில் தொட்டாச்சார்யருக்கும் தனிச்சன்னதி உள்ளது.

    4. சோழநாட்டைப் போன்று வளமிகுந்து நரசிம்மப் பெருமாள்
      உறைதற்கு     இடமாதல் பற்றி     சோளசிம்மபுரம் என்று
      அழைக்கப்படுகிறது.     கல்வெட்டுக்களும்     இப்பெயரையே
      குறிக்கின்றன. இப்போது சோளிங்கர் என்பர்.

    5. சோழன் கரிகால் பெருவளத்தான் தன் நாட்டை 48
      மண்டலங்களாகப் பிரித்த போது இப்பகுதியைக் கடிகைக்
      கோட்டம் என்னும் பெயராலேயே குறிக்கிறான். இச்செய்தி
      பட்டினப் பாலையில் பேசப்படுகிறது.

    6. இராமானுஜர் தமது விசிஸ்டாத்வைத வைணவக் கோட்பாடுகளை
      தழைக்க நியமித்த 74 சிம்மாசனங்களில் இதுவும் ஒன்று.

    7. ஒரு சமயம் துர்வாச முனிவர் இத்தலத்தை அடைந்து
      இப்பெருமாளை வணங்கி நரசிம்மனின் திருத்துழாய் மாலையைப்
      பெற்று அதைக் கழுத்திலும், தலையிலும் சூடி ஆனந்தக்
      கூத்தாடினார். அப்போது அங்கே நிரம்பியிருந்த சாதுக்கள்
      கட்டத்தில் தானும் ஒருவனாக நின்ற புதன் (நவக்கிரகங்களில்
      ஒருவன்) துர்வாசரின் இச்செயலைக் கண்டு ஏளனத் தொனியில்
      சிரித்துக் கேலி செய்ய, துர்வாசரால் சபிக்கப்பட்ட புதன்,
      இக்கடிகாசலத்தில் பாண்டவதீர்த்தத்தில் நீராடி அங்கு ஆடியும்
      பாடியும் வரும் முனிவர்களுக்குத் தொண்டு செய்து தன்
      சாபந்தீர்ந்து மீண்டும் உயர்நிலை பெற்றான் என்று புராணங்கூறும்.

    8. தொட்டையாசார் பல அற்புதங்கள் செய்து காட்டித் தமது
      பக்தியை வெளிக்காட்டிய இடம். இவரைப் போன்று எறும்பியப்பா
      என்னும் ஞானியும் இங்குதான் வாழ்ந்தார்.

    9. முதலாழ்வார்களில்     ஒருவரான     பேயாழ்வாரும்,
      திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.

    10. ஸ்ரீமந் நாதமுனிகளும், திருக்கச்சி நம்பிகளும், மணவாள
      மாமுனியும், இராமானுஜரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

    11. கி.பி. 1781ல் ஆங்கிலேயருக்கும், ஹைதரலிக்கும் நடைபெற்ற
      இரண்டாம் கர்நாடகப்போர் இத்தலத்தின் முன்பகுதியில்
      நடைபெற்றபோதும் அவர்களால் இக்கோவிலுக்கு ஊறு
      நிகழவில்லை.

    12. அஹோபில மலைதான் எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த
      இடம். மீண்டும் ஒருமுறை முனிவர்க்காக அந்த அவதாரத்தை
      இங்கே     மேற்கொண்டதால். தமிழகத்தில் எம்பெருமான்
      அமர்ந்துள்ள மலைகளிலேயே இது மிகச் சிறப்பானதாகும்.

    13. ஏகசிலா பர்வதமென்றும் இதற்கு பெயர். பிரிவுகளும்
      சேர்க்கைகளுமின்றி ஒரே கல்லில் அமைந்த சிலைபோல் ஒரே
      கல்லில் இம்மலை அமைந்திருப்பதால் ஏகசிலா பர்வதம்.

    14. இதனைச் சோழசிங்கபுரம் என்று சைவர்கள் அழைப்பர்.ஏனெனில்
      முன்பு இத்தலத்தில் பெருமாளோடு சிவனும் சேர்ந்து கோயில்
      கொண்டிருந்தாராம். இப்போது சிவனுக்கு தனிக்கோவில் உள்ளது.
      தொட்டாச்சார்யார் தான் ஒரே கோவிலில் இருந்த சிவனைப்
      பிரித்து தனிக்கோவில் அமைத்தவர் என்று கூறுவர்.

    15. இங்குள்ள பெரியமலையில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார்.
      இது 1500 படிகள் கொண்டது. இவரைத் தரிசித்துவிட்டுத்தான்
      சிறிய மலையில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க
      வேண்டும்.

    16. பெருமாளுக்கு ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் ஒவ்வொரு
      விதமான வழிபாட்டு நியமம் உள்ளது. சில தலங்களில் உண்டியல்
      போடுவது. சில தலங்களில் மொட்டை. ஆனால் இங்கு பக்தர்கள்
      படியேறி வந்து தம்மைச் சேவிப்பதை பெருமாளே விரும்புவதாக
      ஐதீஹம். (இங்கு விஞ்ச் ரயில் போட முயற்சிக்கப்பட்டு தோல்வி
      கண்டு விட்டது)

    17. மலைமேல் இருக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு பக்தோசித
      ஸ்வாமி என்ற பெயருண்டு. பக்தர்கள் உசிதப்படி அருள்பவர்
      என்பது பொருள். அடிவாரத்தில் உள்ள பக்தோசித சுவாமிக்கு
      தக்கான் எனப் பெயர். தீர்த்தத்திற்கும் தக்கான் குளம் என்பதே
      பெயர். திருமங்கையாழ்வார் இச்சொல்லை எடுத்தாண்டுள்ளார்.

    18. அக்காரக் கனி என்றால் என்ன? இனிப்பே உருவான வெல்லமே
      மரமாகப் பூத்துக் காயாகி கனியாகி நமக்கு கிடைக்கப்பெற்றது
      போல் சுவைமிக்க கனியாகும். அது போன்றவராம் இப்பெருமாள்
      (அதாவது வேண்டிய மாதிரியே வரம் கொடுப்பவர் என்பதுதான்)

    19. ‘வண்பூங்கடிகை இளங்குமரன்’     என்பது     பேயாழ்வார்
      மங்களாசாசனம்

    20. நூற்றெட்டு திருப்பதியந்தாதியில்,

          சீரருளால் நம்மைத் திருத்தி நாம் முன்னறியாக்
          கூரறிவும் தந்தடிமை கொண்டதற்கே - நேரே
      ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
          தரு கடிகை மாயவனைத் தான்

    21. கடிகாசலம் என்னும் இங்கு ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து
      அக்காரக் கனியான எம்பெருமானை சேவித்தாலே மோட்சம்
      சித்திக்கும் என நூல்கள் மொழிகின்றன. அவ்விதம் திருக்கடிகை
      செல்ல முடியாதவர்களும் இருக்கலாம். அவர்கள் ஒரு நாழிகை
      திருக்கடிகையை மனதில் நினைத்து நரசிம்மரைச் சிந்தித்தாலே
      போதுமென்கிறார் பிள்ளைப் பெருமாளையங்கார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:06:27(இந்திய நேரம்)