தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

 • ஹரசாப விமோசனப் பெருமாள் கோவில்
  திருக்கண்டியூர்
  வரலாறு

  இத்தலத்தைப் பற்றி பிர்மாண்ட புராணத்தின் 8 வது அத்தியாயத்தில்
  பேசப்படுகிறது.

  சிவபெருமானுக்கும் பிரம்மனுக்கும் 5 தலைகள் இருந்ததாகவும் ஒரு
  சமயம் நிஷ்டையில் அமர்ந்து விழித்த பார்வதி தேவி, அவ்விடம் வந்து
  கொண்டிருந்த பிரம்ம தேவருக்கு (தன் பர்த்தாவோ என்று எண்ணி)
  பணிவிடை செய்து பாதங்களை அலம்ப, பெருந்தன்மையோடு பிரம்மன்
  அதனையேற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தனக்கீடாக ஐந்து
  தலைகள் இருப்பதால்தான் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவதுடன்,
  தனக்கு ஐந்து தலையென்று பிரம்மனும் கர்வத்தில் மிதக்கிறான் என்று
  நினைத்த சிவன் பிரம்மனின் நடுத்தலையைக் கிள்ளியெறிய எத்தனிக்க
  பிரம்மனின் மண்டையோடு சிவனின் உள்ளங்கையில் பதிந்து நகராமல்
  அழுந்திக் கொண்டது.

  இதனால் பிரம்மஹத்தி தோஷம் தன்னைச் சூழ, அதிலிருந்து
  மீள்வதற்கு சிவபெருமான் தீர்த்தயாத்திரை செய்து பூவுலகெங்கும்
  அலைய, யார் பிச்சையிட்டாலும் கபாலம் நிறையாமல் போட்டவுடன்
  மாயமாய் மறைய திருக்கரம்பனூர் என்னும் உத்தமர் கோவிலில்,
  மஹாவிஷ்ணு     கேட்டுக் கொண்டதற்கிணங்க மஹாலெட்சுமி
  (பூர்ணவல்லி தாயார்) பிரம்ம கபாலத்தில் பிச்சையிட்டதும் அது
  நிறைந்து சிவனின் பசித்துயர் ஓய்ந்தது.

  பாத்திரம் (கபாலம்) நிறைந்து பசித்துயர் ஓய்ந்தபோதும்
  மண்டையோடு     மட்டும்     கையைவிட்டு     நீங்காமலிருக்கவே
  அவ்விடத்திலிருந்தே திருமாலை நினைத்து சிவன் வழிபட, அப்போது
  திருமால் சிவபெருமானைக் கண்டியூர் வந்து பத்ம தீர்த்தத்தில் நீராடி
  அங்கே எழுந்தருளியுள்ள கமலவல்லி நாச்சியாரையும், என்னையும் வழி
  பட்டால் கபாலம் கையைவிட்டு அகலும் என்று சொல்ல,
  அவ்வண்ணமே கண்டியூர் வந்து தீர்த்தத்தில் நீராடி எழுந்ததும்
  கபாலமகன்றது.

  இவ்வாறு அரன் சாபம் தீர்த்ததால் ஹரசாப விமோசனப் பெருமாள்
  என்றே இங்கு திருமாலுக்கும் பெயருண்டாயிற்றென்பது வரலாறு.

  சில நாட்கள் இங்குள்ள கபால தீர்த்தத்தில் சிவன் நீராடியதால்
  கபாலம் நீங்கியதாகவும், சற்றே மாறுபட்ட தொனியிலும் இக்கதை
  பேசப்படுகிறது. சிவனுக்கு கண்டீச்சுவரர் என்று ஒரு பெயர் இருப்பதால்
  அவர் சாபந்தீர்ந்த நினைவாக கண்டியூர் என்றே இத்தலம்
  அழைக்கப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:06:53(இந்திய நேரம்)