Primary tabs
-
கண்ணன் நாராயணன் கோவில் - திருவெள்ளக்குளம்
சிறப்புக்கள்-
திருமலையில் பெருமாளுக்குரிய திருநாமமான ஸ்ரீனிவாசன்
என்பதும் பிராட்டியின் திருநாமமான அலர்மேல் மங்கைத் தாயார்
என்பதும். அதே பெயர்களில் வழங்கும் இன்னொரு திவ்ய தேசம்
108 இல் இது ஒன்றுதான். வேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான்
அண்ணன் என்பது ஐதீஹமாவதால் திருப்பதிக்கு வேண்டிக்
கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகவே
விளங்கி வருகிறது. எனவே இதனைத் தென்திருப்பதி என்றும்
பகர்வர். -
இந்த ஸ்வேத புஷ்கரணியில் உள்ள குமுத மலர்களைக் கொய்து
செல்ல தேவகுலப் பெண்கள் இங்குவருவது ஒரு காலத்தில்
வழக்கமாயிருந்ததாம். அவ்வாறு ஒரு சமயம் வந்த
தேவகுலப்பெண்களில் மானிடப் பார்வைக்கு இலக்காகி
இங்கேயே நின்று விட்ட குமுதவல்லியைத்தான்
திருமங்கையாழ்வார் திருமணம் செய்ய விழைந்தார். எனவே
இத்தலம் குமுதவல்லியாரின் அவதார ஸ்தலம்
என்பதோடுமட்டுமின்றி திருமங்கையாழ்வாரை இவ்வுலகிற்கு
அளித்தமைக்கும் எல்லை நிலமாயிற்று. அதாவது நீலன் என்ற
பெயரில் படைத்தளபதியாகத் திகழ்ந்த திருமங்கை
குமுதவல்லியைப் பற்றிக் கேள்விப்பட்டு பெண் கேட்டு வர,
குமுதவல்லியார் ஒவ்வொரு நிபந்தனையாக விதித்து
நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் திருமணம் என்று
சொல்ல இவரும் நிபந்தனைகளை நிறைவேற்ற ஈடுபட்டு, இறுதியில்
ஆழ்வாரானார். ஒரு மங்கையினால் ஆழ்வாராக மாறினமையால்
மங்கையாழ்வாராகி திருமங்கை ஆழ்வாரானார். -
திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களால்
மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். பிள்ளைப்
பெருமாளையங்காரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார். -
அழகிய மணவாள தாசருக்கு (மணவாள மாமுனிகட்கு) இறைவன்
இங்கு காட்சி கொடுத்ததாக ஐதீஹம். மணவாள மாமுனி
எம்பெருமானைத் தேட எம்பெருமான் மணவாள மாமுனியைத்
தேட இருவரும் இங்குள்ள தடாகத்தே சந்தித்து விடாய்
தீர்த்தனர் என்பர். -
திருமலையில் ஸ்ரீனிவாசப் பெருமாள் தனித்து நிற்கிறார். அந்தக்
குறையைப்போக்கிக் கொள்ள இங்கு அலர் மேல் மங்கைத்
தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார். இது ஒரு சிறப்பம்சமாகும். -
இத்தலத்தில் குமுதவல்லியாரும் கோவில் கொண்டுள்ளார்.
-
நம்பி என்றும், எம்பெருமானே என்றும் திருமாலை அழைத்து
வந்த திருமங்கையாழ்வார் அண்ணா என்ற அழகு
தமிழ்ச்சொல்லால் எந்த ஆழ்வாரும் சொல்லாத ஒரு
புரட்சிகரமான சொல்லை இரண்டு ஸ்தலங்களின்
ஸ்ரீனிவாசன்களுக்குச் சூட்டி மகிழ்கிறார்.. -
இது மக்கட்பேறளிக்கும் ஸ்தலமாகும். திருமண காரியங்களை
இங்கு வேண்டிக் கொண்டால் சீக்கிரம் நிறைவேறும். ஆயுள்
விருத்தியை அளிக்கக் கூடிய ஸ்தலமாகும். ஒரு பிரார்த்தனை
தலம் போல வளர்ந்து கொண்டிருக்கும் இத்தலம் மிக்க அழகான
சூழ்நிலையில் அமைந்த எழிலான கிராமத்தில் ஸ்ரீனிவாச
அண்ணனைப் பொலிவோடு பெற்றுத் திகழ்கிறது. -
திருமலையைப் போன்றே இங்கும் பிரம்மோத்ஸ்வம் புரட்டாசி
மாதமே நடைபெறுகிறது. இப்பகுதி பலாசவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
-