47. உரிமை விலாவணை
 

இதன்கண்: உதயணகுமரன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு சென்ற செய்தியை வராகன் வந்து கூறக் கேட்ட பிரச்சோதன் மன்னன் கடுஞ்சினங் கோடலும், அமைச்சன் தேற்றுதலும், அரசன் இச்செய்தியைப் பெருந்தேவி முதலியோர்க்கு உணர்த்துதலும், அம்மகளிர் பெரிதும் வருந்துதலும் பிறவும் கூறப்படும்.
 
              செய்வதை அறியார் ஆகிப் பல்அவர்
            கைவிரல் பிசைந்து பைஎன வருவழி
            வில்கைக் கொண்டவன் விடுக்கப் பட்ட
            வல்வினைக் கொடுந்தொழில் வராகன் வந்துதன்
       5    கோமகன் இருந்த கோயில் நெடுங்கடைத்
            தோரணக் கந்தின் தாள்முதல் பொருந்திக்
            கடிகமழ் நறுந்தார்க் காவலன் குறுகி
            அடியுறை அருள்மொழி யான்பணிந்து உரைப்பச்
            செவ்வி அறிந்து நொவ்விதின் வருகஎனக்
      10    கோல்தொழில் அவன்குக் கூறினன் நிற்ப
 
              ஈர்இதழ்த் தாரோய் இற்றை நாளால்
            காரொடு உறந்தஇக் கடுவளி நிமித்தம்
            ஊரொடு உறந்த உறுகண் காட்டி
            இன்னா இன்ப நின்வயின் தரும்எனத்
      15    தொன்நூல் ஆளன் தோன்றக் கூற
 
              இன்னா இன்பத்து இயற்கை என்என
            மன்னவன் வினாய மாத்திரைக் கண்ணே
 
              செறிஇலைப் பொன்குழை சிறப்பொடு தூக்கிய
            சிறுதுளைக் காதின் செங்கன் செந்நோக்கு
      20    அருளொடு படாஅ வறிதுஎழு சினத்தன்
            ஆர மார்பன் அருமறைப் பள்ளியுள்
            உற்றது கூறும் கொற்ற வாயிலன்
            கோலொடும் வாளொடும் கூப்பிய கையன்
            முன்பணிந்து இறைஞ்சிய தன்மை கண்டே
      25    செந்தா மரைக்கணின் செவ்விதின் நோக்கி
            வந்தது கூறுஎன வணங்கி வாய்புதைத்து
 
              அந்தர விசும்பினும் அணிநில வரைப்பினும்
            பெண்நேர் உருவம் பிறர்தமக்கு இல்லா
            நுண்ஏர் மருங்கினும் அடித்திஎம் பெருமான்
      30    வடிவேல் தடங்கண் வாசவ தத்தைக்கு
            அடிவழிப் படூஉம் உரிமையுள் கம்மியன்
            வல்வில் இளையன் வராகன் என்போன்
            சொல்லுவது உண்டுஎனச் செவ்வி வேண்டி
            நின்றனன் பல்லாண்டு என்றவன் இறைஞ்ச
 
        35    அகன்மொழி தெரியும் அருமறைப் பொழுதும்
            மகள்மொழி அல்லது மற்றைய கேளா
            இயற்கையன் ஆதலின் பெயர்த்துப்பிறிது உரையான்
            வருக மற்றவன் வல்லிரைந்து என்றலின்
 
              ஆணை வேந்தன் அருங்கல நிதியம்
      40    பேணாது பிழைத்த காவ லாளன்
            திருத்தகை மார்பன்கு உரைப்பதுஒன்று உள்ளான்
            நின்றனன் இமைப்பிடைச் சென்றனன் உணர்த்தக்
 
              கோயிற்கு ஓதிய கோலம் உடைத்தாய்
            வாயிலும் தகைப்பும் வகைஅமைத்து இயற்றிய
      45    முளைக்கோல் பெருந்திரை வளைத்த வட்டத்து
            நிலாவெண் மாடமொடு உள்ளறை சூழ்ந்த
            உலாவும் மண்டபத்து உலாவுதல் இன்றி
            அங்கண் ஞாலத்து அழல்உமிழ்ந்து இமைக்கும்
            செங்கதிர்ச் செல்வனின் சீர்பெறத் தோன்றிச்
      50    சீயம் சுமந்த செம்பொன் ஆசனத்து
            ஆய்மணி அணைசார்ந்து அரத்தம் மீக்கோள்
            தாள்முதல் லசைத்துஓர் தாமரைக் கையன்
            இருந்த மன்னவன்கு எழுகோல் எல்லையுள்
            பொருந்தல் செல்லாது புக்கவன் இறைஞ்ச
 
        55    வண்ணமும் வடிவும் நோக்கி மற்றுஅவன்
            கண்ணி வந்தது கடுமை சேர்ந்ததுஎன்று
            எண்ணிய இறைவன் இருகோல் எல்லையுள்
            துன்னக் கூஉய் மின்னிழை பக்கம்
            மாற்றம் உரையென மன்னவன் கேட்ப
      60    இருநில மடந்தை திருமொழி கேட்டுஅவள்கு
            எதிர்மொழி கொடுப்போன் போல இறைஞ்சப்
 
              பின்னும் தானே மன்னவன் வினவ
            மறுமொழி கொடாஅ மம்மர் கண்டுஅவன்
            உறுமொழி கேட்கும் உள்ளம் ஊர்தர
      65    நெஞ்சின் அஞ்சாது நிகழ்ந்தது கூறுஎன்று
            ஆருயிர்க்கு அபயம் கோமான் கொடுப்ப
 
              எரியுறு மெழுகின் உருகிய முகத்தன்
            ஆர மார்பநின் அருள்வகை ஆம்கொல்
            கார்முகத்து எழுந்தது கடுவளி, வளிஎன
      70    நகைத்தொழில் அறியா நன்அகர் வரைப்பகம்
            புகைக்கொடி சுமந்து பொங்குஎரி தோன்றப்
            புறமதில் சேரியும் குறுகுதற்கு அரிதாக்
            காற்றும் எரியும் கலந்துடன் தோன்ற
            எப்பால் மருங்கினும் மப்பால் மலைக்குநர்த்
      75    தப்புதல் அல்லது மிக்குயல் காணேம்
 
              கூற்றும் அஞ்சுநின் ஆற்ற ஆணை
            உரைப்பவும் ஒழியாது தலைத்தலை சிறப்பநின்
            அடிநிழல் வட்டம் அடையத் தரூஉம்
            கடிஅரண் இன்மையின் கையறன்வு எய்தி
      80    வெம்முரண் வேழத்து வெஞ்சினம் அடக்கிய
            உள்முரண் அறாஅ வுதயண குமரனொடு
            உடன்பிடி ஏற்றல் உற்றனெம் ஆகித்
            தடம்பெருங் கண்ணியைத் தலைவயின் பணிந்துஇரந்து
            ஏற்றினம் ஏற்றலும் காற்றெனக் கடாஅய்
 
        85    எம்மொடு படாஅன் இந்நகர் குறுகான்
            தன்நகர்க் கெடுத்த தருக்கினன் ஆதலின்
            ஆயிரத்து ஐவர் காவல் காளையர்
            மாஇரு ஞாலத்து மன்னுயிர் உண்ணும்
            கூற்றெனத் தொடர வேற்றுமுன் விலங்கி
      90    வயவர் என்றியாம் வகுக்கப் பட்டோர்
            பயவர் அன்றிப் பணிந்தவர் தொலைய
            வென்றி எய்திக் கொன்றுபலர் திரிதரப்
            பின்றையும் நின்றியான் பிடிப்பின் செல்உழி
 
              அடுத்த காதல் அணங்கைத் தந்துஅவன்
      95    விடுக்கப் போந்தனென் மீண்டுஇது கூறுஎனத்
            தடக்கை கூப்பிநின் அடித்திசைக்கு இறைஞ்ச
            ஒழிந்துயான் வந்தனென் நிகழ்ந்ததை நினைப்பினோர்
            மாயம் போலும் காவல அருளென
 
              உரைத்த மாற்றம் உணரக் கேட்டே
     100     செருச்செய் நெடுங்கண் தீயெனச் சிவப்பப்
            பிரச்சோ தனன்எனும் பெரும்பெயர் விளக்கம்
            மகிழ்ச்சி எய்தி வத்தவன் தெளிந்த
            இகழ்ச்சி அளற்றுள் இறங்கிற்று இன்றெனச்
            சுற்ற மாக்களைச் சுடுவான் போலப்
     105     பொற்றார் மார்பன் பொங்குபு வெகுண்டு           
 
              முகைநகை முத்தொடு தகைமுடி தயங்க
            அருவரை அகலத்து ஆரம் புரளத்
            திருமுடி அண்ணல் தீப்படச் சீறி
            எழுஉறழ் திணிதோள் எடுத்தனன் ஓச்சிப்
     110     பொழிமணித் திண்தூண் பொறிபடப் புடைத்து
            மாற்றுச் சிங்கத்து மறக்குரல் கேட்ட
            ஏற்றுச் சிங்கத்தின் இடித்தெழுந்து உரறிக்
 
              கொடியணி தேரும் குதிரையும் யானையும்
            வடிவேல் இளையரும் வல்விரைந்து ஓடி
     115    எய்கணை இயற்கை இயற்றமை இரும்பிடி
            கையகம் புக்கது அன்றிஇவ் வையகத்து
            அறத்தோடு புணர்ந்த துறைப்புனல் ஆட்டத்து
            அற்றமும் பிறவும் ஒற்றுவன நோக்கி
            வள்ளி மருங்கின் வயங்குஇழைத் தழீஇ
     120     எள்ளி இறந்த இன்னா மன்னனைப்
            பற்றுபு தம்எனப் படையுறப் படுத்து
 
              ஞாலந் தரும்பொருள் இயற்பட நாடிய
            சாலங் காயனைத் தலைக்கை யாக்கப்
            பல்பொருள் பொதிந்த பயந்தெரி பனுவல்
     125     பரதகன் தன்னொடு பயந்தீர் நண்பின்
            மந்திர மாக்களும் அந்த ணாளரும்
            அகத்தால் குழீஇய அவையன் ஆதலின்
            முகைத்தார் வேந்தன்கு முகத்துஎழு பெருஞ்சினம்
            புனல்படு நெருப்பின் பொம்மென உரறி
     130     ஆறிய வண்ணம் அணிமுகம் நோக்கித்
            தெளிதகு கிளவி செவ்விதின் கேட்ப
 
              உளைவன செய்த உதயண குமரனைத்
            தளைவயின் அகற்றலும் கிளைவயின் பெயர்த்தலும்
            ஆர மார்பஅஃது யாவரும் அறிவர்
     135     வருமுலை ஆகத்து வணங்குகொடி மருங்கில்
            திருமகள் தன்வயின் தெரிந்தனை காணில்
            குலத்தினும் குணத்தினும் நலத்தகு நண்பினும்
             நிலத்தினில் நின்னொடு நிகர்க்குநன் ஆதலின்
            மேல்வகை விதியின் விழுமியோர் வகுத்த
     140    பால்வகை மற்றிது பழிக்குநர் இல்லை
            ஆறுஎன அருளா அண்ணல்மற் றதுநீ
            வேறுஎன அருளிய வேட்கை உண்டெனின்
            முன்னிலை முயற்சியின் அன்றி மற்றுஇனிப்
            பின்னிலை முயற்சியில் பெயர்த்தனம் தருதல்
     145     திருவளர் மார்ப தெளிந்தனை ஆகென
            ஒருபேர் அமைச்சன் உள்விரித்து உரைப்ப
 
              ஏறிநீர் வரைப்பின் எப்பொருள் ஆயினும்
            என்னின் அறிவோர் இல்லென மதிக்கும்
            மன்னருள் மன்னன் மனத்தில் தேறி
     150     இடத்தோள் அன்ன விடற்குஅருங் காதல்
            உரிமைத் தேவியர்க்கு ஒருமீக் கூரிய
            பட்டத் தேவிக்குப் பட்டதை எல்லாம்
            ஏனோர் உணர்த்துதல் நீக்கிக் கோமான்
            தானே உணர்த்தும் தன்மையன் ஆகி
 
       155     அரசு கொற்றத்து அருங்கடம் பூண்ட
            முரசுஎறி வள்ளுவ முதியனைத் தரீஇக்
            கார்பனி துளித்துக் கதிர்கண் புதைஇய
            வார்பனி மாலைநம் வளநகர் புகுதல்
            புனலாடு விழவில் பொலிவுஇன்று ஆதலின்
     160     கோலம் குயிற்றிக் கோடணை இயற்றிக்
            காலை புகுதல் காவலன் பணிஎனத்
            துறைநகர் அறியப் பறைஎடுத்து அறைகஎனச்
 
              செல்சுடர் அந்தி நல்லியல் ஓம்பிப்
            பள்ளிக் கோயிலுள் பல்இயம் எடுப்ப
     165     ஆய்பூஞ் சேக்கையுள் அருமணி சுடரப்
            பாயல் கோடல் பலர்அறி வுறீஇய
            கைக்கோல் இளையரும் காஞ்சுகி முதியரும்
            அகக்கோள் ஆளரொடு அருமறை யாகப்
            பண்டுஇவண் புகூஉம் பொங்குபுனல் விழவுஅணி
     170     அன்றுஅவண் இலனாய் ஆவித்து இழிந்த
            இந்திர குமரன் இயற்கையன் ஆகிக்
            கஞ்சிகைச் சிவிகையுள் கரணத்து ஒடுங்கி
 
              வேண்டுஇடம் தோறும் தூண்டுதிரிக் கோளீஇக்
            கைவயில் கொண்ட நெய்அகல் சொரியும்
     175     யவனப் பாவை அணிவிளக்கு அழலத்
            திருந்துசா லேகமொடு பொருந்துகதவு ஒற்றிப்
            பளிக்குமணி இழிகைப் பவழக் கைவினைப்
            புலிக்கால் அமளிப் பொங்குபட்டு அசைஇ
            எலிப்பூம் போர்வையொடு மயிர்ப்படம் விரித்துக்
     180     கலத்தின் அல்லது காலின் வாரா
            நலத்தகு பல்படை அழற்றல்கு உரியவை
            ஆய்வனர் படுத்த அம்பூம் பள்ளியுள்
 
              பெருமூ தாட்டியர் பேணுவனர் சூழத்
            திருமா தேவி அருநகர் உற்ற
     185     ஆகுலப் பூசலும் அழலும் மற்றிவை
            காவலன் அறிந்த கருத்தினன் ஆகிஎன்
            வாசவ தத்தையை வலிதில்கொண்டு ஏகினும்
            தீது நிகழினும் ஏதம் இல்என
            நினைப்புஉள் உறுத்த நெஞ்சினள் ஆகி
     190     மனத்துள் ஓர்க்கும் மம்மர் தீர
            அருங்கடி காவலர் அஞ்சினர் எதிர்கொள
            இருஞ்சின வேந்தன் பெருஞ்சினம் அகற்றி
            வாயிலுள் வரும்இடத்து எதிர்கொளல் பொருட்டாக்
            கோயிலுள் இருந்த கோப்பெருந் தேவிக்குப்
உரை
 
       195     பொலம்பூங் குடத்தில் போற்றித் தந்த
            தலைப்பூ நறுநீர் சிறப்பு முந்துறீஇத்
            தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து
            வெண்முகில் பொடிக்கும் வெய்யோன் போலக்
            கைபுனை சிவிகையில் கஞ்சிகை நீக்கி
     200     அம்பூம் தானை அடிமுதல் தடவர
            வெம்போர் வேந்தன் மெல்என இழிந்து
 
              நெறிவெண் திங்கள் அகடுஉறத் தழுவும்
            கடிவெண் மாடத்துக் கன்னிஅம் கடிமனை
            இல்லாத் தன்மையில் புல்எனத் தோன்றும்
     205     பையுள் செல்வத்துக் கையறவு எய்திப்
            பொன்னும் மணியும் புகர்அறப் புனைந்த
            தொன்நாடு அமரத் துணைமுதல் பொறித்த
            தோடுஅமை கொளுவத்து ஊடுற வளைஇத்
            தாழ்காழ் நகையொடு தாமம் துயல்வரும்
     210     மாசுஇல் திண்நிலை வாயில் பேர்அறைப்
            பள்ளி மண்டபத்து ஒள்ஒளி கிளரத்
            திருவுகொள் உரோணி உருவுநலம் விரும்பிய
            விரிகதிர்ச் செல்வனின் வியப்பத் தோன்றிப்
 
              பாயல் கொள்ளான் பட்டத் தேவி
     215     சாயல் செல்வத் தலைஅளித்து ஓம்பி
            அணிஇயல் அமிர்தம் மாற்றிய பின்அவள்
            தெளியக் காட்டும் தெரிவினன் ஆகிப்
            பூங்கொடி புனைந்த வீங்குமுலை ஆகத்து
            வாங்கமைப் பணைத்தோள் வாசவ தத்தையை
     220     நல்லியாழ் நவிற்றிய நளிமணிக் கொடும்பூண்
            உறுவரை மார்பின் உதயண குமரன்
            மறுவில் தொன்று மனைவளம் தரூஉம்
            செல்வி ஆகச் சிறப்பொடு சேர்த்திஅவன்
            நாட்டகம் புகுத்தற்கு வேட்டது என்மனன்
     225     ஒண்குழை மடவோய் உவத்தி யோஎன
 
              அருமையில் பெற்றநும் அடித்தி தன்வயின்
            திருமணச் சூழ்ச்சி எழுமைத்து ஆயினும்
            ஏதம் இன்றால் இன்பம் பயத்தலின்
            யானைக்கு எழுந்த வெஞ்சினம் அடக்கிநின்
     230     தானைத் தலைத்தாள் தந்த ஞான்றவன்
            நிலையில் திரியா இளமைக் கோலம்
            உயர்பில் திரியாது ஒத்துவழி வந்த
            மகளுடைத் தாயர் மனத்துஅகம் புகற்றலின்
            யானும் அன்றே பேணினென் அடிகள்
     235     மானம் இல்லை மற்றவன் மாட்டென
 
              உவந்த ஒள்ளிழை உள்ளம் நோக்கி
            நிகழ்ந்தது இற்றென நெருப்பு நுனைஉறீஇச்
            சுடுநா ராசஞ் செவிசெறித் தாங்கு
            வடிவேத் தானை வத்தவன் தன்னொடு
     240    பாவை பிரிவினைக் காவலன் உணர்த்தலின்
 
              இசைகொள் சீறியாழ் இன்னிசை கேட்ட
            அசுண நன்மா அந்நிலைக் கண்ணே
            பறைஒலி கேட்டுத்தன் படிமறத் ததுபோல்
            நீலத்து அன்ன கோலத் தடம்கண்
     245     முத்துறழ் ஆலி தத்துவன தவழப்
            பெறலரும் என்மகள் பிரிந்தனன் நம்மெனக்
            கூறிய கிளவி கூற்றுவன் இமிழ்த்த
            பாசம் போலப் பையுள் செய்ய
            அலமந்து அழூஉம் அஞ்சில் ஓதியை
 
       250     முகைமலர்ப் பைந்தார் குழைய முயங்கி
            மடவை மன்ற மடவோய் மண்மிசை
            உடைவயிற் பிரியா உறைநரும் உளரோ
            இற்றும் கேண்மதி முற்றுஇழை மகளிர்
            தத்துநீர்ப் பெருங்கடல் சங்குபொறை உயிர்த்த
     255     நித்திலத்து அன்னர் நினைந்தனை காண்என
            ஆர்வக் காதலன் காரணக் கட்டுரை
            இகப்ப விடாஅன் தெளிப்பத் தேறிக்
 
              கயல்புரை கண்ணி இயல்புகிளந்து ஏத்திப்
            பொன்அணி நகரமொடு தம்மனை புலம்ப
     260     வான்மதி இழந்த மீன்இனம் போலப்
            பொலிவின்று ஆகிப் புல்என் கோலமொடு
            கலாவேல் காவலன் மடமகள் காணாது
            விலாவித் தன்றால் விழவுஅணி நகர்என்