46. உழைச்சன விலாவணை
 

இதன்கண்: உதயணமன்னன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு சென்று செய்தியறிந்தவுடன் அங்குக் குழுமியிருந்த ஏவன் மாக்களும் பிறரும் வருந்தி அழுதல் கூறப்படும்.
 
              திருநகர் அகவயின் திறன்மீக் கூரி
            ஒருதுணை வயவர் உள்வழித் திரிதர
            ஒடிவில் தோற்றத்து உதயணன் ஊரும்
            பிடிவழிப் படரும் பேணா மள்ளரை
        5  அதிரத் தாக்குதற்கு அமைக்கப் பட்ட
            பதிநிலம் தோறும் பதிந்துமுன் இருந்த
            ஐந்நூற்று ஐம்பத்து ஐவர் ஆடவர்
            செந்நூல் பத்திச் சேடகக் கையர்
            மன்னிய மாதிரம் மறுவின்று மயங்கி
       10    மின்உமிழ்ந் ததுபோல் வீசிய வாளினர்
            கரணம் நுனித்த அரணக் காப்பினர்
            பின்சென் மாந்தரை முன்சென்று விலங்கி
 
              அரதனம் நாகரின் சொரிதரு வெகுளியர்
            ஏற்றோர்த் தாக்கிக் கூற்றுஉறை உலகினுள்
       15   உறைகுவிர் ஆயின் குறுகுமின் விரைந்தெனச்
            சிறைஅழி புனலில் சென்றுமேல் நெருங்கி
            வேலும் கணையமும் வீழினும் இமையார்
            வீரியத் தறுகணர் வீக்கிய கச்சையர்
            ஆர்வ லாளர் ஆர்த்தனர் எறிய
 
         20    ஓங்குமடல் பெண்ணைத் தீங்குலைத் தொடுத்த
            விளைவுறு தீங்கனி வீழ்ச்சி ஏய்ப்பத்
            தளைஅவிழ் தாமமொடு தலைபல புரளவும்
            வேகப் புள்ளின் வெவ்விசைக்கு உலந்த
            நாகப் பிறழ்ச்சியின் தோள்முதல் துணியவும்
       25    அஞ்செம் சாந்தம் எழுதிய அகலம்
            ஒண்செங் குருதிப் பைந்தளி பரப்பவும்
            குசைத்தொழில் கூத்தன் விசைத்துநனி விட்ட
            பொங்குபொறித் தாரையில் தங்கல்செல் லாது
            குருதிச் செம்புனல் தவிராது எக்கவும்
 
         30    மிகைசெலற்கு எழுந்த வேக வெவ்அழல்
            அகவயின் சுடுதலின் அவிந்த ஆற்றலர்
            நிலத்தொடு நேரா நெஞ்சினர் போலப்
            புலக்கமழ் புண்ணர் விண்ணிடை நோக்கிக்
            கொலைப்பெரும் கூர்வாள் கோடுற அழுத்தலின்
       35    பொறிப்படு வேங்கையின் குறிப்பிலர் குரங்கவும்
 
              மத்தகத்து இழிதரு நெய்த்தோர்ப் பெரும்புனல்
            மொய்த்துமுகம் புதைதலின் முன்அடி காணார்
            மடித்த செவ்வாய் அழுந்தக் கவ்விப்
            பிடித்த வாளொடும் பிறழ்ந்தனர் கவிழவும்
       40    கையொடு துமித்த வைவாள் வாய்மிதித்து
            அற்ற அடியினர் செற்றத்தில் கழுமிக்
            கற்ற கரணம் அற்ற ஆக
            உரத்தகை மழுங்கி உள்ளடி இன்றி
            மரக்கால் கூத்தரின் மறிந்தனர் விழவும்
 
         45    மடத்தகை மகளிர் மருங்குல் கடிந்த
            முலைப்பூண் அழுத்திய மொய்சாந்து அகலம்
            வாள்முகம் அழுத்தலின் வயவுநடை சுருங்கிச்
            செந்நிறக் குருதியின் பைந்நிணங் கெழீஇச்
            செயிர்த்த நோக்கினர் செங்கண் ஆடவர்
       50    வியர்த்த நுதலினர் வீழ்ந்தனர் அவியவும்
 
              சுடரும் வாளினர் சோர்நிணர் இழுக்கி
            அடர்பூண் அகலத்து அரும்படை உற்றுக்
            குடர்கள் தாக்கக் குழிப்படு களிற்றின்
            படர்கூர் எவ்வமொடு பதைத்தனர் பனிப்பவும்
 
         55    தலையும் தடக்கையும் தாளும் உடம்பும்
            கொலைஅமை வில்லும் கூர்வாய்ச் சுரிகையும்
            வேலும் ஈட்டியும் கோலும் குந்தமும்
            சேடக வட்டமும் செந்நூல் பாரமும்
            தண்டும் வாளும் தளைஇடு பாசமும்
       60    பொங்குமயிர்க் கிடுகும் புளகத் தண்டையும்
            அரக்குவினைப் பலகையும் நிரைத்தவெண் குடையும்
            கூந்தல் பிச்சமும் கோணா வட்டமும்
            வாங்குகைத் தறுகண் வாரணப் பிளவும்
            பரவைச் செந்திரை விரவுபு முடுகி
       65    அன்ன பிறவும் முன்முன் உருட்டிக்
            கைந்நவி லாளர் காடுஎறிந்து உழுத
            செந்நிலம் மருங்கில் செஞ்சால் சிதைய
            மரம்சுமந்து இழிதரும் கடும்புனல் கடுப்பக்
            குருதிச் செம்புனல் போர்க்களம் புதைப்ப
 
         70    அடங்காத் தானை அவந்தியர் இறைவற்கு
            ஆருயிர் அன்ன அரும்பெறல் மடமகள்
            வால்வளைப் பணைத்தோள் வாசவ தத்தையை
            வலிதில் கொண்ட வத்தவர் இறைவனை
            நலிதற்கு எழுந்த நண்ணா இளையரைக்
       75    கடல்விலக்கு ஆழியில் கலக்கம் இன்றி
            அடல்விலக் காளர் ஆர்த்தனர் அடர்ப்பவும்
 
              உயிரொன்று ஆகிய செயிர்தீர் காதல்
            துணைநலத் தோழன் துயரம் அறுத்தற்கு
            இணைமலர்த் தடங்கண் இமையகத்து ஒடுங்கிய
       80    காட்சியிற் கனையும் வேட்கையன் ஆகி
            விம்முறு விழுநகர் வீதியில் கொண்ட
            வெம்முறு படிவம் நீக்கி யூகி
            பிணம்படு பெருங்காட்டுப் பேயும் உட்கும்
            அணங்கரும் தானத்து அஞ்சுதக இரீஇத்
       85    தாழி படுத்துத் தமரையுந் தெளியான்
            பூழி படுத்த சாதனை அமைவில்
            கற்படை போழினுங் கதுவாய் போகாது
            எற்புடம்பு அறுக்கும் இயற்கைத்து ஆகிக்
            கொல்புனைந்து இயற்றிய கொலையமை கூர்வாள்
       90    வாய்வயின் தெய்வம் வணங்குபு கொண்டு
 
              தீவயிறு ஆர்த்திய திறலோன் போலநின்
            காய்வுறு கடும்பசி களைகுவென் இன்றுஎனைக்
            காத்தல் ஓம்பென வாற்றுளி கூறிப்
            பத்தி குயின்ற பல்வினைக் கம்மத்துச்
       95    சித்திரச் சேடகம் செறியப் பற்றி
            உற்றோன் உற்ற உறுகண் தீர்க்கென
            கற்றோய் கலிங்கம் கட்டிய கச்சையன்
            ஊழி இறுதி உட்குவரத் தோன்றி
            வாழுயிர் பருகும் வன்கண் செய்தொழில்
      100    கூற்றம் போல வேற்றவர் முருக்கிக்
 
              கடிகமழ் நறுந்தார்க் காவலன் மகளைப்
            பிடிமிசைக் கொண்டவன் பெயரும் நேரத்து
            முடிமுதல் அண்ணலை முந்தினன் குறுகித்
            தொடிமுதல்திணிதோன் தோன்ற ஓர்ச்சி
      105    வலமுறை வந்து பலமுறை பழிச்சி
 
              நும்பொருட்டு ஆக நெடுந்தகை எய்திய
            வெம்பெருந் துயரம் விடுத்தனை ஆகிக்
            காட்டகத்து அசையாது கடுகுபு போகி
            நாட்டகம் புகுக நண்புஇடை இட்ட
     110    இரும்பிடி நினக்குஇது பெருங்கடன் மற்றுஎனப்
            பிடிஓம் படுத்துப் பெருமை எய்திக்
            குடிஓம்பு இயற்கைஎம் கோமகன் எழுகென
            வரத்தொடு புணர்ந்த வாரணக் காவல்
            திறத்தொடு கொடுத்துச் செய்பொருள் கூறிப்
      115    புறக்கொடுத்து ஒழியும் போழ்தில் திறப்பட
 
              ஒருநாட்டுப் பிறந்த ஆர்வம் ன்றியும்
            கருமக் கிடக்கையும் கலங்காச் சூழ்ச்சியும்
            மறைபுறப் படாமையும் அறைஉண் ணாமையும்
            வாசவ தத்தைக்கு வலித்துணை ஆய
      120    தாய்மையும் தவமும் வாய்மையும் நோக்கி
            விடுதற்கு அருமை முடியக் கூறி
            வடிவும் வண்ணமும் படிவமும் பிறவும்
            அருந்தவ மகளைத் திருந்துமொழித் தோழன்
            உணர எழுதிய ஒலையும் வாங்கிப்
      125    புணர அவள்வயின் போக கொண்டுஎன
            ஊகந்த ராயன்கு ஆக நீட்டித்
 
              தமரது வென்றியும் தருக்கும் நிலைமையும்
            அரிய தோழன் சூழ்ச்சியது அமைதியும்
            எய்திய இன்பமும் கைஇகந்து பெருக
      130    வையக வரைப்பின் வத்தவர் இறைவன்கு
            எவ்வம் தீர்க்கென இமையோர் இயற்றிய
            தெய்வத்து அதன்ன திண்பிடி கடைஇ
            மன்னிய தோற்றமொடு வடகீழ்ப் பெருந்திசை
            முன்னிய பொழுதில் முன்ஆங்கு கூறிய
 
        135    வணங்குசிலை கொடுத்த வலிகெழு வராகன்
            இரும்பிடி கடாவலன் இவன்என எண்ணி
            அரும்படை யாளர் ஆருயிர் ஓம்பி
            நயந்துகை விடாஅன் பின்செல் வோனை
 
              எறிபடைத் தானை ஏயர் பெருமகன்
      140    உறுபடை யில்லா ஒருதிசை காட்டி
            ஆற்றலும் வென்றியும் அறிவும் மூன்றும்
            கூற்றுத்திறை கொடுக்கும் கொற்றத் தானை
            அவந்தியர் பெருமகன் அடிமுதல் குறுகிப்
            பயந்துதான் வளர்த்த பைந்தொடிப் பாவையைச்
      145    சிறையிவன் என்னும் சிந்தையின் நீக்கிக்
            குறையுடை உள்ளமொடு கொள்கஎனத் தந்துதன்
            காதலின் விடுப்பப் போகுதல் வலித்ததுஎன்
 
              வணக்கம் இன்றியான் செய்தனன் தனக்கெனக்
            கூறினை சென்ம்எனத் தேறக் காட்டிப்
      150    படிறுஇடை மிடைந்த பணிகோள் ஈயா
            ஆன்பால் செந்தேன் அணியுறு கிளவி
            அடுதிறல் ஆற்றல் அறியக் கூறப்
            பிடிவழிப் படர்ந்து பெயர்ந்தவன் நிற்பத்
 
              தொடியுடைத் தடக்கையின் தொழுதனள் இறைஞ்சி
      155    மீட்டுஅவன் போக்கும் மாற்றம் கேட்டே
            மணிமுதல் கொளீஇய மாண்பொன் சந்தின்
            எரிமணி இமைக்கும் இலங்குபொன் கோணத்துக்
            கதிர்நகைக் கோவைக் கைவினைப் பொலிந்த
            மத்தகப் புல்லகம் நக்குபு கிடந்த
      160    திலகத் திருநுதல் வியர்பொடித்து இழியக்
            கலக்குறு சில்நீர்க் கருங்கயல் போல
            நிலைக்கொளல் செல்லா நீர்சுமந்து அளைஇப்
            பிறழ்ச்சியொடு உலாவும் பெருமதர் மழைக்கண்
            அச்சம் நோக்கின் நச்செயிறு அணிந்த
      165    நாகப் பிள்ளை அங்கண் பிறந்த
            ஆவி போல வைதுவெய்து உயிராப்
            பருவரல் உறாஅப் பையுள் நெஞ்சினள்
            கண்திரள் வேய்த்தோள் காஞ்சன மாலையைக்
            கொண்டுஇழிக என்னும் குறிப்பினள் போலச்
      170    செவ்வி இன்றிச் சேயிழை புலம்ப
 
              எள்ளியது தீர உள்ளியது முடித்த
            உலவாக் கேள்வி உதயண குமரனைத்
            தொகுவிரல் கூப்பித் தொழுவனள் ஆகித்
            தேன்பொதி செவ்வாய்க் காஞ்சனை உரைக்கும்
      175    பைந்தளிர் பொதுளிய பனிமலர்க் காவில்
            செந்தளிர்ப் பிண்டிச் சினைதொறும் தொடுத்த
            பின்னுறு பொன்ஞாண் பெருந்தொடர் கோத்த
            பண்ணுறு பல்வினைப் பவழத் திண்மணை
            ஊக்கமை ஊசல் வேட்கையின் விரும்பினும்
      180    திருநலத் தோழியர் சிறுபுறம் கவைஇப்
            பரவை அல்குல் பல்காசு புரளக்
            குரவை ஆயம் கூடித் தூங்கினும்
            தன்வரைத்து அல்லா விம்முறு விழுமமொடு
            நோய்கூர்ந்து அழியும்எம் கோமகள் நடுங்க
      185    எறிவளி புரையும் இரும்பிடி கடைஇப்
            பின்வழிப் படரும்எம் பெரும்படை பேணாய்
            என்வலித் தனையோ இறைவ நீஎன
 
              நடுக்கம் வேண்டா நங்கையும் நீயும்
            அடுத்த காவலன் இவளொடும் அமர்ந்து
      190    விடுத்தமை உணரா வீரிய இளையர்
            தருக்கொடு வந்து செருச்செயல் துணிந்தனர்
            பணிவகை இன்றிப் பண்டும் இன்னதை
            அணிஇழை மடவோய் துணிகுவென் ஆயின்
            அரியவும் உளவோ அஞ்சல் ஓம்புஎனத்
 
        195    தெரிவனன் கூறிய தெளிமொழி கேட்டே
            அன்னது ஆகிய அருள்உண் டாம்எனின்
            அஞ்சொல் பேதாய் அதுஇது வாம்எனப்
            பின்னிருங் கூந்தலொடு பிறழ்கலம் திருத்திக்
            கலக்கம் நீங்குஎனக் காஞ்சனை தெருட்டி
      200    நலத்தகை மாதரும் நனிநடுக்கு ஒழிய
            வலத்தினும் வலியினும் வத்தவன் கடாவத்
 
              திருமா தேவி பெருநகர் வரைப்பினும்
            செருமாண் வென்றிச் செல்வன் பக்கமும்
            மையார் கண்ணியை ஒய்யான் ஆகிக்
      205    கையிகந் தனன்ஆல் காவலன் மகன்எனக்
            காற்றினும் எரியினும் மேற்ற ஆர்ப்பினும்
            நாற்றிசை மருங்கினும் நண்ணல் செல்லார்
            பகலிடம் மருங்கில் பகுதியைக் கெடுத்த
            அகலிடம் போல அச்சம் எய்திப்
      210    படைமலர்த் தடம்கண் பனிசுமந்து வீழ
            இடைமுலைக் கிடந்த வேக வல்லி
            முற்றுறு கழங்கொடு முதல்அகடு பொருந்திப்
            பற்றிடம் பெறாது பாம்பெனப் பதைப்ப
            வெருவுறு மஞ்ஞையின் தெருமந்து இகலிப்
      215    பழிப்பில் கம்மியன் பசும்பொனில் புனைந்த
            கொடிப்பல விரீஇய கொழுந்துபடு கோலத்துக்
            கொட்டம் கொண்டோர் கட்டழல் உயிரா
            விட்டுஅகன் றனையோ வேந்தனொடு இன்றுஎமை
            மட்டுவார் கோதாய் மறந்துஎன மாழ்கவும்
 
        220    சிறுபுறம் கவைஇச் சீப்பின் வாரிக்
            குறுநெறிக் கொண்ட கூழைக் கூந்தலுள்
            நறுமலர்க் கோதை நான்றுவந்து அசைஇ
            வடுப்போழ்ந்து அன்ன வாள்அரி நெடுங்கண்
            குமிழ்த்துஎழு வெம்பனி கோங்கரும்பு ஏய்ப்ப
      225    முகிழ்த்தல் முன்னிய முலைமுதல் முற்றத்து
            வரித்த சாந்தின் வண்ணம் சிதைப்பச்
            செறிதொடர் கொளீஇய சித்திரக் கம்மத்துப்
            பொறிஅமை புடைசெவிப் போழ்வாய் மணிக்கண்
            அருங்கயல் அடைப்பை அங்கையின் ஏந்திப்
      230    பெருங்கண் பேதையர் இருந்துயர் எய்தவும்
 
              மறுஅகத்து அடக்கிய மதியம் போலச்
            சிறுமுகச் சிகழிகை புடைமுதல் புதைஇய
            மல்லிகை நறுஞ்சூட்டு வெள்ளிதின் விளங்கஅதன்
            ஊர்கோள் ஏய்ப்பச் சூழ்புடன் வளைஇய
      235    செம்பொன் பட்டம் பின்தலைக் கொளீஇச்
            சில்லென் கோலத்துச் சிறுகொடி மருங்கில்
            தனிமுத்து அணிந்த தண்சாந்து ஆகத்துப்
            பனிமுத் தாலி படைக்கண் கால
            வெள்ளிப் போழை உள்அகத்து அடக்கி
      240    மணியினும் பொன்னினும் மருப்பினும் வல்லவர்
            அணிபெறப் புனைந்த அமர்பெறு காட்சித்
            தின்மை செறிவில் சேடக மகளிர்
            தன்மை கடுக்கும் தானைக் கச்சையர்
            வம்புநெருக்கு உற்ற பொங்குஇள முலையர்
      245    குவளைக் கோதை கொண்ட கூந்தலர்
            தவளைக் கிண்கிணி ததும்புசீ றடியர்
            விளக்குறு மணிக்கை முகட்டுமுதல் வளைத்த
            பொங்குமயிர்க் கவரிப் பைந்தொடி மகளிர்
            எரியுறு மெழுகின் உள்ளஞ் சோரப்
      250    பரிவுறு நெஞ்சினர் பையாந்து ஏங்கவும்
 
              கல்மிசை மருங்கில் மின்மிளிர்ந் ததுபோல்
            திடர்சேதி ஆகத்துச் சுடர்மணி பிறழ
            முத்துஉறழ் ஆலி தத்துறு கண்ணொடு
            பனிப்புறு கிளவியில் பக்கம் நோக்கி
      255    மங்கலச் செப்பின் மாண ஏந்திய
            குங்குமம் கொண்ட கூன்வழுக் குறவும்
 
              அருங்கலம் துரைஇப் பெருங்கலம் எல்லாம்
            பேணி அணிந்த நாணுக் கோலத்துப்
            பையர அல்குல் பவழப் பல்காசு
      260    கைபுனை கலிங்கத்து ஐதுகலந்து ஒன்றி
            நீலத் தெண்ணீர் நீந்தும் ஆமையின்
            கோலக் குறுக்கைவாள் கூட்டுள் கழீஇப்
            பாலிகை பற்றிய குறள்வழிப் படரவும்
 
              மணிகிடந்து இமைக்கும் மாட மாநகர்
      265    அணிகிடந்து இமைக்கும் அகன்பெருங் கோயிலுள்
            காப்புற வகுத்த கன்னியம் கடிமனை
            யாப்புற வகுத்த போர்ப்பெருங் கோணத்துக்
            கழறுகால் அமைத்துக் கண்கன் பரப்பின்
            நிழல்தரு படுகால் நீரதில் புனைந்த
      270    கல்பிறங்கு அடுக்கத்து நற்குறி யாவையும்
            படுகல் சுரமும் பாறையும் படுவும்
            நடுகல் அடுக்கலும் நறும்பூம் சாரலும்
            தேனுடை வரையும் கானகக் குறும்பும்
            அருவி அறையும் உருவ ஏனலும்
 
        275    குழியும் குவடும் வருநீர் அசும்பும்
            வள்ளியும் வகுந்துஞ் சுள்ளியுஞ் சூரலும்
            வழைசேர் வாழையும் கழைசேர் கானமும்
            நாகமும் நறையும் ஊகமும் உழுவையும்
            கடமான் ஏறுங் கவரியும் கரடியும்
      280    மடமான் பிணையும் மஞ்ஞையும் அகன்றிலும்
            விடமா நாகமும் வேக யானையும்
            கழனியும் பொய்கையும் பழனப் படப்பையும்
            தெரிமலர்க் காவும் உருவின ஆக
            அமைக்கப் பட்டசெயற்கருஞ் செல்வத்து
      285    மைதவழ் சென்னிக் கைசெய் குன்றொடு
 
              நால்வகை நிலனும் பால்வகுத்து இயற்றி
            அறவை அல்லது பிறபுகப் பெறாஅ
            வளமரம் துறுமிய இளமரக் காவினுள்
            கொண்ட கோலமொடு குரவை பிணைஇ
      290    வண்டல் ஆடும் தண்டாக் காதல்
            எம்மையும் உள்ளாது இகந்தனை யோஎன
            மம்மர் கொண்ட மனத்தர் ஆகித்
            தோழியர் எல்லாம் பூழியுள் புரளவும்
 
              அம்பொன் வள்ளத்து அமிழ்துபொதி அடிசில்
      295    கொம்பின் ஒல்கிக் குறிப்பில் கொள்ளாய்
            செம்பொன் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப
            மணிநிலம் மருங்கில் பந்தொடு மறலிநின்
            அணிவளைப் பணைத்தோள் அசைய ஆற்றாய்
            இன்தீங் கிளவி ஒன்றிரண்டு மிழற்றிப்
      300    பண்சுவைத்து ஒழிந்து பால்இல் தோல்முலை
            ஒண்முக விரலில் கண்முகம் ஞெமிடி
            மையார் நெடுங்கண் மாலை யாமத்துப்
            பையாந்து பொருந்திப் பள்ளி கொள்வோய்
            காதல் காளை கானத்து ஒய்ப்பப்
      305   போதல் கண்ணே புரிந்தனை யோஎனச்
            செவிலித் தாயர் அவலித்து அழவும்
 
              கற்ற மந்திரி காட்டவும் காணாது
            பெட்டாங்கு ஒழுகும் பெருமகன் போலவும்
            முறைமையில் தேயும் நிறைமதி நீர்மை
      310    நண்புகொள் ஒழுக்கின் நஞ்சுபொதி தீஞ்சொல்
            வளிஇய மடந்தையைத் தெளிவனன் ஒழுகி
            வெறுக்கை இன்மையில் துறக்கப் பட்ட
            இளையவன் போலவும் கிளைஞரும் பிறரும்
            கண்டவர் எல்லாம் கைஎறிந்து நகூஉம்
      315    கம்பலைப் பெரும்பழி எய்திய காவலன்
            வம்ப மன்னனை வழிதெளிந் தனன்என
            வெண்றரை சூழ்ந்த தண்ணுமைப் பறைதலைக்
            காஞ்சுகி முதியர் சாய்ஞ்சுஅஞர் எய்தலும்
 
              பொன்அணிப் பாவை போகிய புணர்ப்புஇன்று
      320    தன்னின் ஆகிய தன்மைத்து என்று
            தண்டார் வேந்தன் கொண்ட காலை
            விடுத்தற்கு அரிதென நடுக்கம் எய்தி
            ஓங்கிழ ஒழுக்கின் உயர்ந்தோர்ப் பேணிச்
            சாங்கியந் தாங்கிய சால்புஅணி படிமை
      325    வருமதி நுனித்த பெருமூ தாட்டி
 
              வேக வேந்தன் வெஞ்சமம் முருக்கிப்
            போக வேந்தனைப் போகப் பண்ணிப்
            பொருபடை பரப்பி உருமறைந்து உழிதரும்
            யூகி உள்வழி ஒற்றுநன் எய்தி
      330   ஆகுபொருள் ஓலையின் இருவரும் அறிவுற்றுக்
            கண்கூடு எய்தும் காலம் கூறி
            மண்கூட் டாளன் மனைவயின் மறையவும்
 
              இன்னோர் பிறரும் மம்மருள் மயங்கிய
            உழைக்கல மகளிரும் இழைப்பிரிந்து அரற்றவும்
      335   பேராறு மடுத்த பெருங்கடல் போல
            ஓசை அறியாப் பூசலும் புலம்பும்
            ஊரக மருங்கில் கூர்எரி கொளுவ
            எதிர்த்த மாந்தர் இன்னுயிர் இறுதியும்
            கதிர்த்த முறுவல் கன்னியைத் தழீஇ
      340   வத்தவன் அகற்சியும் அவ்வழிச் செலவும்
            வித்தக குமரர் வீழ்ச்சியும் பிறவும்
            ஒத்தவை உணர்ந்தும் உற்றுறைக்கு உரையார்
            பொய்ப்பொருள் ஆயினும் மெய்ப்பொருள் கண்ணும்
            உய்வகை இல்லை வெய்யோன் மாட்டுஎன்று
      345   அறிந்தோர் அறிந்தோர் செறிந்தனர் ஆகி
            வெய்துஉறும் விழுமொடு விம்மம் கூரச்
            செய்வதை அறியார் திரிவரால் பலர்என்.