56. வென்றி யெய்தியது
 

இதன்கண்: உதயணனை அணுக அஞ்சித் தொலைவிலேயே அவனைச் சூழ்ந்துநின்ற வேட்டுவர் தம்முள் ஒரு முதுவேடன் கூறிய படி உதயணனைச்   சூழ்ந்துள்ள இடங்களிலே தீக்கொளுவி விடுதலும், உதயணன் பின்னர்ப் புறம்போந்து அவருடன் போர் செய்தலும், போரின்கண் உதயணன் வில் நாணற்றுப் போதலும், பின்னர் வேறிடத்தே சென்று அவர் தன்மேல் விடும் கணைகளை நாணற்ற வறிய வில்லாலேயே ஒருவாறு தடுத்து நிற்புழி  அவ்வேடர்களாலே கைப்பற்றப்படுதலும், பின்னர் அவ்வேடரை நயம் படு வஞ்சக மொழியாலே தம்மை நலியாதபடி செய்தலும், படை கொணரச் சென்ற  வயந்தகன் செயலும், அவன் படையோடு வருதலும், அப்படை கண்டு வேடர் தோற்றோடுதலும் பிறவுங் கூறப்படும்.
 
              தெரிவுறு சூழ்ச்சியர் செய்வதை அறியார்
            ஒருவன் ஆம்பலர் ஒழிவம்என் னாது
            விசையுடை வெங்கணை வில்தொழில் நவின்ற
            அசைவி லாளள் அழிக்கவும் பட்டனம்
        5   உரைமின் ஒல்லென உறுவது நோக்கிக்
            கருவினை நுனித்து வருவினை ஆண்மைப்
            புள்ளுணர் முதுமகன் தெள்ளிதின் தேறி்
            இளையவர் கேட்க இற்றென இசைக்கும்
            கிளையுடைப் பூசலோடு முளைஅரில் பிணங்கிய
       10   முள்அரை இலவத்து உள்ளவர் இருப்பக்
            கேள்இழுக்கு அறியாத் தாள்இழுக்கு உறீஇயினிர்
            கோள்இமிழ் கனலி சூழ்திசைப் பொத்திப்
            புகைஅழல் உறீஇப் புறப்படுத்து அவர்களை
            நவையுறு நடுக்கம் செய்தல் உணரீர்
       15    கள்ளம் இன்றிக் கட்டாள் வீழ்த்த
            வெள்ளை வேட்டுவீர் புள்எவன் பிழைத்ததுஎன்று
            உள்அழிந்து அவர்கட்கு உறுதி கூறக்
 
              கணையொடு பிடித்த கைக்கோல் அரணிப்
            புடையிடு பூளைப் பூப்புற மடுத்துப்
       20    பிசைந்த சிறுதீப் பெருக மூட்டி
            இசைந்த முளரி எண்திசைப் பக்கமும்
            வேனல் பேர்அழல் கானவர் கொளுத்தி்
            நோவக் கூறிச் சாவது அல்லது
            போதல் பொய்க்கும் இனிஎனப் போகார் 
       25    அரிமா வளைந்த நரிமாப் போல
            இகல்முனை வேட்டுவர் இடுக்கண் செய்யப்
 
              புகைமிகு வெவ்அழல் பூம்பொழில் புதைப்பக்
            கான வெந்தீக் கடும்புகைப் பட்ட
            மானவர் பிணையின் மம்மர் எய்தித்
       30    தளைஅவிழ் தாரோன் தனிமைக்கு இரங்கிக்
            களைகண் காணாது கையறு துயரமொடு்
            பெய்வளைத் தோளி வெய்துயிர்த்து ஏங்கக்
 
              குலங்கெழு குருசில் கொடிக்கைம் மாறி்
            அலங்குஇதழ்க் கோதையொடு அவிழ்மூடி திருத்திக் 
       35    கலங்கல் ஓம்பிக் காஞ்சன மாலாய்
            இலங்கிழை மாதரை என்வழிப் படாதோர்
            பக்கம் கொண்டு படர்மதி இப்பால்
            வில்லின் நீக்கி வெள்ளிடை செய்தவர்
            அல்லல் உறீஇ ஆருயிர் உண்கெனக்
 
         40    கழைவளர் கானம் கடுந்தீ மண்ட
            முழைவயின் போதரும் முளைஎயிற்று இடிக்குரல்
            புலவும் புலிபோல் பொங்குஅழல் புதைஇய
            இலவஞ் சோலையின் இறைமகன் போதர
            ஆளி கண்ட ஆனை இனம்போல்
       45   வாளி வல்வில் வயவர் நீங்கிச்
            சில்இருங் கூந்தலை மெல்லென நடாஅய்
            வெல்போர் விடலை வெள்ளிடைப் படுத்தலின்
 
              அரண்இடை அகற்றி அச்சம் நீங்கி்
            முரண்உடை வேட்டுவோர் மூழ்த்தனர் மூசி்
       50   முன்னும் பின்னும் பக்கமும் நெருங்கிப்
            பொன்அணி மார்பன் போர்த்தொழில் அடங்கக்
            கலைஉணர் வித்தகர் கைபுனைந்து இயற்றிய
            சிலைநான் அறுத்தலின் செய்வதை இன்றி்
 
              வலைநாண் இமிழ்ப்புண் வயமாப் போலக்
       55   காட்சிக்கு இன்னா ஆற்றன் ஆகிப்
            பேரமர் ஞாட்பினுள் பெருமுது தந்தைதன்
            வார்சிலைப் புரிநாண் வாளியின் அறுப்பத்
            தேர்மிசைத் திரிந்த திறலோன் போல
            வீழ்தரு கடுங்கணை வில்லின் விலக்கி்
       60    ஊழ்வினை துரப்ப உயிர்மேல் செல்லாது
            தாழ்தரு தடக்கையும் தாளும் தழீஇ
            வாயறை போகிய வடுச்சேர் யாக்கையன்
            ஆழி நோன்தாள் அண்ணலைக் கண்டே
 
              தாழிருங் கூந்தல் தளிரியல் நடுங்கித்
       65    தான்அணி பெருங்கலம் தன்வயில் களைந்து
            கான வேட்டுவர் கைவயின் கொடுஎனக்
            கவிர்இதழ்ச் செவ்வாய்க் காஞ்சன மாலைகை
            அவிர்இழை  நன்கலம் அமைவர நீட்டி
            அழியன்மின் நீர்என அழுவனள் மிழற்றிய
       70    காஞ்சனை நமைப்பொரு கானவர் தமக்குக்
            கொடுத்திலம் ஆயின் கொடுமைவிளைவு உண்டெனக்
            கலக்க உள்ளமொடு கடுஞ்சிலை கைத்தர
 
              நலத்தகு மாதர் நடுக்கம் நோக்கி்
            வலத்தன் ஆகிய வத்தவன் அகப்பட்டு
       75    இன்னுயிர் போகினும் இன்ன என்னாது
            மன்னுயிர் காவல் மனத்தின் எண்ணிக்
            குன்றச் சாரல் குறும்பினுள் உறையும்
            வன்தோள் இளையீர் வந்துநீர் கேண்மின்
            பெருங்கலம் பெய்தியாம் பிடியொடும் போந்த
       80    அருங்கல வாணிகர் அப்பிடி வீழ
            வருத்தம் எல்லாம் ஒருப்படுத்து ஒருவழி
            நெறிவயின் நீக்கிக் குறிவயின் புதைத்தனெம்
            கொள்குவிர் ஆயின் கொலைத்தொழில் நீங்குமின்
            உள்வழி அப்பொருள் காட்டுகம் உய்த்துஎனச்
 
         85    சொல்பொருள் கேட்டே வில்தொடை மடக்கி
            அறவரை இழந்த செறுநரை விலக்கிக்
            குறவருள் தலைவன் குருசிலைக் குறுகி
            யாரே நீர்எமக்கு அறியக் கூறென
            வீரருள் வீரனை வேட்டுவன் கேட்ப
 
         90    வத்தவர் கோமான் வாணிகர் இத்திசைப்
            பெரும்பெயர்க் கிளவிப் பிரச்சோ தனன்நாட்
            அரும்பொருள் கொண்டியாம் ஆற்றிடைப் போந்தனெம்
            மடப்பிடி வீழ இடர்ப்பட்டு இருள்இடைப்
            பொழில்வயின் புதைத்த தொழிலினெம் யாம்என
       95    முகைத்தார் மார்பன் உவப்பதை உரைப்ப
 
              வளங்கெழு வத்தவன் வாணிகர் எனவே
            உளங்கழிந்து ஊர்தரும் உவகையர் ஆகிக்
            கொல்லாத் தொழிலினர் கொலைப்படை அகற்றி
            வல்ஆண் தோன்றலை வடகம் வாங்கிக்
      100    கையாப் புறுத்துக் காட்டிய எழுகென
உரை
 
              உய்ம்மருங்கு உபாயத்துப் பொய்ம்மருங்கு ஓடி
            அழல்வழி வந்தியாம் அசைந்தனம் வதி்ந்த
            பொழில்வயின் புதைத்தனம் புகற்குஅரி தாகத்
            தெரிவில் கொள்கையின் நெரிதலைக் கொளீஇயினிர்
      105    அவ்அழல் ஆறும் மாத்திரம் இவ்வழி
            நில்மின் நீர்என மன்ன குமரன்
            தெளியக் கூறப் புளிஞர் தேறி
 
              எவ்வ ழிஆயினும் எரிஅவித்து அவ்வழிக்
            காணல் உறுதும் காட்டாய் ஆயின்
      110    ஆணம் முன்கை அடுதும் யாம்என
 
              நன்கை யாத்தது நன்று நொந்துஇவன்
            கவிகைக்கு ஏலாது கட்டுஎனக் கலிழ்ந்தோள்
            அவிர்துழல் கானத்து அருள்இ லாளர்
            அடுதும் எனவே அமர்ப்பிணை போலத்
      115    தீஉறு தளிரின் மாநிறம் மழுங்க
            மாழை ஒண்கண் ஊழூழ் மல்க
            மம்மர் உள்ளமொடு மடத்தை மாழ்க
 
              மாழ்கிய மாதரை வாங்குபு தழீஇக்
            கனவளைப் பணைத்தோள் காஞ்சன மாலை
      120    புனவளைத் தோளி பொழில்அகங் காவனம்
            பெருமான் செல்வம் பேணாய் மற்றுஇவ்
            வரிமான் அன்னோற்கு ஆருயிர் கொடீஇய
            போந்தனை யோஎனத் தான்பா ராட்டி
            இரங்குவது நோக்கி இறைமகன் கூறும்
 
        125    வருந்துதல் தவிரயாம் வழிஇடைப் புதைத்த
            அருங்கலப் பேரணிப் பெருங்கலம் கருதின்யாப்
            புறுமுறை பின்இடத்து அறிமின் மற்றுஇவள்
            நீப்பருந் துயரம் நெறிவயின் ஓம்பித்
            தீப்புகை தீர்தலும் காட்டுதும் சென்றுஎனக்
 
        130    கையகப் பட்டோன் பொய்உரைத் தனன்எனின்
            உய்வகை இலைஇவன் உரைத்ததை எல்லாம்
            செய்தும் யாம்என வெவ்வினை யாளர்
            மையணி யானை தாங்கித் தழும்பிய
            கையாப்பு ஒழித்துக் காத்தனர் நிற்ப
 
        135    வாவிப் புள்ளின் தூவி விம்மிய
            அணைமிசை அசைந்த அம்மென் சிறுபுறம்
            மணல்மிசை அசைந்து மாக்கவின் வாட
            அறியாது வருந்திய ஆருயிர்த் துணைவியைப்
            பொறியார் தடக்கையில் போற்றுபு தழீஇப்
      140    பூங்குழல் குருசி தேங்கொளத் தீண்ட
            நீலத் தண்மலர் நீர்ப்பட் டனபோல்
            கோலக் கண்மலர் குளிர்முத்து உறைப்ப
            அவலங் கொள்ளும் அவ்வரைக் கண்ணே
 
              கவலை உள்ளமொடு கங்குல் போகிய
      145    வயந்தக குமரன் வந்துகாட்டு ஒதுங்கிக்
            கன்றுஒழி கறவையின் சென்றுஅவண் எய்திக்
            காப்புடை மூதூர்க் கடைமுகம் குறுகி
 
              யாப்புடை நண்பின் ஏற்றுப் பெயரன்
            வைகுபுலர் விடியல் வயவர் சூழ்வரப்
      150    பெருநலத் தானைப் பிரச்சோ தனன்தமர்
            இருநிலக் கிழமை ஏயலர் இறைவன்
            வென்றியும் விறலும் விழுத்தகு விஞ்சையும்
            ஒன்றிய நண்பும் ஊக்கமும் உயர்ச்சியும்
            ஒழுக்கம் நுனித்த உயர்வும் இழுக்கா
      156    அமைச்சின் அமைதியும் அளியும் அறனும்
            சிறப்புழிச் சிறத்தலும் சிறந்த ஆற்றலும்
            வெங்கோல் வெறுப்பும் செங்கோல் செவ்வமும்
            செருக்கிச் செல்லும் செலவின என்றுதம்
            தருக்கிய தலைத்தாள் தானைச் செல்வப்
      160    பெருமகன் தெளீஇத்தம் மருமதி மேம்படக்
 
              கய்ந்நவில் ஆளனை எஃகுள் அடக்கிய
            பொய்ந்நிலங் காட்டினர் என்பதோர் பொய்ம்மொழி
            வெந்நில மருங்கின் வேட்டுவர் எல்லாம்
            போற்றார் எரைத்த மாற்றம் பட்டதை
      165    நீலைக்கொண்டு அமைந்து நிரம்பாத் தம்நிலம்
            கலக்கம் அறிந்த கவற்சியன் ஆகி
            மன்னுயிர் காவலன்கு அம்மொழி மெய்எனின்
            இன்னுயிர் துறக்கும்என்று எண்ணருஞ் சூழ்ச்சியன்
            உற்றதை உணரும் ஒற்றாள் இளையனை
      170    வருகென நின்றோன் வயந்தகன் கண்டே
 
              உயிர்த்துணைத் தோழன் உளஎன உவந்து
            பெயர்ச்சியில் உலகம் பெற்றான் போலச்
            செந்தா மரைக்கண் காவலன் செவ்வியை
            முந்துறக் கேட்ட பின்றை மற்றவன்
      175    வந்ததை உணர்குநன் மந்திரம் இருந்துழிச்
 
              சிறைகொள் மன்னவன் துறைகொள் விழவினுள்
            இகழ்வொடு பட்ட இயற்கை நோக்கிப்
            பவழச் செவ்வாய்ப் பாவையைத் தழீஇ
            இருளிடைப் போந்ததும் இரும்பிடி இறுதியும்
      180    இற்ற இரும்பிடிப் பக்கம் நீங்கலும்
            தெருளக் கூறித் தீதுஇல் காலத்துப்
            பெருமுது தேவி உரிமைப் பள்ளியுள்
            செருமுரண் செல்வன் பெருவிரல் பிடித்தவற்கு
            அறியக் கூறிய அடையாண் கிளவியும்
      185    செறியச் செய்த சிறப்பும் ஆண்மையும்
            அருந்தொழில் அந்தணன் சுருங்கச் சொல்லலும்
 
              விரைந்தனம் செல்கென வெம்படை தொகுத்து
            வேழமும் புரவியும் பண்ணுக விரைந்துஎனத்
            தாழம் பறையொடு சங்கமணந்து இயம்பக்
      190    கடல்கிளர்ந் ததுபோல் கால்படை துவன்றி
            அடல்அருங் குறும்பர்க்கு அறியப் போக்கி
            இடபகன் படையோடு எழுந்தனன் ஆகி
 
              விண்ணோர் விழையும் செண்ணக் கோலத்துக்
            கண்ணிய செலவில் கஞ்சிகை வையம்
      195    கண்ணி சூட்டிக் கடைமணை பூட்டி
            வண்ண மகளிர் கண்ணுறக் கவினிய
            உழைக்கலம் ஏந்தி உழைப்படர்ந்து இயலப்
            பொன்கலத்து இயன்ற நற்சுவை அடடிசில்
            காப்புபொறி ஒற்றி யாப்புற ஏற்றித்
      200    தனிமை எய்திய மன்னனும் தையலும்
            அணியும் கலனும் அகன்பரி யாளமும்
            துணிவியல் சுற்றமும் தொடர்ந்துடன் விட்டுப்
             பின்வரவு அமைத்து முன்வரப் போகி
 
              வான்தொழில் வயந்தகன் காட்டக மருங்கின்
      205    அண்ணல் இருந்த அறிகுறித் தானம்
            நண்ணல் உற்ற காலை மன்னவன்
            அம்புபட வீழ்ந்த வெங்கண் மறவர்
            உதிரப் பரப்பின் உருவுகெட உண்ட
            காக்கையும் கழுகும் தூப்பதம் துறந்து
      210    கோடுகொண்டு இருந்த குழாஅம் நோக்கிக்
            காடுகொள் மள்ளர் கதுமென நடுங்கிப்
            போர்க்களம் உண்மை பொய்த்தல் இன்றென
            நீர்க்கரைப் பொய்கை நெற்றிமுன் இவந்த
            முள்அரை யிலவம் ஒள்ளெரி சூழப்
      215    பொங்குபுகை கழுமிய பூம்பொழில் படாஅன்
            இங்குநம் இறைவன் இருந்த இடம்அவன்
            ஏதம் பட்டனன் ஆதலின் இன்னே
            சாதல் பொருள்எனக் காதல் கழுமி
            வருபடை உய்த்த வயந்தகன் மாழ்கப்
 
        220    பொருபடை யாளர் புல்இடைத் தெரிவோர்
            வேட்டுவர் ராதல் ஆல்லிவில் காட்டி
            வாள்தொழில் வயந்தகன் வருத்தம் ஓம்பிப்
            பெருங்கணம் சென்ற பிறங்குபுல் கானம்
            பரந்தனர் செல்வோர் பாவையைத் தழீஇக்
 
        225    காவி கவினிய தாவில் பொய்கையுள்
            தனித்தாள் நிவந்த தாமரை போலப்
            பனித்தார் மார்பன் நிற்ப மொய்த்துடன்
            வளைத்தனர் வலக்கும் வயவரைக் கண்டே
            உளைப்பொலி மாவும் வேழமும் ஊர்ந்தவர்
      230    போஒந் திசைவயின் புதைந்தனர் நிற்பக்
 
              கதிரகத்து இருந்த முதிர்குரல் பறவை
            போமின் வல்லே போதீர் ஆயினும்
            உயிர்த்தவல் உரைக்கும் என்பதை உணர்ந்து
            முந்துபுள் உரைத்த முதுமகன் கூற
 
        235    வெந்திறல் வேட்டுவர் விரைந்தனர் ஆகி
            அல்லி நறுந்தார் அண்ணலை நலிய
            ஒல்லா மறவர் ஒலித்தனர் ஓடி
            வேகப் புள்ளமொடு விசைத்தனர் ஆர்த்துக்
            கோடும் வயிரும் குழுமின துவைப்பஅக்
      240    கருந்தொழி லாளல் இருந்தலை துமித்துப்
            பெருந்தகைக் கிழவனைப் பேரா மறவரை
            இடுக்கண் செய்யுவும் மியல்பி லாளர்
            நடுக்க மெய்தக் குடைப்பெரும் தானை
 
              வத்தவர் இறைவனும் மெய்த்தகைத் தாகத்
      245    தமர்மேல் வந்தமை தான்அகத்து அடக்கி
            நுமரோ மற்றிவர் பிறரோ தாம்எனக்
            கவர்கணை மொய்த்த கானத்து இடைமறைத்து
            எம்உயிர் காமின் எனவே ஆங்கவர்
 
              அடையார்க் கடந்த உதயன் மந்திரி
      250    இடபக ன்என்போன் இறிபடை தானிது
            கோள்உலா எழுமெனின் கூற்றெனப் பரந்த
            நாள்உலாப் புறுத்தும் வாள்வலி உடைத்தே
            தெரிந்தனை நில்லா யாகி எம்மொடு
            புரிந்தனை போதும் போதாய் ஆயின்
      255    பிரிந்து காண்பிறர் அருந்தலை துமிப்பஎன்று
            ஆர்வ வேட்டுவர் ரண்ணற் குரைத்து
            வார்சிலை அம்பொடு வாங்கிக் கொள்கென
            வீர வேந்தற்கு விரைந்தவர் ஈயா
 
              முற்பகல் செய்வினை பிற்பகல் உறுநரின்
      260    பார்வை நின்றும் பதுக்கையுள் கிடந்தும்
            போர்வைப் புல்லுள் பொதிந்தனர் ஒளித்தும்
            கழுக்குநிரை இருந்தும் கால்இயல் புரவி
            விழுக்குநிணம் பரிய விடுகணை விட்டும்
            கோலிய வல்வில் குமரரை மாட்டியும்
      265    வேலியல் ஆளரை வீழ நூறியும்
            வெங்கணை வாளியுள் விளிந்தனர் வீழப்
 
              பைங்கண் வேழத்துப் படைத்திறல் வேந்தன்
            தமர்வழங்கு படையும் அவர்வழங்கு வாளியும்
            பொன்இழை மாதரொடு தன்வயின் காத்து
      270    மரம்பயில் அழுவத்து மறைந்தனன் நிற்ப
            உரங்கெழு மறவலர் உதயணன் ஒழிய
            மத்துஉறு கடலில் தத்துறு நெஞ்சினர்
 
              பைவரி நாகத்து ஐவாய்ப் பிறந்த
            ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம் போல
      275    ஒழிந்தோர் ரொழியக் கழிந்தோர் காணா
            ஆறுகொள் மாந்தர்க்கு அச்சம் எய்தி
            ஏறுபெற்று இகந்த பின்றை வீறுபெற்று
            அம்கண் விசும்பின் திங்களைச் சூழ்ந்த
            வெண்மீன் போல வென்றி எய்திப்
      280    பன்மாண் படைஞர் பரந்தனர் சூழ
            மலிந்தவண் ஏறி வத்தவர் பெருமகன்
            கலிந்த துன்பம் கைஇகந்து அகலப்
            பொலிந்தனன் ஏனப் பொருபடை இடைஎன்