38. விழா வாத்திரை

    இதன்கண் : அரண்மனையிலே உறையும் பிரச்சோதன மன்னனும் கோப்பெருந்தேவி முதலிய உரிமை மகளிரும் வாசவ
தத்தையும் தோழியரும் உதயண குமரனும் மன்னன் மைந்தரும் பிறரும் நகரமாந்தரும் நீர்விழாவின் பொருட்டு நகர்க்குப்
புறத்தே உள்ள பொய்கைக் கரையை அடைதலும் பிறவும் கூறப்படும்.
 




5

 விரைந்தனர் கொண்ட விரிநீர் ஆத்திரை
 புரிந்துடன் அயரும் பொலிவின தாகி
 மல்லன் மூதூர் எல்லாச் சேரியும்
 பயிர்வளை அரவமொடு வயிரெடுத் தூதி
 இடிமுரசு எறிந்த எழுச்சித் தாகி
 யாழுங் குழலும் இயம்பிய மறுகில்

 



10




15

 மாலை அணிந்த மணிக்காழ்ப் படாகையொடு
 கால்புடைத்து அடுத்த கதலிகை நெடுங்கொடி
 ஆர்வ மகளிரும் ஆய்கழல் மைந்தரும்
 வீர குமரரும் விரும்புவனர் ஏறிய
 மாவுங் களிறும் மருப்பியல் ஊர்தியும்
 காலிரும் பிடியும் கடுங்கால் பிடிகையும்
 தேரும் மாக்களுந் தெருவகத்து எடுத்த
 எழுதுகள் சூழ்ந்து மழுகுபு மாழ்கிப்
 பகலோன் கெடுமெனப் பாற்றுவன போல
 அகலிரு வானத் துகள்துடைத்து ஆட

 



20

 விசும்புற நிமிர்ந்த பசும்பொன் மாடத்து
 வெண்சுடர் வீதி விலக்குவனர் போல
 எண்ணரும் பல்படை இயக்கிடம் பெறாஅ
 நகர நம்பியந் அரச குமரர்
 நிறைகளிறு இவைகான் நீங்குமின் எனவும்

 



25

 இறைவன் ஆணை ஈங்கெவன் செய்யும்
 புதல்வர் ஆணை புதுநீர் ஆட்டெனச்
 சிறாஅர் மொய்த்த அறாஅ விருப்பில்
 கம்பலைத் தெருவின் எம்பரும் எடுத்த
 குடையுங் கொடியுங் கூந்தல் பிச்சமும்
 அடல்வேல் யானை அடங்குங் காழும்
 களிறெறி கவிரியொடு காண்டக மயங்கிப்

 

30

 பெருநீர்க் கருங்கடல் துளுப்பிட் டதுபோல்
 ஒண்நுதல் மகளிர் உண்கண் நிரைத்த
 கஞ்சிகை துளங்கக் கயிற்றுவரை நில்லாச்
 செஞ்சுவற் பாண்டியஞ் செல்கதி (பெறாஅ)
 குரைத்தெழுந் துகளுங் குரம்புவி நிரைத்துடன்
 சங்கிசை வெரீஇச் சால்பில பொங்கலின்

 
35




40

 அவிழ்ந்த கூந்தல் அங்கையின் அடைச்சி
 அரிந்துகால் பரிந்த கோதையர் ஆகத்துப்
 பரிந்துகாழ் உகுத்த முத்தினர் பாகர்க்குக்
 காப்பு நேரிய கூப்பிய கையினர்
 இடுக்கண் இரப்போர் நடுக்கம் நோக்கி
 அரறுவ போல ஆர்க்குந் தாரோடு
 உரறுபு தெளித்துக் கழறும் பாகர்
 வைய நிரையும் வயப்பிடி ஒழுக்கும்

 


45

 கைபுனை சிவிகையுங் கச்சணி மாடமும்
 செற்றுபு செறிந்தவை மொக்குள் ஆக
 மக்கள் பெருங்கடல் மடைதிறந் ததுபோல்
 எத்திசை மருங்கினும் இவர்ந்துமே லோங்கிய
 கட்டளை வாயில் இவர்வனர் கழிந்து

 


50




55

 வரம்பில் பல்சனம் பரந்த பழனத்து
 ஆற்றிரு கரையின் அசோகம் பொழிலினும்
 காய்த்தொசி எருத்தின் கமுகிளந் தோட்டமும்
 மயிலுங் குழிலும் மந்தியுங் கிளியும்
 பயில்பூம் பொதும்பினும் பன்மலர்க் காவுதொறும்
 உயரத் தொடுத்த வூசலது ஆகி
 மரந்தொறும் மொய்த்த மாந்தர்த் தாகிப்
 புறங்கவின் கொண்ட நிறங்கிளர் செல்வத்து
 ஊரங் காடி உய்த்துவைத் ததுபோல்
 நீரங் காடி நெறிப்பட நாட்டிக்
 கூல வாழ்நர் கோன்முறை குத்திய

 


60




65

 நீலக் கண்ட நிரைத்த மருங்கின்
 உண்ண மதுவும் முரைக்கும் நானமும்
 சுண்ணமுஞ் சாந்துஞ் சுரும்பிமிர் கோதையும்
 அணியும் கலனும் ஆடையும் நிறைந்த
 கண்ணகன் கடைகள் ஒண்ணுதல் ஆயத்துக்
 கன்னி மாண்டுழித் துன்னுபு நசைஇய
 தூதுவர் போல மூசின குழீஇ
 ஆணைத் தடைஇய நூனெறி அவையத்துக்
 கல்வி யாளார் சொல்லிசை போல
 வேட்போர் இன்றி வெறிய வாக

 

70




75

 மாக்க உழிதரு மணல்நெடுந் தெருவின்
 மடலிவர் போந்தை மதர்வைவெண் தோட்டினும்
 படலைவெண் சாந்தினும் படத்தினும் இயன்ற
 பந்தரும் படப்பும் பரந்த பாடி
 அந்தமும் ஆதியும் அறிவருங் குரைத்த
 யோசனை அகலத்து ஒலிக்கும் புள்ளில்
 தேவரும் விழையும் திருநீர்ப் பொய்கைக்
 கரையுங் கழியுங் கானலுந் துறையும்

 



80




85

 நிறைவளை மகளிர் நீர்பாய் மாடமொடு
 மிடைபுதலை மணந்த மேதகு வனப்பில்
 கடல்கண் கூடிய காலம் போல
 நூல்வினை நுனித்த நுண்வினைப் படாத்துத்
 தானக மாடமொடு தலைமணந்து ஓங்கிய
 வம்புவரி கொட்டிலொடு வண்டிரை மயங்கிச்
 செவ்வான் முகிலிற் செறிந்த செல்வத்து
 எவ்வாய் மருங்கினும் இடையறக் குழீஇ
 ஊரிறை கொண்ட நீர்நிறை விழவினுள்

 
 

 இறைவன் பணியென்று இறைகொண்டு ஈண்டி
 நிறைபுனல் புகாஅர் நின்னகத் தோரென
 விழாக்கோள் ஆளர் விரைந்துசென்று உரைத்தலும்

 

90

 உவாக்கடல் ஒலியின் உரிமையொடு உராஅய்
 விழாக்கொள் கம்பலின் வெகுண்டுவெளின் முருக்கி
 எழாநிலை புகாஅ இனங்கடி சீற்றத்து
 ஆணை யிகக்கும் அடக்கருங் களிறு
 சேணிகந்து உறைந்த சேனையில் கடிகென

 

95




100

 வேந்துபிழைத்து அகன்ற வினைவர் ஆயினும்
 சேர்ந்தோர்த் தப்பிய செறுநர் ஆயினும்
 கலங்கவர்ந்து அகன்ற கள்வர் ஆயினும்
 நிலம்பெயர்ந்து உறைதல் நெடுந்தகை வேண்டான்
 தொகுதந்து ஈண்டிக் கிளைஞர் ஆகிப்
 புகுதந்து ஈகஇப் புனலாட்டு அகத்தெனச்
 சாற்றிடக் கொண்ட வேற்றுரி முரசம்
 திருநகர் மூதூர்த் தெருவுதோறு எருக்கி
 மெய்காப் பிளையர் அல்லது கைகூர்ந்து
 இடைகொள வரினும் இருபத் தொருநாள்
            படைகொளப் பெறாஅப் படிவத் தானையன்

 
105




110




115




120

 தாழ்புனல் தாரையுந் தமரொடு தருக்கும்
 நாழிகைத் தூம்பும் நறுமலர்ப் பந்தும்
 சுண்ண வட்டுஞ் சுழிநீர்க் கோடுமென்று
 எண்ணிய பிறவும் இளையோர்க்கு கியைந்த
 புனலகத்து உதவும் போகக் கருவி
 பணைஎருத் தேற்றிப் பண்ணின வாகி
 மாலையும் மணியும் மத்தகப் பட்டும்
 கோதையும் அணிந்த கோலம் உடையன
 திருநீர் ஆட்டினுள் தேவியர்க்கு ஆவன
 மேவிய வனப்பொடு மிசைபிறர்ப் பொறாதன
 பாகர் ஊரப் பக்கம் செல்வன
 ஆறாட்டு இளம்பிடி ஆயிரத் தங்கண்
 குறும்பொறை மருங்கில் குன்றம் போல
 இருநிலம் நனைப்ப இழிதரு கடாத்துக்
 கைம்மிக்க் களித்த கவுளது ஆயினும்
 செயிர்கொள் மன்னர் செருவிடத்து அல்லது
 உயிர்நடுக் குறாஅ வேழம் பண்ணி

 



125




130




135




140

 அரசுகை கொடுப்ப அண்ணாந்து இயலிக்
 கடிகை ஆரங் கழுத்தின் மின்னப்
 பயிர்கொள் வேழத்துப் பணையெருத்து இரீஇக்
 கடவுட்கு அல்லது கால்துளக்கு இல்லது
 தடவுநிலை நிழற்றிய தாம வெண்குடை
 ஏந்திய நீழல் சாந்துகண் புலர்த்திய
 பரந்த கவரிப் படாகைச் சுற்றத்து
 உயர்ந்த உழைக்கலத்து இயன்ற அணியின்
 முந்நீர் ஒலியின் முழங்கு முரசமொடு
 இன்னீர் வெள்வளை யலறு மார்ப்பின்
 மைத்துன மன்னரும் மந்திரத் துணைவரும்
 அத்துணை சான்ற அந்த ணாளரும்
 சுற்றுபு சூழ முற்றத்து ஏறிப்
 பிடியும் வையமும் வடிவமை பிடிகையும்
 பெருந்தேன் ஒழுக்கில் பிணங்கிய செலவின்
 வண்ண மகளிர் சுண்ணமொடு சொரியும்
 மலர்தூ மாடம் மயங்கிய மறுகில்
 நாட்பெரு வாயின் ஆறுநீர் ஆத்திரை
 வாள்கெழு நெடுந்தகை வளம்பட வெழலும்

 




145




150




155




160

 உயவக் கொண்ட ஓவியத் தண்டிகை
 இயைகொள் வெள்ளியோடு இரும்பியாப்பு உறுத்து
 வான்கொடிப் பவழமொடு வல்லோர் வகுத்த
 ஆன்கண் சந்தனத்து அரிக்கவறு பரப்பி
 முத்தும் மணியுஞ் சித்திரத்து இயற்றிப்
 பத்தி பயின்ற கட்டகக் கம்மத்து
 மருப்பிடைப் பயின்ற மாசறு மணித்தொழில்
 பரப்பமை பலகையொடு பாசுணங் கோலி
 ஐவகை வண்ணமும் ஆகரித்து ஊட்டிக்
 கைவினை நுனித்த கச்சணி கஞ்சிகை
 பசும்பொன் குயின்ற பத்திப் போர்வை
 அசும்பில் தேயா அலர்கதிர் ஆழி
 பாடின் படுமணி ஊடுறுத்து இரங்க
 மாலை அணிந்த மணித்தொழில் பாண்டியம்
 நூல்பிணித்து இன்நுகம் நோன்சுவல் கொளீஇக்
 கோல்கொள் கன்னியர் மேல்கொண்டு ஏறி
 விசிபிணி அறுத்த வெண்கோட்டு ஊர்தி
 முரசெறி முற்றத்து முந்துவந்து ஏறும்
 அரச மங்கையர் அடிமிசைக் கொண்ட
 கிண்கிணி மயங்கிய தண்பெருங் கோயில்

 




165




170

 கடைப்பகச் செப்பே கவரி குஞ்சம்
 அடைப்பைச் சுற்றமொடு அன்னவை பிறவும்
 அணிகலப் பேழையும் ஆடை வட்டியும்
 மணிசெய் வள்ளமும் மதுமகிழ் குடமும்
 பூப்பெய் செப்பும் புகைஅகில் அறையும்
 சீப்பிடு சிக்கமும் செம்பொன் கலசமும்
 காப்பியக் கோசமும் கட்டிலும் பள்ளியும்
 சுட்டிக் கலனும் சுண்ணகக் குற்றியும்
 வட்டிகைப் பலகையும் வருமுலைக் கக்சும்
 முட்டுஇணை வட்டும் முகக்கண் ஆடியும்
 நக்கிரப் பலகையும் நறுஞ்சாந்து அம்மியும்
 கழுத்திடு கழங்கும் கவறும் கண்ணியும்

 


175




180

 பந்தும் பாவையும் பைங்கிளிக் கூடும்
 யாழும் குழலும் அரிச்சிறு பறையும்
 தாழ முழவமும் தண்ணுமைக் கருவியும்
 ஆயத்து உதவும் அரூம்பெறல் மரபின்
 போகக் கலப்பையும் பொறுத்தனர் மயங்கிக்
 கூனும் குறளும் மாணிழை மகளிரும்
 திருநுதல் ஆயத்துத் தேவிய ஏறிய
 பெருங்கோட்டு ஊர்திப் பின்பின் பிணங்கிச்
 செலவுகண் உற்ற பொழுதில் பலருடன்

 



185

 பண்டுஇவ் வாழ்வினைத் தண்டியுங் கொள்வோள்
 இன்றுஇந் நங்கை கண்டதை உண்டுகொல்
 பாணி செய்தனள் காண்மின் சென்றென
 ஏறிய வையத்து எடுத்த கஞ்சிகைத்
 தேறுஉவா மதியின் திருமுகம் சுடரக்
 கதிர்விரல் கவியலுள் கண்ணிணை பிறழ
 நெருக்குறு சுற்றத்து விருப்பின் நோக்கி
 ஒட்டிழை மகளிரை விட்டனர் நிற்பச்

 
190




195




2000




205

 சுட்டுருக்கு அகிலின் வட்டித்துக் கலந்த
 வண்ண விலேகை நுண்ணிதின் வாங்கி
 இடைமுலை யெழுச்சித்து ஆகிப் புடைமுலை
 முத்திடைப் பரந்த சித்திரச் செய்கொடி
 முதலின் முன்னங் காட்டி நுதலின்
 சுட்டியிற் றோன்றிய சுருளிற் றாகி
 வித்தகத் தியன்றதன் கைத்தொழில் காட்டி
 இன்னிசை வீணை அன்றியும் நின்வயின்
 உதயண நம்பி ஓவியத் தொழிலின்
 வகையறி உபாயமும் வல்லை ஆகெனத்
 தந்ததும் உண்டோ பைந்தொடி கூறுஎன
 உற்ற புருவத்து ஒராஅ ராகி
 முற்றிழை மகளிர் முறுவல் பயிற்றச்
 செழுங்குரல் முரசின் சேனா பதிமகள்
 ஒருங்குயிர் கலந்த உவகைத் தோழியை
 நறுநீர்க் கோலத்துக் கதிர்நலம் புனைஇயர்
 நீடகத் திருந்த வாசவ தத்தையை

 



210

 நீசெலற் பாணிநின் றாய ரெல்லாம்
 தாரணி வையந் தலைக்கடை நிறீஇ
 நின்றனர் திருவே சென்றிடு விரைந்தென
 விளங்குபொன் அறையுள விழுநிதிப் பேழையுள்
 இளங்கலந் தழீஇ எண்ணிமெய்ந் நோக்கித்
 தோழியர்க்கு எல்லாம் ஊழுழ் நல்கி
 வதுவை வையம் ஏறினள் போலப்

 

215




220




225

 புதுவது மகிழ்ந்த புகற்சியள் ஆகிப்
 பதும காரிகை மகள்முகம் நோக்கித்
 தனித்துஞ் சேனைப் பனித்துறைப் படியின்
 நீரின் வந்த காரிகை நேர்த்தது
 துகள்தீர் இருந்தவத் துணிவின் முற்றி
 முகடுயர் உலகம் முன்னிய முனிவரும்
 கண்டால் கண்டவாங் கதிர்ப்பின வாகி
 தண்டாப் பெருந்துயர் தருமிவள் கண்ணென
 உண்மலி உவகையள் ஆகித் தன்மகள்
 இனவளை ஆயத் திளையர் கேட்பப்
 புனல்விளை ஆட்டினுள் போற்றுமின் சென்றென
 ஓம்படைக் கிளவி பாங்குறப் பயிற்றி
 ஆங்கவர் உள்ளும் மடைக்கல நினக்கெனக்
 காஞ்சன மாலைக்குக் கைப்படுத் தொழிந்தபின்

 


230

 ஏற்ற கோலத்து இயம்புங் கிண்கிணி
 நூற்றுவர் தோழியர் போற்றியல் கூறத்
 தெய்வச் சுற்றத்துத் திருநடந் ததுபோற்
 பையென் சாயலொடு பாணியின் ஒதுங்கி
 உறைத்தெழு மகளிரொடு தலைக்கடை சார்தலும்

 


235




240

 யவனக் கைவினை ஆரியர் புனைந்தது
 தமனியத்து இயன்ற தாமரை போலப்
 பவழமும் மணியும் பல்வினைப் பளிங்கும்
 தவழ்கதிர் முத்துந் தானத்து அணிந்தது
 விலைவரம் பறியா வெறுக்கையுள் மிக்க
 தலைஅள வியன்றது தனக்கிணை இல்லது
 தாயொடு வந்த தலைப்பெரு வையம்
 வாயின் முற்றத்து வயங்கிழை ஏறப்
 பாத பீடிகை பக்கஞ் சேர்த்தலும்

 



245

 செந்நூல் விசித்த நுண்ணுக நுழைந்த
 இலக்கணப் பாண்டியம் வலத்தின் நெற்றிக்
 கண்ணி பரிந்து கடிக்குளம் பிளகலும்
 பண்ணிய வையம் பள்ளி புகுகென
 மூதறி பாகன் ஏறல் இயையான்
 இலக்கணம் இன்றென விலக்கினன் கடிய

 


250




255

 ஆடகப் பொற்கவறு அணிபெறப் பரப்பிக்
 கூடங் குத்திய கொழுங்காழ்க்கு ஏற்ப
 நாசிகைத் தானத்து நகைமுத்து அணிந்து
 மாசறு மணிக்கால் மருப்புக் குடம்இரீஇ
 அரக்குருக் கூட்டிய அரத்தக் கஞ்சிகைக்
 கரப்பறை விதானமொடு கட்டில் உடையது
 கோதை புனைந்த மேதகு வனப்பின்
 மல்லர் பூண்ட மாடச் சிவிகை

 




260

 பல்வளை ஆயத்துப் பைந்தொடி ஏறலும்
 செய்யோள் அமர்ந்த செம்பொன் தாமரை
 வள்ளிதழ் பொதிந்த கொட்டை போல
 மெல்லியல் மாதரை உள்ளகம் புகுத்தி
 மல்லல் பெருங்கிளை செல்வழிப் படர

 




265




270

 முனிவர் ஆயினும் மூத்தோர் ஆயினும்
 எனையீர் பிறரும் எதிர்வரப் பெறீரென
 வானுறை உலகினும் வையக வரைப்பினும்
 தான விளைவினும் தவத்தது பயத்தினும்
 எண்ணரும் பல்லுயிர் எய்தும் வெறுக்கையுள்
 பெண்டிருள் மிக்க பெரும்பொருள் இன்மையின்
 உயிரெனப் படுவது உரிமை ஆதலின்
 செயிரிடை இட்டது செல்வன் காப்பென
 ஆறுகடி முரசம் அஞ்சுவரக் கொட்டிக்
 காவ லாளர் கால்புறஞ் சுற்றப்

 




275

 புயல்மலை தொடுத்துப் பூமலர் துதைந்து
 வியன்கா மண்டிய வெள்ளம் போல
 மாட மூதூர் மறுகுஇடை மண்டிக்
 கோடுற நிவந்து மாதிரத்து உழிதரும்
 கொண்மூக் குழாத்தில் கண்ணுற மயங்கி
 ஒண்ணுதல் மகளிர் ஊர்தி ஒழுக்கினம்
 புள்ளொலிப் பொய்கைப் பூந்துறை முன்னித்
 தண்பொழில் கவைஇய சண்பகக் காவில்
 கண்டோர் மருளக் கண்டத்து இறுத்த

 
280




285




290

 விழாமலி சுற்றமொடு வெண்மணல் ஏறி
 நாள்அத் தாணி வாலவை நடுவண்
 நிரந்தநீர் விழவினுள் இரந்தோர்க்கு ஈக்கெனப்
 பன்னீர் ஆயிரம் பசும்பொன் மாசையும்
 குவளைக் கண்ணியுங் குங்குமக் குவையும்
 கலிங்க வட்டியுங் கலம்பெய் பேழையும்
 பொறிஒற்று அமைந்த குறியொடு கொண்ட
 உழைக்காப் பாளர் உள்ளுறுத்து இயன்ற
 இழைக்கல மகளிர் இருநூற் றுவரோடு
 யாழறி வித்தகற்கு ஊர்தி யாவது
 கண்டுகொண் மாத்திரை வந்தது செல்கெனத்

 




295




300

 தனக்கென்று ஆய்ந்த தலையிரும் பிடிகளுள்
 இலக்கணக் கருமம் எட்டா முறையது
 மதியோர் புகழ்ந்த மங்கல யாக்கையொடு
 விதியோர் கொளுத்திய வீரியம் உடையது
 சேய்ச்செல னோன்பரிச் சீலச் செய்தொழில்
 பூச்செய் கோலத்துப் பொலிந்த பொற்படை
 மத்தக மாலையொடு மணமகள் போல்வது
 உத்தரா பதத்தும் ஒப்புமை யில்லாப்
 பத்திரா பதியே பண்ணிச் செல்கென
 உதயண குமரற்கு இயைவன பிறவும்
 உழைக்கலம் மெல்லாந் தலைச்செல விட்டு

 



305




310

 வல்லே வருகவில் லாளன் விரைந்தென
 விட்ட மாற்றம் பெட்டனன் பேணிச்
 சென்ற காட்சிச் சிவேதனைக் காட்டிப்
 பொன்னறை காவலர் பொறிவயின் படுகெனச்
 செண்ணம் மகளிர் செப்பில் காட்டிய
 வண்ணம் சூட்டின கண்ணியில் கிடந்த
 பனிப்பூங் குவளை பயத்தின் வளர்த்த
 தனிப்பூப் பிடித்த தடக்கையன் ஆகி
 நெடுநிலை மாநகர் நில்லான் போதந்து
 இடுமணல் முற்றத்து இளையருள் இயன்று
 படுமணி இரும்பிடிப் பக்கம் நண்ணிப்

 


315




320

 பொலிந்த திருவில் பொற்புடைத் தாகி
 மலிந்த யாக்கையின் மங்கலம் மிக்கதன்
 வனப்பிற்கு ஒவ்வா வாழ்விற்று ஆகி
 வாழ்நாள் அற்ற வகையிற்று ஆயினும்
 கணைச்செல வொழிக்குங் கடுமைத்து இதுவென
 மனத்திற் கொண்ட மதியன் ஆகிக்
 கண்டே புகன்ற தண்டா உவகையன்
 தாரணி இரும்பிடி தலைக்கடை இரீஇ
 ஏரணி எருத்தம் இறைமகன் ஏறலும்

 



325

 தூய்மை இன்றென மாநிலத்து இயங்காக்
 கடவுள் இயக்கம் கற்குவ போலக்
 குளம்புநிலன் உறுத்தலும் குறையென நாணிக்
 கதழ்ந்துவிசை பரிக்குங் கால வாகி
 உரத்தகைப் பொற்றார் அற்று மார்ப்பில்
 பந்துபுடை பாணியிற் பொங்குமயிர்ப் புரவி

 


330




335




340

 மருங்கிரு மணிப்புடை நிரந்துடன் மிளிர
 நான்முகங் கவைஇய வான்செய் பச்சைய
 தானச்செங் கோட்டுத் தோல்மணைப் படுத்த
 சித்திரத் தவிசில் செறிந்த குறங்கில்
 பொற்றொடர் பொலிந்த பூந்துகில் கச்சைய
 கத்திகை சிதர்மணி கட்கத்துத் தெரிப்ப
 வித்தக நம்பியர் பக்கத்து வலித்த
 கானத்துக் குலைந்த கவரி உச்சிய
 தானைத் தலைப்படை பாணியில் பரிப்ப
 அச்செறி புலவர் அளவுகொண்டு அமைத்துக்
 கட்கம் நுனித்த கடைக்கண் திண்நுகம்
 கொய்சுவல் இரட்டை மெய்யுறக் கொளீஇ
 ஒட்டிடை விட்ட கட்டின வாயினும்
 ஒன்றிநின்று இயங்காச் சென்றிடை கூடுவ
 மாயங் காட்டுநர் மறையப் புணர்த்த
 கோவை நாழிகைக் கொழூஉக்கண் கடுப்ப
 வடுச்சொல் நீங்கிய வயங்கிய வருணத்து

 
345




350
 இடிச்சொற் பொறாஅ விலக்கண வினையர்
 உள்ளுறக் கோத்த வள்புகொள் வலித்தொழில்
 பாகர் நின்ற பண்ணமை நெடுந்தேர்
 ஆக........................புறஞ்சுற்றக்
 காலியற் புரவியொடு களிறுபல பரப்பிப்
 பால குமரர் படையகப் படுப்ப
 உருவச் செங்கொடி தெருவத்துப் பரப்பிச்
 செருமிகும் தாமமொடு சேனையிற் கூடி
 மன்னவன் இருந்த தண்பொழில் காவில்
 சென்றுஇறுத் தனரால் நம்பியர் ஒருங்கென்.