தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கழுகுமலை வெட்டுவான் கோயில்

  • கழுகுமலை வெட்டுவான் கோயில்

    கழுகுமலையின் சிறப்பு, அந்த மலையின் பின்புறம் அமைந்து உள்ள ‘வெட்டுவான் கோயில்’ ஆகும். மலையின் ஒரு பகுதியில் பாறையை வெட்டி, அந்த ஒற்றைப் பாறையிலேயே ஒரு கோயிலைச் செதுக்கி இருக்கிறார்கள். அதுதான், ‘வெட்டுவான் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய கோயில், தமிழகத்திலேயே இது ஒன்றுதான் என்பதுவே, கழுகுமலையின் மாபெரும் சிறப்பு ஆகும்.

    வெட்டுவான் கோயில், ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது (Monolithic). கழுகுமலையின் ஒரு பகுதியில், 7.50 மீட்டர் ஆழத்துக்குச் சதுரமாக வெட்டி எடுத்து, அதன் நடுப்பகுதியைக் கோவிலாகச் செதுக்கி உள்ளனர். ஆனால் அந்தக் கோவிலின் பணி முழுமையாக நிறைவு பெறவில்லை. இதில், கரு அறையும், அர்த்த மண்டபமும் உள்ளன. கோவில் கோபுரத்தில், உமா மகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா வடிவங்கள் காணப்படுகின்றன.

    கழுகுமலையில், மூன்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. 1. சமணர் பள்ளி 2. வெட்டுவான் கோயில் 3. முருகன் கோவில்.

    மலையின் பழம்பெயர் ‘அரைமலை’. இன்றைய பெயர் ‘கழுகுமலை’.

    ஊரின் பழம்பெயர்: பெருநெச்சுறம் அல்லது திருநெச்சுறம்.

    நாட்டுப் பிரிவு: இராஜராஜப்பாண்டி நாட்டு, முடிகொண்ட சோழவளநாட்டு, நெச்சுற நாட்டு நெச்சுறம்.

    ஊரில் குறிக்கப்பட்டு உள்ள அரசர்கள்:

    1. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தக நெடுஞ்சடையன்)

    2. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தக வீரநாராயணன்).

    கழுகுமலையின் அடிவாரத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோயில் உள்ளது. இதன் மூலவர் இருக்கின்ற இடமும் ஒரு குடைவரைதான். இந்தக் கோவிலின் தெப்பக் குளத்தில், பால் போன்ற நிறத்தில் நல்ல குடிநீர் கிடைக்கிறது. அதுதான், இந்த ஊர் மக்களின் குடிநீராக, அண்மைக்காலம் வரையிலும் பயன்பட்டு வந்தது. எனவே, அந்தக் குளத்தைத் தூய்மையாகப் பராமரித்து வருகிறார்கள். இப்போது, தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வருகிற திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:15:33(இந்திய நேரம்)