தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிறப்புச் சடங்குகள்

 • பிறப்புச் சடங்குகள்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  குழந்தை பிறப்பதற்கு முன் நிகழும் சடங்குகள்

  நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் நன்மையில் முடிய வேண்டும் என்று கருதி செய்யப்படுகின்ற செயலுக்குச் சடங்கு என்று பெயர். அந்த வகையில் தமிழர்களின் சடங்கு முறையில் முதன்மையாகப் போற்றப்படுவது பிறப்புச் சடங்கு முறையாகும். இச்சடங்கு முறைகள் ஒரு பெண் தாய்மை அடைவதிலிருந்து அவள் மகப்பேறு காலம் வரை நடைபெறுகிறது. ஒரு பெண்ணின் பெருமை எங்கே புகழப்படுகிறதென்றால் அவள் கற்பு நெறியுடன் வாழ்ந்து தாய்மையடைந்து உள்ள குழந்தையைப் பெற்றெடுக்கும் போது தான் இதனை,

  மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

  நன்கலம் நன்மக்கட் பேறு. (குறள்: 60)

  என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுகிறார்.

  தாய்வீட்டிற்குத் தெரிவித்தல்

  பெண் தாய்மையடைந்த செய்தியினை முதலில் பெண்ணின் தாய் வீட்டாருக்குத் தெரியப்படுத்துவார்கள். அச்செய்தியினைக் கேட்ட தாய், தந்தை மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்து தாய்மையடைந்த பெண்ணை வந்து பார்த்துச் செல்வார்கள். தன்னுடைய மகள் தாயாகி விட்டாள் என்பதை உறுதி செய்து விட்டுப் போகவே இந்தப் பயணம் அமைகிறது.

  ஐந்தாம் மாதம் மருந்து

  கருவேப்பிலையை ஒரு கல் உப்பு வைத்து துவையல் போல் அரைக்கப்படுகின்றது. அதைச் சாமி அறையில் வைத்து வெற்றிலை, சீவல், பூ, குங்குமம், பழம் இவற்றோடு வைத்து வணங்கி, வயதான சுமங்கலிப் பெண்கள் மூன்று பேரை அழைத்து அவர்களின் கையால் மூன்று அல்லது ஐந்து உருண்டை கொடுக்கப்படுகிறது. தன் குலத்தெய்வத்தை வேண்டிக் கொடுக்கப்படும் இம்மருந்து வயிற்றில் வளரும் குழந்தைக்காகக் கொடுக்கப்படும் முதல் மருந்தாகும். காலையில் வெறும் வயிற்றில் அன்றிலிருந்து மூன்று நாள் சாப்பிட்டு பத்தியம் இருக்கவேண்டும்.

  ஏழாவது மாத மருந்து

  தாய்மையடைந்த பெண்ணை மீண்டும் ஏழாவது மாதம் தாய் வந்து அழைத்துச் சென்று அப்போது மருந்து கொடுக்கும் வழக்கம் உள்ளது. சிலர் ஐந்தாம் மாதம் மருந்து போலவே கொடுப்பார்கள். சிலர் இதிலிருந்து வேறுபட்டு பூவரசம் பட்டையும், மூக்கருட்டான் கிழங்கையும் உரலில் போட்டு இடித்து சாறாகப் பிழிந்து காலையில் மூன்று நாட்களுக்குப் வெறும் வயிற்றில் கொடுப்பார்கள்.

  பத்தியம் முரித்தல்

  மூன்று நாளும் பெண் பத்தியம் இருக்கவேண்டும். உப்பு இல்லாத கஞ்சியும் பருப்புத் துவையலும் அரைத்துச் சாப்பிட வேண்டும். நான்காம் நாள் பத்தியம் முரிப்பதற்காக உப்பு, சங்கு இலை இரண்டையும் சோற்றில் கலந்து உண்ணவேண்டும். இந்த நிகழ்வு முடிந்த பிறகு கருவுற்ற அப்பெண் கணவன் வீட்டில் வந்து இருப்பாள்.

  வளைகாப்பு நிகழ்ச்சி

  பெண்கருவுற்ற ஏழாவது மாதம் அல்லது ஒன்பதாவது மாதம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் இச்சடங்கை “வளைகாப்பு” அல்லது “சீமந்தம்” என்று கூறுவார்கள். மகளுக்கு வளைகாப்பு இடுவதற்காக நல்ல நாள் பார்த்து இரு வீட்டார்களும் சேர்ந்து முடிவெடுக்கப்படுகிறது. அந்த நாளில் பத்திரிக்கை அடித்து உற்றார் உறவினர்களுக்குக் கொடுத்து வரவழைக்கப்படுகிறது. இரவில் தாய் வீட்டுக்காரர்கள் வருவார்கள். வரும்போது ஒன்பது வகையான சோறு, ஒன்பது வகையான தட்டு பலகாரக் குடங்கள் எடுத்து வரப்படுகின்றன. காலையில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் குளிக்கச் செய்து, பெண்ணை அலங்காரம் செய்து, பந்தலில் பலர் மத்தில் நாற்காலியில் அமரவைப்பார்கள். மாப்பிள்ளை புத்தாடையுடன் பந்தலில் இருப்பார்.

  வளைகாப்பு நடைபெறும் முறை

  கருவுற்ற அப்பெண் நாற்காலியில் அமர்ந்த பிறகு ஒன்பது கண்ணாடி வளையல்களை ஒவ்வொரு கையிலும் போடுவார்கள். அத்துடன் இரு கைகளிலும் வேப்பங்காப்பும் போடப்படும். பெண்ணின் கண்ணங்களில் சந்தனம் பூசி மாலைப் போடுவார்கள். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்களுக்குச் சிறிய தட்டு ஒன்றில் மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி வைத்துக் கொடுக்கப்படும். அதை வாங்கி அப்பெண்ணை வாழ்த்திச் செல்வார்கள். பெண்ணை ஆரத்தி எடுத்து பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். உணவு அனைவருக்கும் மாப்பிள்ளை வீட்டாரால் வழங்கப்படும் இந்த நிகழ்ச்சி முடிந்து பெண்ணைத் தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள்.

  வளைகாப்பின் நோக்கம்

  கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏழாவது மாதத்திலேயே கேட்கும் திறன் ஏற்படுகிறது. அதன் காரணமாகத் தாய்மை அடைந்தவள் கண்ணாடி வளையல்களை அணிந்து கைகளை அங்கும் இங்கும் அசைக்கும் போது வளையல் சத்தம் கேட்கும். அவை கை நரம்பு வழியாக கருவில் வளரும் குழந்தைக்குக் கேட்கும் திறனை அதிகரிக்கும். இதனால் பிறக்கும் குழந்தைக்குக் காது செவிடாகும் வாய்ப்பு இல்லாமல் போகும் தாயானவள் மகிழ்வாக இருந்தால் பிறக்க போகும் குழந்தை எவ்வித குறையுமின்றி நல்ல முறையில் பிறக்கும் என்ற அடிப்படையில் இந்த வளைகாப்பு விழா கொண்டாடப்படுகிறது.

  ஆண்களின் பங்களிப்பு

  தன் மனைவி தாய்மையடைந்த நாளிலிருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நாள் வரை, கணவன் தன் தலைமுடியை வெட்டுவதில்லை. தாடியை வளர்ப்பார். எந்த உயிர்களையும் கொல்லுவதில்லை. உடலில் காயம் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்கிறார். அவ்வாறு ஏதாவது நடந்தால் தன்னால் வளரும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்று நம்புகின்றனர்.

  பிறப்பின் போது நடைபெறும் சடங்கு

  குழந்தை பிறப்பதற்கு முன் தாய்மையடைந்த பெண்ணிற்கு ஏற்படும் வலியை “இடுப்பு வலி” அல்லது “பிரசவ வலி” என்று அழைப்பார்கள். இவ்வலி ஏற்பட்டவுடன் கிராமபுற மருத்துவச்சியை அழைத்து வந்து காட்டுகிறார்கள். அல்லது மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். தலைப் பிரசவம் தாய் வீட்டில் தான் நடைபெறுகிறது.

  பிறப்பிற்குப் பின் நடைபெறும் சடங்குகள்

  குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை முடிச்சி போட்டு விடுவார்கள். ஏனெனில் காற்று உள்ளே போகாமல் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் காற்று உள்ளே நுழைந்தால் குழந்தைக்கு உடல்நலக்கேடு வரும் என்பதற்காகக் கட்டப்படுகிறது. குழந்தை பிறந்ததும் தாய்க்குக் குளிர்ந்த நீர் கொடுக்கப்படுகிறது. குழந்தையைக் குளிப்பாட்டி, கருமை, முகப்பவுடர் போட்டு வீட்டில் தனி அறையில் தாயையும் பிள்ளையும் ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

  நஞ்சுக் கொடி புதைத்தல், நோக்கம்

  குழந்தை பிறந்த பிறகு நஞ்சுக் கொடியை எடுத்து பாதுகாப்பான இடத்தில் புதைத்து விடுகிறார்கள். அவ்வாறு புதைக்கவில்லை என்றால் விலங்குகள் அதைத் தின்று அந்த வாடையை மோப்பம் பிடித்து வந்த குழந்தையைத் தின்று விடும் என்ற நம்பிக்கையிலும் பிறந்த குழந்தையின் பாதுகாப்பு நலன் கருதியும் இவ்வாறு புதைக்கின்றனர். பெரும்பாலும் குப்பைக்குழியில் தான் புதைக்கப்படுகிறது.

  பிரசவ மருந்து கொடுத்தல்

  குழந்தை பிறந்த அன்றிலிருந்து வேப்பிலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து காலை, மாலை இரண்டு வேளை கொடுக்கப்படுகின்றது. இதன் மூலம் வயிற்றுப்புண் எளிதில் ஆறிவிடும் தாயின் உடல் நலனும் காக்கப்படுகிறது.

  குளிப்பாட்டும் முறைகள்

  குழந்தை பிறந்த நாளன்று குளிப்பாட்டுவார்கள். அதன் பிறகு மூன்றாம் நாள் தான் குளிப்பாட்டும் வழக்கம் உள்ளது. சுடுதண்ணீர் வைத்து அதில் நொச்சி இலை ஆரசுபதி இலை முதலியவற்றைப் போட்டு, காய வைத்து, தாயை நீராடச் செய்வார்கள். இதற்கு “இடுப்புக்கு ஊற்றுதல்” என்று கூறுவார்கள். தாயின் நலத்திற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

  மூன்றாம் நாள் மருந்து

  குழந்தை பிறந்து மூன்று நாள் கழித்து தாய்க்கு நாட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. காயக்கருப்பட்டி, சுக்கு, அரையச்சாமான், சித்திரத்தை, பூண்டு, மிளகு இவற்றை அரைத்து சாமி அறையில் வைத்து குலத்தெய்வத்தை வேண்டி கொடுப்பார். தாயும் சேயும் தனி அறையில் இருக்கும் வரை இந்தப் பத்திய மருந்து கொடுக்கப்படும். அதுவரை தாய் பத்தியம் இருக்கவேண்டும். தாய்க்குப் பால் இல்லையென்றால் பால் சுறா, சீலா போன்ற மீன்கள் வறுத்துக் கொடுக்கப்படும். தாயையும் சேயையும் தனி அறையில் வைத்து அவ்வீட்டின் கூரையில் வேப்பிலை சொருகப்படும்.

  குழந்தையைக் குளிப்பாட்டும் முறை

  பிறந்த போது குளிப்பாட்ட பெற்ற குழந்தையை மூன்று நாள் கழித்து குளிப்பாட்டப்படுகிறது. அதற்குப் பிறகு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிப்பாட்டப்படுகிறது. குறிப்பிட்ட நாள் வரை மருத்துவச்சியே குழந்தையைக் குளிப்பாட்டுவார். குளிப்பாட்டும் போது குழந்தையைத் தலை கீழாக்க் குலுக்குவார். பிறகு தண்ணீரை எடுத்து குழந்தையைச் சுற்றி சிறு கையால் வாயில் ஊற்றுவார். இது போன்று மூன்று முறை செய்வார். விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், வேப்ப எண்ணெய் இவை ஐந்தையும் நெருப்பிலே காய வைத்து தினந்தோறும் காலை வேளையில் குழந்தையின் உடல் முழுவதும் தேய்த்து நீவி விடுவார்.

  புண்ணிய தானம்

  குழந்தை பிறப்பைத் தீட்டாகக் கருதும் அளவுக்கு அத்தீட்டைப் போக்கும் வழிமுறைகளும் கண்டறிந்துள்ளனர். குழந்தை பிறந்த பதின்மூன்றாம் நாள் வீட்டிற்கு வெள்ளையடித்து வீட்டை மெழுகி சுத்தம் செய்வார்கள். அதன் பிறகு பதினைந்தாம் நாள் காலை நேரத்தில் புரோகிதரை அல்லது வள்ளுவரை அழைத்து, வாழை இலையில் பச்சரிசி, நெல், தேங்காய், பழம் இவற்றை வைத்து மந்திரம் கூறி, கோமியத்தை மா இலையால் வீடு முழுவதும் தெளிப்பார். அன்றோடு அவ்வீட்டில் தீட்டு இல்லாமல் சுத்தமான வீடாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

  குழந்தை நலம் சடங்கு

  குழந்தையின் கையில் வசம்பை நூல் கயிற்றால் சுற்றி அதைக் கட்டி விடுவார். அந்தக் குழந்தை கைகளை அசைத்து வாயில் வைத்துச் சுவைக்கும். அப்போது வசம்பு நாக்கில் பாட்டு உள்ளே செல்லும். இதனால் குழந்தைக்குப் பேச்சுத்திறன் அதிகரிக்கும். பால் மணி கழுத்தில் போடுவார். இதையும் குழந்தை வாயில் வைத்துச் சுவைக்கும் அப்போது நாக்கு சுத்தமாகும். பேச்சுத்திறன் வரும். இடுப்பில் அரணாக் கொடி போடுவார்கள். அதில் புங்கங் கொட்டையைக் கட்டிவிடுவார்கள். இதனால் குழந்தை மாந்தம் என்ற நோயிலிருந்து காக்கப்படும்.

  சாமி கும்பிடுதல்

  பதினைந்தாம் நாள் வள்ளுவரை அழைத்து புண்ணிய தானம் செய்த பின் பதினாறாம் நாள் சாமி கும்பிடப்படுகிறது. அன்று தான் பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டப்படுகிறது. முதல் முடி எடுத்தல்.

  தந்தையார் வீட்டில் வளரும் அக்குழந்தைக்கு முதல் மாதம் அல்லது மூன்றாம் மாதம் தாய் வீட்டுக் குலத்தெய்வத்திற்கு முடியெடுக்கும் வழக்கம் உள்ளது. இது குழுவிற்கு எற்ப அல்லது சாதிக்கேற்ப மாறுபடும். இதை “பொறந்தமுடி எடுத்தல்” என்று கூறுகிறார்கள்.

  மறுமுடி எடுத்தல்

  முதல் முடி தாய் வீட்டுக் குலத்தெய்வத்திற்கு எடுத்த பின் மறு முடியைத் தந்தை வீட்டுக் குலத்தெய்வத்திற்கு எடுக்கப்படுகிறது. இப்பழக்கம் குழுவிற்கேற்ப மாறுபடும். அதுவும் மூன்றாம் மாதம் ஐந்தாம் மாதம் என்று ஒன்றை படையில் வரும் மாதக் கணக்குப்படி முடி எடுப்பார். அன்று முடி எடுக்கும் போது காது குத்தும் பழக்கம் சிலருக்கு உண்டு. அன்று நடைபெறும் செலவுகள் அனைத்தையும் தாய் மாமனே ஏற்றுக்கொள்வார்.

  சோறு ஊட்டுதல்

  குழந்தை பிறந்ததிலிருந்து திரவ உணவுகளையே கொடுத்து வருவார்கள். அன்றிலிருந்து ஐந்து அல்லது ஏழாவது மாதம் குழந்தைக்குச் சோறு ஊட்டுவார்கள். அந்த ஐந்தாவது மாதம் தை மாதமாக இருந்தால் பொங்கல் நாளில் சோறு ஊட்டுவார்கள். அந்த நிகழ்ச்சியின் போது தாய் மாமன், கிண்ணி, கரண்டி, குவளை போன்றவற்றை எடுத்து வருவார்.

  காது குத்துதல்

  இந்தச் சடங்கு செய்ய முதலில் தாய்மாமனை நாடுவர். இருவரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். பத்திரிக்கை அடித்து உறவுக்காரரிடம் கொடுத்து வீட்டில் அல்லது கோயிலில் இந்நிகழ்ச்சி நடைபெறும். இதில் தாய் மாமனே பெரும் பங்கெடுப்பார். முதல் நாள் இரவு நேரத்தில் தாய்மாமன் சீரெடுத்து உறவுக்காரரோடு வந்து இரவில் தங்கி காலை நேரத்தில் இச்சடங்கு தொடங்கும், மாமன் மடியில் குழந்தையை அமரச் செய்து வள்ளுவர் அல்லது “தட்டான்” (கம்மாளர்) மூலமாகவோ காது குத்தப்படும். ஒற்றைப் படையில் சீர் தட்டு எடுத்து வரப்படும் பிறப்பு தொடர்பான சடங்குகள் அனைத்தும் தீய ஆவிகளிடமிருந்து கெட்ட சக்திகளிடமிருந்தும் தாயையும் சேயையும் காத்துக்கொள்ளவே இந்தச் சடங்கு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. ( தகவலாளர் சி.புண்ணிய மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம் ).

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 17:22:14(இந்திய நேரம்)