தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சாமியாட்டம்

 • சாமியாட்டம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  மனிதன் மீது சாமி வந்து ஆடுவதாக ஆடப்படும் ஆட்டம் சாமியாட்டம். கோயிற்சடங்கின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்படும் சாமியாட்டம் தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. மனிதன் மீது தெய்வம் வந்து ஆடும் இவ்வாட்டம் பழங்காலந்தொட்டே சமுதாயத்தில் காணப்படுகின்றது. தமிழ் இலக்கியங்களிலும் இதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. “வேலன் வெறியாட்டு” இதற்கான சான்றாகும். கோயிற் சடங்குகளில் கோமரத்தாடி, சுடலை கொண்டாடி, அம்மன் கொண்டாடி, சாமியாடி என்றெல்லாம் அழைக்கப்படும், சாமியாடிகள் இருப்பார்கள் அவர்கள் அதற்கேற்ப வேடம் புனைந்திருப்பதையும் காணலாம். அம்மன் கரகம் எடுப்பவரும், காவடி எடுப்பவரும் சாமியாடும் போது தெய்வங்களைப் போல் போற்றப்படுவார்கள். இவர்கள் கூறும் வாக்குகளைத் தெய்வவாக்காகவே (அருள்வாக்காகா) மக்கள் கருதுகின்றனர். இவர்கள் இல்லாமல் கோவில் திருவிழா, கொடை நிகழ்ச்சிகளில் முக்கிய சாமியாடிகள் தவிர வேறு சிலரும் தெய்வமுற்று ஆடுவதையும் காணலாம்.

  தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் மனிதன் மீது சாமி வந்து ஆடும் சாமியாட்டம் காணப்படுகிறது. இத்தகைய சாமியாட்ட நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கிற்காகத் தொழில்முறைக் கலைஞர்களால் ஆடப்படும் கலையாகவும் தமிழகத்தில் வளர்ந்துள்ளது.

  சாமியாடி படம் :

  கோயில்களில் நிகழ்த்தப்படும் சாமியாட்டக் கலைகள் பக்தியை மட்டும் மையமாகக் கொண்டிருக்கிறது. தொழில் முறைக் கலைஞர்களால் நிகழ்த்தப்படும் கலைகள் அவற்றை போலவே இருப்பினும் நகைச்சுவையை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளன.

  தொழில் முறை – சாமியாட்டம் :

  தொழில் முறைச் சாமியாட்ட நிகழ்ச்சியில் ஐந்து பேர் இடம் பெறுவார்கள்.

  1. ஆர்மோனியம் ஒருவர் வைத்திருப்பார்.

  2. தவில் ஒருவர் வைத்திருப்பார்.

  3. பாவாடை தாவணியுடன் காலில் சலங்கை அணிந்து தூக்கிக் கட்டிய கொண்டையோடு பெண் ஒருவர் இருப்பார்.

  4. கோடு போட்ட பைஜாமாவும், ஜிப்பாவும் மஞ்சள் துணியில் தலைப்பாகையும், காலில் சலங்கையும் அணிந்த ஒருவர் இருப்பார்.

  5. வேட்டி, சிவப்புத்துண்டு மீசையுடன் தாளமிசைக்கும் ஒருவர்,

  ஆக ஐந்து பேர் இருப்பர். பெண் வேடமிட்டவர் பாடல் பாட ஏனையோர் பின்பாட்டு பாடுவார்கள். துண்டு போட்டவர் வயதானவராக இருப்பார். இவரே கணவர். பெண் வேடமிட்டவர் மனைவி ஆவார். இவர்களுக்கிடையே நடைபெறும் உரையாடல் பாலியல் சார்ந்து நகைச்சுவையூட்டுவதாக அமையும். பின்னர் கணவருக்குச் சாமி வந்து ஆடுவார்.

  பெண்சாமி படம் :

  தெய்வம் வந்து ஆடும் நம்பிக்கையை மக்கள் எவ்வாறு தங்கள் பலவீனங்களை மறைத்துக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை நகைச்சுவையுடன் நையாண்டி செய்வதாக அமைந்துள்ளது எனலாம்.

  சாமியாட்ட நிகழ்ச்சி தனி நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்படுவதில்லை. கரகாட்ட நிகழ்ச்சியின் துணையாகக் காணப்படுகிறது. பிறர் ஆடும் சாமியாட்டத்தைப் பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். கலைஞர்களுக்குப் பயிற்சிகள் ஏதும் அளிக்கப்படுவதில்லை.

  சாமியாட்டம் இன்றும் பரவலாகத் திருவிழாக் காலங்களில் காணப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:13:47(இந்திய நேரம்)