தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மாரடிப் பாட்டு

 • மாரடிப் பாட்டு

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  மாரடிப் பாட்டானது இறந்தவர்களின் வீடுகளில் பாடப்படும் பாட்டாகும். மார்பில் அடித்துக் கொண்டே பாடுவதால் இது மாரடிப் பாட்டு என்று வழங்கப்படுகிறது. இதற்கென்றே ‘கூலிக்கு மாரடிக்கும்’ கலைஞர்கள் உள்ளனர். இவை தமிழகத்தில் பரவலாக நிகழ்த்தப்படுகின்றன. மாரடிப் பாட்டினை “ஒப்பாரிப் பாட்டு”, “கைலாசப்பாட்டு” என்றும் அழைக்கின்றனர்.

  மாரடிப் பாட்டினைக் குறிப்பிட்ட இடம், காலம் என்று கணக்கிட்டு நிகழ்த்துவதில்லை, இறந்தவர்களின் வீடுகளில் மட்டுமே பாடப்படுகின்றது. இறந்தவர்களின் பிணம் வீட்டிற்குள் இருக்கும் போது மாரடிப் பாட்டுக் கலைஞர்கள் வீட்டின் முற்றத்தில் வாசல் பகுதியில் நின்று கொண்டு இதனை நிகழ்த்துவார்கள்.

  மாரடிப் பாட்டு வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இறப்புச் சடங்கின் ஒரு பகுதியாக உள்ளது. பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் இறந்துவிட்டால் மட்டுமே மாரடிப் பாட்டு நிகழ்த்தப்படுகிறது.

  தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் தான் இக்கலையை நிகழ்த்துவார்கள் என்று கூறப்படுகிறது. மிகவும் வறுமை நிலையில் வாடும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இம்மாரடிப் பாட்டினை நிகழ்த்துவார்கள். மாரடிப் பாட்டில் பதினொரு பேர் பங்கெடுக்கின்றனர். இதில் ஆறு பேர் பாட்டுப் பாடுகின்றனர். ஒருவர் நாதசுவரம் வாசிப்பார். இருவர் தம்புருசெப் அடிப்பார்கள். ஒருவர் உறுமியும் மற்றொருவர் கிடுகிட்டியும் இசைப்பார்கள்.

  இறந்தவர்களின் வீடுகளிலிருந்து மாரடிப் பாட்டுக் கலைஞர்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். அவர்கள் குழுவாகச் சென்று இக்கலையை நிகழ்த்துவார்கள். கலைஞர்கள் முதலில் இறந்தவர்கள் ஆண்களா? பெண்களா? என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். அவர்களைப் பற்றிய பிற தகவல்களையும் தெரிந்து கொண்டு, அவர்கள் நிகழ்த்துக்கின்ற மாரடிப் பாட்டில் கலந்து பாடுகின்றனர். முதலில் இறந்தவர்களின் பெயரைக் குறிப்பிட்டு மாரடித்துக் கொள்வர். பின்பு பாடும் போது இரு கைகளாலும் மார்பிலும் தோள்களிலும் அடித்துக் கொள்கின்றனர்.

  ஆண்கள் பெண்களாக வேடமிட்டு மாரடிப்பது உண்டு. ஆண்களில் மூன்று பேர் பெண் வேடமும் பிறர் கோமாளி, பபூன் வேடங்கள் புனைந்தும் மாரடிப் பாட்டினை நிகழ்த்துவார்கள். இவர்கள் வட்டமாகவும் நின்றுகொண்டு பாடுவார்கள், அழுது கொண்டும் பாடுவார்கள், இப்பாடல்கள் பாடுவதற்காகப் பயிற்சிகள் ஏதும் எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. பாடல் பாடும் போது பின் பாட்டுப் பாடியே பயிற்சி எடுத்துக்கொள்வார்கள் எனலாம்.

  இறந்த வீடுகளில் மட்டுமே இப்பாட்டானது பாடப்படுகிறது. இது கிராமங்களிலும் நகரங்களிலும் பாடப்படுகிறது. இவ்வாறு பாடுவதால் இறந்தவர்களின் உயிர் சாந்தி அடையும் என்று மக்கள் நம்புகின்றனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:13:17(இந்திய நேரம்)