தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாகவத மேளா

 • பாகவத மேளா

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  பாகவத மேளா பழம் மரபு வழி வந்த ஒரு நாட்டிய நாடகமாகும். இந்நாடகம் பரம பாகவத பசனை சம்பிரதாயப்படி இலட்சுமி நரசிம்மருக்கு அவரது பக்தர்கள் வழங்கும் நாட்டிய நாடகக் கொடையாக அமைகிறது. பாகவத புராணத்தைப் படித்து அது சொல்லும் நீதிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்கின்ற கிருட்டிணப் பக்தர்கள்தான் ‘பாகவதர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். பக்தியின் அடிப்படையில் இறைவனைப் புகழ்ந்து பாடி, ஆடி மகிழ்ந்து பாகவதர்கள் பங்கேற்று நடித்த நாட்டிய நாடகங்களே ‘பாகவத நாட்டிய மேளா நாடகங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

  பக்தர்கள் குழுவாகக் கூடி, இசைக் கருவிகளுடன் இறைவனைப் புகழ்ந்து பாடிக் கொண்டே தெருக்களில் ஆடியும், பாடியும் செய்து பசனை மரபில் அமைந்த நீட்சி அல்லது வளர்ச்சி நிலையையே ‘பாகவத மேள நாட்டிய நாடகங்கள்’ என்பர். பாகவத புராணத்தை எழுதிய ‘சுக பிரும்மம்’ என்பவரையும் மக்கள் பாகவதர் என்றே அழைத்துக் கொண்டனர். பிரகலாதன், நாரதன், வியாசர், கம்பரிசர், சுகன், சௌநகர், பீசுமர், ருக்மாங்கதன், அருச்சுனன், வசிட்டர், விபீடணன், பௌண்டரீகர் ஆகிய பன்னிரண்டு பேரும் பரம பாகவதர்கள் என்று அழைக்கப்பட்டனர். பாகவத மேள நாட்டிய நாடகம் பரதரின் நாட்டிய சாத்திரம் குறிப்பிடும் செவ்வியல் நாட்டிய நாடக இலக்கணங்களை உள்ளடக்கிய ஒரு கலை வடிவமாக விளங்குகின்றது. ஆகவே, நடிகர்களுக்குப் பொருத்தமான உடை, ஒப்பனை, செவ்வியல், இசை, நடனம், அபிநயம், தேவையான இடத்தில் உரையாடல் என்னும் இக்கூறுகள் நாட்டிய நாடகத்தில் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன. இராமாயண, மகாபாரதக் கதைகள் இந்நாட்டிய நாடக வடிவில் இன்றும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

  கி.பி ஒன்பதாம் நூற்றாண்டுற்குப் பிறகு தென்னிந்தியாவின் பல பெரிய கோயில்கள் தங்களுக்கென நாடக அரங்குகளைப் பெற்றிருந்தன. எனவே ஆயிரக்கணக்கான கலைஞர்கள் இறைவன் முன்னிலையில் தங்கள் பக்தியைச் செலுத்தினார்கள். இவர்கள் காலத்தில் பாடல்களுக்கு அபிநயம் பிடித்து ஆடும் நட்டுமேளம் என அழைக்கப் பெற்ற சதிர் நடனம் வழக்கில் இருந்தது. இந்த நடன வகை தேவதாசிகளுக்கு உரிய ஒரு மரபாகப் போற்றி வளர்க்கப்பட்டது. எனவே மன்னர்கள் செவ்விசை நாட்டிய நாடகக் கலைக் குழுக்களுக்கும் ஆதரவு அளித்தனர். பாகவத மேளம் என்ற கலைக்கும் இதைப் போன்ற பிற கலைகளுக்கும் தஞ்சையை ஆண்ட மன்னர் கொடுத்து வந்த ஆதரவு தொடர்ந்து கிடைத்தது. பாகவத மேள நாடக மரபு கி.பி 1502 ஆம் ஆண்டில் ஆந்திராவில் நிலவி வந்துள்ளதற்கான சான்றுகள் விசயநகரப் பேரரசு பற்றிய ஆவணங்களில் கிடைக்கின்றன. இந்நாடகத்தோடு மார்க்கண்டேயா, உசா, அரிச்சந்திரா, ருக் மாங்கதா என்னும் நாடகங்கள் மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கக்கூடிய நாட்டிய நாடகங்களாக அமைந்துள்ளன.

  ஆந்திராவின் நாட்டிய நாடகமான குச்சுப்பிடி நடனத்தின் பலகூறுகள் பாகவத மேள நாட்டிய நாடகத்தில் இடம் பெற்றுள்ளன. பரத நாட்டியத்தில் காணப்படும் சப்தம், வர்ணம், பதம் என்னும் கூறுகள் குச்சுப்பிடியில் தெலுங்கில் அமைந்துள்ளன. மேற்கண்ட ஒற்றுமைக் கூறுகளான பாகவத மேள நாட்டிய நாடகம் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வந்துள்ளதாகக் கருதப்படுகின்றது. இக்கலையின் மேன்மை நிலை உணரப்பட்டு இக்கலைக்குரிய நிலையில் பாதுகாக்கப்பட்டது. இக்கலை தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டுரிலும், சாலியமங்கத்திலும் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:12:38(இந்திய நேரம்)