தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நையாண்டி மேளம்

 • நையாண்டி மேளம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  நையாண்டி மேளம் என்று மக்களால் பரவலாகக் கூறப்பட்டாலும் இதனை “மேளம்” அல்லது “கொட்டு” என்றே அழைக்கின்றனர். தமிழகத்தில் ஒரு பகுதி மட்டும் இல்லாமல் அனைத்து இடங்களிலும் பரவலாக இக்கலை காணப்படுகிறது. தனியாகவும், பிற கலைகளோடு தொடர்புபடுத்தியும் நையாண்டி மேளம் நிகழ்த்தப்படுகிறது.

  மக்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகள், கோவில் விழாக்கள் ஆகியவற்றில் தனியாகவும், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, இராசா இராணி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், ஒப்பாரிப்பாட்டு, அரசியல் கலை நிகழ்ச்சிகள், பொது விழாக்கள் போன்றவற்றில் பின்னணி இசைக்கலையாகவும் நிகழ்த்தப்படுகிறது.

  மக்களை மகிழ்ச்சிப் படுத்தும் காரணத்தால் நையாண்டி மேளம் எனப் பெயர் பெற்றது. நையாண்டி என்பதற்குக் கேலி என்ற பொருளும் உண்டு. இசைக்கருவி மூலமும், இசைக்கருவி இசைப்பவர் மூலமும் நையாண்டி செய்து பார்ப்பவர்களை மகிழ்விக்கும் கலை என்பதால் இப்பெயர் பெற்றது. செவ்வியல் இசையினைக் கேலி செய்து இசைக்கப்படும் மேளம் என்பதால் இப்பெயர் பெற்றது என்று கலைஞர்களிடையே கருத்தும் ஏற்பட்டுள்ளது. நாட்டுப்புற மெட்டுக்களில் மிக முக்கியமானது நையாண்டி மெட்டு ஆகும். நையாண்டி மேளத்தில் நாயனம், தவில், பம்பை, உறுமி, தாளம் (ஜால்ரா), ஒத்து அல்லது சுதிப்பெட்டி ஆகிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சில இடத்தில் உறுமியும் சேர்த்து இசைக்கப்படுகிறது.

  நாட்டுப்புறத் தெய்வக் கோயில் விழாக்களில் தனியாகவும், சாமியாட்டம், கரகாட்டம், நையாண்டி, மேளம் சேர்த்தும் இசைக்கப்படுகின்றன. பெரும்பாலும் தெய்வ வழிபாட்டின் போது தெய்வத்தின் முன்பு நையாண்டி மேளம் இசைக்கப்படுகிறது. சில சமூகத்தில் வீட்டின் வாழ்க்கை வட்டச் சடங்குகள் (பிறப்பு, காது குத்துதல், பூப்பு, திருமணம், இறப்பு) நடைபெறும் போது வீட்டு முற்றத்தில் நையாண்டி மேளம் இசைக்கப்பட்டு நிகழ்த்தப்படுகிறது.

  நையாண்டி மேளத்தில் திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நையாண்டி மேளம் இசைக்கப்படுகிறது. சாமியாட்டத்தில் சாமியாடுபவரின் உடலில் சாமியை வரவழைக்க நையாண்டி மேளம் இசைக்கப்படுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 18:01:49(இந்திய நேரம்)