தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தெருக்கூத்து்

 • தெருக்கூத்து்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  நாட்டுப்புறக் கலைகளில் குறிப்பிடத்தக்க பொழுதுபோக்கு நிகழ்வாகச் சிறந்து விளங்குவது தெருக்கூத்தாகும். தெருக்கூத்தென்பது நாடோடிக் கூத்து வகையைச் சார்ந்ததாகும்.

  தெருக்கூத்துக்கு நாடக மேடையோ காட்சித் திரைகளோ இல்லாமல் எளிய முறையில் தெருவிலும் திறந்தவெளிகளிலும் நடைபெறும். இரவு முழுவதும் தெருக்கூத்தைக் கண்விழித்துப் பார்த்து மகிழ்ந்து செல்வர். இக்கூத்துப் பெரும்பாலும் காப்பிய, இதிகாச புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு எளிய முறையில் அமைந்திருக்கும். பொது மக்களுக்குத் தெருக்கூத்து ஒரு நல்ல பொழுதுபோக்காக அமைந்திருப்பதோடு நீதி புகட்டும் வாயிலாகவும் உள்ளது.

  கூத்து என்னும் சொல், நாட்டியம், நாடகம் ஆகிய இரு கலைகளுக்கும் பொதுவானதாகவே வழங்கப் பெற்றுள்ளது. இன்றைக்கும் ‘கூத்து’, நாடகம், ஆட்டம் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்ட போதிலும் தெருமுனைகளில் திறந்தவெளியில் அறிமுகப்படுத்திக் கொள்ளல், கதைக் கூறல், மங்களம் பாடுதல் என மரபுவழி முறைகள் பின்பற்றப்படுகின்றன. நாடகம் என்ற சொல்லும் தெருக்கூத்துக் கலையைக் குறிக்க மக்களால் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்கலையிலிருந்து கிளைத்து இக்கலையோடு நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுவதும். இது வட ஆற்காடு, செங்கற் பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டப் பகுதிகளில் செல்வாக்குடன் திகழ்கிறது.

  தெருக்கூத்து என்ற சொற்கள் ஒரே பொருளில் வழங்கப்படுகின்றன. தெருக்கூத்து சென்னை, செங்கற்பட்டு, வட ஆற்காடு, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மிகுதியாக நிகழ்த்தப்படுகின்றன. தங்கள் ஊர்களில் மட்டும் கூத்துக்கள் நிகழ்த்தும் தொழில்முறை அல்லாத குழுக்கள் பல உண்டு. இவையே இன்றி தொழில்முறைத் தெருக்கூத்துக் குழுக்கள் நூற்றுக்கணக்காக உள்ளன.

  அவை நாடக சபா, நாடகக் குழு, நாடக மன்றம், தெருக்கூத்து சபா என்னும் பல பெயர்களில் இயங்குகின்றன. கோவில் விழாக்களின்போது வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாகத் தெருக்கூத்து நிகழ்த்தப்படுகிறது. இந்தக் கோயில் விழாக்களின் போது வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாகத் தெருக்கூத்து நிகழ்த்தப்படுகிறது. இந்தக் கோயில் விழாக்களின்போது தினமும் இரவில் பாரதி (பாரத வாத்தியார் அல்லது பாரதப் பூசாரி) பாரதக் கதையை மக்கள் முன் எடுத்துரைப்பார்.

  பம்பை, தாளம் முதலான இசைக்கருவிகளுடன் பின் பாட்டுப் பாடுபவரும் இருப்பர். பாரதி பாட இவர்கள் இசைக்கருவிகளை இசைத்துப் பின்பாட்டு பாடுவர். இடையிடையே பாரதி பாரதக் கதையை விவரித்துக் கூறப் பின்பாட்டுக் குழுவினர் ஆமாம் போடுவர். இந்நிகழ்ச்சி ஒரு மாதம் அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் போது அர்ச்சுனன் வில் வளைப்பு, திரௌபதைக் கல்யாணம், மாடுபிடி சண்டை, அரவான் களப்பலி வேடமிட்டு நிகழ்த்திக் காட்டப்படும். மக்கள் இந்நிகழ்த்துதல்களைப் பக்தியுடன் கண்டு களிப்பர். இச்சூழலில் பாரதக் கதையின் பல்வேறு பகுதிகள் தெருக்கூத்தாக நிகழ்த்தப்படும்.

  சில நேரங்களில் கோவில் திருவிழாவின் போது பொழுதுபோக்கை நோக்கமாகக் கொண்டு கோயிலோடு தொடர்பில்லாத தெருக்கூத்துக்கள் நிகழ்த்தப்படுவதுண்டு. சடங்குச் சூழலில் நடத்தப்படும் பாரதக் கூத்துக்கள் உள்ளிட்ட பல கூத்துக்கள் பொழுதுபோக்குக்காக நிகழ்த்தப்படும். வன்னிய நாடகம் வன்னியர்களிடமும், அரிச்சந்திர நாடகம் அரிசன மக்களிடையேயும் நிகழ்த்தப்படுவதைக் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் காணமுடிகின்றது. அரிசன மக்கள் அரிச்சந்திரன் நாடகத்தை விருப்பத்துடன் நடத்துவதை தஞ்சை மாவட்டப் பகுதிகளிலும் காணமுடிகிறது. இராமாயணம் தொடர்பான தெருக்கூத்துக்களும் வழிபாட்டுச் சடங்கு அல்லாத சூழல்களில் நிகழ்த்தப்படுகின்றன.

  இறாப்புச் சடங்கிலும் தெருக்கூத்து நிகழ்த்தப்படுவதைக் காணமுடிகிறது. இறந்த பதினாறாம் நாள் சடங்கின் பதினைந்தாம் நாள் இரவு விடியவிடிய கண் விழிக்க வேண்டும். அப்போது விடியற்காலை வரை கோவிலன் நாடகம், கர்னமோட்சம், அரிச்சந்திரா முதலான தெருக்கூத்துக்கள் நிகழ்த்தப்படுகின்றன.

  தெருக்கூத்தில் ஆடுவோரின் எண்ணிக்கை வரையறை குழுவுக்குக்குழு மாறுபடுகின்றது. நாடக சபாவினர் இக்குழுவில் 18 பேர் இடம்பெற்றிருந்தனர். ஐயனார் திருக்கல்யாணம் என்னும் தெருக்கூத்துக் குழுவில் 17 பேர் இடம்பெற்றிருந்தனர். தருமபுரி மாவட்டம் மேகலசின்னம் பள்ளி, ஸ்ரீ பாலசரஸ்வதி நாடகக் குழுவில் 20 பேர்களும் ஒரு தெருக்கூத்தில் குறைந்தது 10 பேர் ஆடக்கூடியவர்களாக இருப்பர். பல குழுக்களில் இவர்கள் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்களாக இருப்பர். பெரும்பாலும் கூத்து வாத்தியார் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். புரட்டாசி மாதம் விசயதசமி அன்று நாடகக்காரர்களுக்கு முக்கியமான நாள் என்று முருகு வேல்விழி நாடக சபா வாத்தியார் கோவி சடகோபன் கூறினார். ஐந்து தலைமுறைகளாகத் தெருக்கூத்து ஆடிவரும் குடும்பத்தைச் சார்ந்தவர் இவர். விசயதசமி அன்று வாத்தியார் ஊரில் கூத்து நடத்தப்படும். போகி அன்றும் இவ்வாறு நடத்தப்படும். ஆட்டக்குழுவில் பல்வேறு வயதுடையவர்கள் இடம்பெற்றிருப்பர். பாத்திரங்களின் தன்மைக்கேற்ப இவர்களுக்கு வேடங்கள் பிரித்துத் தரப்படும். வேடப் பொருத்தமும் ஆடும் திறமையும் குரல்வளமும் இருப்பவர்களுக்கு வயது தடையாக இருப்பதில்லை.

  தெருக்கூத்துக்கள் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன. இந்த மாற்றங்கள் பொருண்மை, இசைக்கருவிகள், ஆட்டமுறைகள், ஒப்பனை, ஆடுகளம், மேடையமைப்பு முதலானவற்றில் வெளிப்படுகின்றன. இந்த வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு மக்களே தெருக்கூத்தினைத் தெற்கத்தி நாடகம், வடக்கத்தி நாடகம் என்று பிரிக்கின்றனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் மற்றும் அதற்குத் தெற்கேயுள்ள பகுதிகளில் நடைபெறும். கூத்துக்கள், தெற்கத்தி நாடகம் என்று சுட்டப்படுகின்றன. ஆற்றுப் பாசனம் உள்ள செழிப்பானப் பகுதிகளில் இவை நடைபெறுகின்றன. இதில் இராமாயண நாடகங்களும் அரிச்சந்திர நாடகம் கோவலன் நாடகம் போன்றவை இடம்பெறுகின்றன. நாடகத்தையே நம்பி வாழ்க்கை நடத்துவோரும் உண்டு. மொழி எல்லை கடந்து தெருக்கூத்து போற்றப்படுவதை அறியமுடிகிறது. இவ்வாறு தமிழகத்தில் நிகழ்த்தப்படும் வெவ்வேறு தெருக்கூத்துகளுக்கேற்பவும் நிகழ்த்தப்படும் கதைகளுக்கேற்பவும் ஒப்பனை மாறுபடுவதைக் காணமுடிகின்றது.

  நிகழ்த்தப்படும் கதைக்கு ஏற்பவும் கதாபாத்திரங்களின் குணநலன்களுக்கேற்பவும் முகப்பூச்சு ஒப்பனை வேறுபடுகின்றன. ஒப்பனை செய்யும்போது முக ஒப்பனை முதலில் செய்யப்படுகிறது. சூரன், அரக்கன், காளி போன்ற வேடங்களுக்கு முதலில் முகத்திற்கு முத்து வெள்ளை, செந்தூரம் கலந்து நல்லெண்ணெய், மனிலா எண்ணெயில் குழைத்துப் பூசுகிறார்கள். ஆனால் இந்த வேடங்களுக்கு வெள்ளையை மிகக் குறைவாகவும் செந்தூரம் (சிவப்பு) அதிகமாகவும் கலந்து பூசுகிறார்கள். முகத்தைப் பார்த்தால் சிவப்பாக இருக்கும்.

  தெருக்கூத்தில் பல்வேறு வயதுடையவர்கள் இடம்பெற்றிருப்பர். பாத்திரங்களின் தன்மைக்கேற்ப இவர்களுக்கு வேடங்கள் பிரித்துத் தரப்படும். ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள தருமபுரி மாவட்டத் தெருக்கூத்துக்கள் உடை, ஒப்பனை மற்றும் ஆட்ட முறைகளால் மாறுபடுவதைக் காணமுடிந்தது. ஆந்திர விதி நாடகமும் தமிழ்த் தெருக்கூத்தும் ஒன்றுக்கொன்று வளம்பெற்று வருவதையும் அறியமுடிகின்றது. தமிழகத்திலேயே தெலுங்கு மக்கள் மிகுதியாக வாழும் பகுதிகளில் தெலுங்கு கூத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை பாலசரஸ்வதி நாடகக் குழுவைச் சேர்ந்த பாப்பன்னச் செட்டியார் கூறினார். இக்குழுவில் உள்ள 20 பேர்களில் 5 பேர் தமிழ் தெலுங்கு மொழி அறிந்தவர்கள் என்றும் எனையோர் தமிழ் மட்டுமே தெரிந்தவர் என்றும் தமிழில் தெலுங்கை எழுதித் தந்து பயிற்சி அளிக்கப்பட்டது.

  ஆந்திரப் பகுதிகளில் தெருக்கூத்து ஆடுவர் என்றும், மொழி புரியாவிட்டாலும் ஆந்திர மக்கள் தமிழ்த் தெருக்கூத்தை விரும்பி இரசிப்பர். ஆந்திரத்திலிருந்து நாடோடிக் குழுக்களாகத் தமிழகம் வந்து தெலுங்கு கூத்து நடத்தி மக்களிடம் சன்மானம் பெற்று தெருக்கூத்தில் ஆர்மோனியம் முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டு தாளங்கள், ஒரு டோலக் ஒரு மிருதங்கம், ஒரு தபேலா முதலான இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இசைக் கருவிகள் குழுவிற்குக் குழு சிறிதளவு மாறினாலும் ஆர்மோனியம், தாளம், மிருதங்கம் முதலியன முக்கிய இடம்பெறுகின்றன.

  இந்த இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்கள் கூத்தாடும் களத்திலேயே ஓரமாக அமர்ந்திருப்பர். தெருக்களிலோ அல்லது வயல்களிலோ அல்லது மைதானம் போன்றவற்றிலோ இவர்கள் கூத்தாடுகின்றனர். நாடக சபாவின் பெயர் எழுதிய திரைச் சிலையைக் கூத்து ஆரம்பிக்கும் போது இருவர் பிடித்துக் கொள்வர். சில குழுக்களில் அந்தந்த ஊர்களில் கிடைக்கும் போர்வை அல்லது சமுக்காளம் திரைச் சிலையாகப் பயன்படுத்தப்படுகின்றது. மின்சாரம் இல்லாத ஊர்களில் பெட்ரோமாக்ஸ் விளக்கு பயன்படுத்தப்படும். நாற்சந்தியில் தெருக்கூத்துக்கள் நிகழ்த்தப்படும் போது ஒரு தெருவில் ஆடுகளம் அமைந்திருக்க ஏனைய மூன்று மூன்று தெருக்களிலும் பார்வையாளர்கள் அமர்ந்திருப்பர்.

  தெருக்கூத்து தமிழகத்தின் தொன்மையான ஆட்டக்கலையாகும். தெருக்கூத்தைக் கற்றுக் கொள்வதற்குத் தனிப் பள்ளிகள் ஏதுமில்லை. தெருக்கூத்தைக் கற்றுக்கொள்ள தேர்ச்சி உள்ள கூத்து வாத்தியார் ஒருவரை ஊருக்கு அழைத்து கூத்து கற்றுத் தருமாறு வேண்டுகின்றனர். தினமும் பெரும்பாலும் இரவு வேளைகளில் கூத்து கற்றுத் தரப்படுகிறது. தெருக்கூத்து ஆடும் கலைஞர்களில் மிகுதியானவர்கள் வள்ளியர்களை ஆயினும் தெருக் குழுக்களில் பல்வேறு சாதியினரும் இடம் பெற்றிருந்தைப் பரவலாகக் காணமுடியும். தெருக்கூத்துக்குரிய நடன அடவுகள் பயிற்சிக் காலத்திலேயே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. நடனமாடும் திறமையைப் பெற்ற பின்னரே பயிற்சியாளரை ஆட அரங்கினுள் அனுமதிக்கின்றனர். கை முத்திரைகள் மூலம் விளக்குதல், அங்க அசைவுகள் கிறுக்கி சுற்றுதல் மூலம் பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துதல் போன்றவை பயிற்சியின் போது கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பாத்திர அறிமுகம், உணர்ச்சி வெளிப்பாடுகள், பாத்திரத்தின் பண்புகள் ஆகியவை நடன அடவுகளின் மூலம் வெளிப்படுகின்றன.

  தெருக்கூத்து கலைஞர்களைத் தொழில்முறைக் கலைஞர், பயில்முறைக் கலைஞர், இனவழிக் கலைஞர் என மூன்று நிலைகளில் பகுக்கின்றனர். தொழில்முறைக் கலைஞர்கள் முழு நேரக் கூத்தர்கள், கூத்தில்லாத காலங்களில் மட்டும் பிற தொழில்களை செய்கின்றனர். பயில்முறைக் கலைஞர்கள் தெருக்கூத்தையும், பிற தொழில்களையும் செய்பவர்கள். இவர்கள் பரம்பரைக் கலைஞர் அல்லர். இனவழிக் கலைஞர்கள் தங்களுடைய ஊர்களில் உள்ள கோவில்களில் மட்டும் கலை நிகழ்த்தப்படுபவர்கள். இவர்கள் பெரும்பாலும் பிற ஊர்களுக்குக் கலை நிகழ்த்தச் செல்வதில்லை. இவர்கள் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் ஆடுபவர்கள்.

  கூத்தாடக் கற்ற பின் ஏதேனும் ஒரு திருவிழாவில் அரங்கேற்றமும் நிகழும் இந்த அரங்கேற்றத்தின்போது, அரங்கேறிய கலைஞர்களுக்கு உறவினர்கள் புதுத்துணி, நகை, பணம் போன்றவற்றைப் பரிசாகக் கொடுப்பர்.

  தெருக்கூத்து நாடகத் தன்மை உடையது. இதற்கு என்று காட்சி ஜோடனைகளோ பகுப்புகளோ இல்லாதது. குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிய வேண்டும் என்ற நிலையில் உருவாக்கப்பட்ட கூத்துக் கதைகள் பெருமளவில் இல்லை.

  தெருக்கூத்தின் தொடக்கக் காட்சி முதல் இறுதி வரை கதை கூறும் போக்கு செய்யுள்களாலேயே பெரிதும் அமைந்திருக்கும். இசையுடன் பாடப்படும் இப்பாடல்களைக் கதைத் தொடர்புப் பாடல்கள், உதிரிப் பாடல்கள் என வகைப்படுத்தலாம். கதைத் தொடர்பான பாடல்களில் பெரும்பாலும் முந்திய பரம்பரையினர் எழுதி வைத்தவை முன்பு எழுதி வைக்கப்பட்டவற்றில் திருத்தப்பட்டவை, புதிதாக எழுதியவை என்று மூன்று வகைகள் உள்ளன. பாடல்களை அடுத்துப் பேசப்படும் வசனம் கலைஞர்களின் மனநிலை, திறமையைப் பொறுத்து அமையும். கோவில் விழாவில் முதல் நாள் கூத்து தொடங்கப் போவதைக் குறிக்கும் வகையில் எல்லா இசைக் கருவிகளையும் ஒருசேர இசைப்பர். இதனைக் ‘களரி கட்டுதல்’ என்பர். பாடல்களும் கலைஞர்களால் ஒரு சேரப் பாடப்படும். இறைவணக்கப் பாடலும், குறிப்பிட்ட தெய்வத்திற்குரியதாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதையடுத்து விநாயகர் துதி ஆரம்பமாகும். விநாயகராகக் கலைஞர் ஒருவர் வேடமிட்டு ஆடு பரப்பில் வருவார். விநாயகர் முகமூடியை அணிந்து கொண்டோ அல்லது விநாயகர் உருவப் பொம்மையை வைத்துக் கொண்டோ விநாயகர் துதி பாடப்படும். குருக்கள் வரவு குறித்த பாடலும் அப்போது பாடப்படும்.

  விநாயகர் துதி முடிந்ததும் அவையடக்கப் பாடலைப் பாடுவர். இப்பாடலைக் கூத்தை உருவாக்கிய ஆசிரியரோ குழுவின் தலைவரோ பாடுவார். கதையின் சொற்குற்றம், பொருட்குற்றம் பொறுக்க வேண்டியும், பாடலை இயற்றிய ஆசானின் ஊர் பேர் ஆகியவற்றையும் குழுவின் முகவரியையும் கூறுவார். கூத்தின் இறுதிப் பகுதியில் மங்களம் பாடுதல், வாழி விருத்தம், வசனம் ஆகியன இடம்பெறும். இப்பகுதியில் கூத்தை இயற்றியவர். கேட்டவர், கண்டவர், ஆடியவர் ஆகியோருக்கு வாழ்த்துக் கூறுவர். இது பாடலாகவோ உரைநடையாகவோ அமையும். கூத்துக் கலைஞர்கள் கதைகளுக்கு அப்பால் பல செய்திகளை நிகழ்த்துதலின் போது சொல்லிச் செல்வர். கூத்து நிகழும் ஊரில் அல்லது அருகிலுள்ள ஊர்களில் நடைபெற்ற நிகழ்வுகளையும் அரசியல் நிகழ்வுகளையும் கூத்தில் எடுத்துரைப்பர். பெரும்பாலும் கட்டியங்காரனே இதனைச் செய்வார். அவர் சொல்லும் தகவல்கள் இயல்பாக இருப்பதால் பார்வையாளர்களை எளிதில் சென்றடையும்.

  பல தொண்டு நிறுவனங்களும், அரசு சார்ந்த நிறுவனங்களும் தெருக்கூத்தைப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துகின்றன. ‘கல்லாசுரன் சம்காரம்’, ‘கல்விக்கரசன் பட்டாபிசேகம்’, நோய் அரக்கன் வதை, ‘மதுவரக்கன் கதை’ போன்ற பிரச்சாரக் கதைகள் தற்போது நிகழ்த்தப்படுகின்றன. தற்காலக் கலை வடிவங்களின் உருவாக்கத்திற்குத் தெருக்கூத்து அடிப்படையாக இருந்துள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் தெருக்கூத்து முறைகளைப் பின்பற்றியே அவரது நாடக உத்திமுறைகளும் அவர் உருவாக்கிய நாடகங்களும் (ஸ்பெஷல்) தனி நாடகமாக உருப்பெற்றன.

  தமிழ்த் திரைப்படத்தின் தாக்கமும் தெருக்கூத்தினைப் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையிலேயே நாடகம் போன்ற கலை வடிவங்கள் தோற்றம் பெற்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 17:54:37(இந்திய நேரம்)