தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கோணங்கி ஆட்டம்

 • கோணங்கி ஆட்டம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  கோமாளி போன்ற ஒப்பனையுடன் நாணிக் கோணி ஆடும் ஒரு வகையான வைணவ வழிபாட்டுச் சடங்காட்டம் கோணங்கி ஆட்டம் எனப்படுகிறது. முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களால் மட்டுமே இந்த ஆட்டம் ஆடப்படுகிறது.

  இவ்வாட்டம் புரட்டாசி மற்றும் சித்திரை, வைகாசி மாதங்களில் நேர்ந்துகொண்டவர்களோ அல்லது தீமைகளிலிருந்து ஊர் விடுபட வேண்டும் என்று நினைப்பவர்களும் நடத்தும் நிகழ்ச்சியாகும். ‘கம்ப சேர்வை’யின் போதுதான் இவ்வாட்டம் நடைபெறும். திருமாலுக்குப் பிடித்தமான சனிக்கிழமைகளில் நிகழ்த்தப்படும். திருப்பதிக்கும் அரியலூர் கலியபெருமாள் கோயிலுக்கும் சென்று திரும்பிய செல்வந்தர்கள் ஏழுமலையானுக்குப் பெரும் படையல் போடுவதை ‘கம்ப சேவை’ என்பர். பின்பு, விருந்து மக்களுக்கு அளிக்கப்படும். விருந்துக்கு வரும் அனைவருக்கும் தலைமுழுக நல்லெண்ணெய் தரப்படும். வடை, பாயசத்தோடு, ஆக்கப்படும் உணவைக் கடவுளின் அடையாளச் சின்னமான நாமம், சங்கு சக்கரம் அனுமார் ஆகிய உருவங்கள் வரையப்பட்ட சுவருக்கு எதிரே வைத்துப் படைப்பர்.

  அவ்வுருவங்களுக்கு வடை மாலை, துளசி மாலை சாத்தப்படும். படைப்பதற்கு முன்பே கோணங்கி ஆட்டம் நிகழ்த்துதல் மரபு.

  வயதானவனைப் போலவும், மூளைக் கோளாறு உள்ளவன் போலவும் தன்னை மறைத்துக்கொண்டு கோகுலத்தில் கோபியருடன் இளம் கண்ணன் ஆடினான் என்ற கதையின் அடிப்படையில் கோணங்கி ஆட்டம் ஆட்டப்படுகிறது. தலையில் கோமாளி அணியும் தொப்பி, முகத்தில் ரோஸ் வண்ணப் பூச்சு, நெற்றி மற்றும் இரு கன்னக் கதுப்புகளிலும் பெரிய நாமங்கள், நரைத்த மீசை தாடி, முழுக்கால் மற்றும் முழுக்கைச் சட்டைகள், கையில் எரியும் பந்தம், கழுத்தில் துளசி மாலை இதுவே கோணங்கி ஆட்டக்காரரின் ஒப்பனை. கோணங்கி ஆடுபவர் ஒருவர் மட்டுமே, அவர் ஆடுவதற்கு முன் ஒரு வாரம் விரதமிருப்பார். ஆட்டத்தின் போது திருமாலின் அவதாரப் புகழைத் தாசாதிதாசர் ஒருவர் பாடுவார் பம்பை, மங்கலம் முழங்க ஆர்மோனியம் இசைக்க ஆட்டம் தொடங்கும்.

  இசைக் கருவிகளின் தாளத்திற்குகேற்ப கோணங்கி ஆடுபவர் கை, கால்களை அகல விரித்தும் மடக்கியும் நாணியும் உடலைக் கோணியும் ஆடுவார். தெய்வம் தன்மேல் வந்தது போல் ஆடுவார். அப்போது ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்த தனிமனிதரோ ஊராரோ வாக்குக் கேட்பர். கோணங்கிப் பெருமாள் கூறக்கூடிய வாக்கு உண்மையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

  இந்தக் கோணங்கி ஆட்டம் பொழுதுபோக்கை நோக்கமாக்க் கொண்ட ஆட்டமாகவும், தொழில் முறை ஆட்டமாகவும் இன்றும் இருந்து வருகிறது. வழிபாட்டுச் சடங்காட்டமாகவே திகழ்கிறது. கோணங்கி ஆட்டத்தைக் கற்றுக்கொள்வதற்குத் தனியாக பயிற்சி ஏதும் கிடையாது. தந்தையிடமிருந்து மகன் கற்றுக்கொள்ளும் முறைதான் நடைமுறையில் இருக்கின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 16:24:10(இந்திய நேரம்)