தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கூத்து்

 • கூத்து்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  கூத்து என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றாகும். இவற்றை “நாட்டுப்புறக் கூத்துகள்” என்றும் அழைப்பதுண்டு. கிராமிய நாடகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றில் பொதுவாக ஆடல்களும் பாடல்களும் கலந்திருக்கும். கதையோடு சேர்ந்த ஆடல் கூத்தாகவும், இக்கூத்தின் வளர்ச்சியே நாடகமாவும் திகழ்கிறது. சுருக்கமாகக் கூறினால் மேடையின்றி, திரைகளின்றி, அதிக ஒப்பனைகள் இன்றி, திறந்தவெளி அரங்குகளில் நடைபெறும் கிராமிய நாடகங்களே கூத்துகளாகும்.

  கூத்துகளே கலைகளை வளர்ப்பதில் முன்னோடியாக விளங்குகின்றன. இக்கிராமியக் கூத்துகளுக்குத் தேசிய முக்கியத்துவமுண்டு. அவை கிராமிய மக்களின் வாழ்க்கை வரலாற்றையும் ஓரளவு வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். கிராமிய மக்கள் கூத்து நிகழ்த்துபவரைக் “கூத்தாடிகள்” என்று அழைத்தனர்.

  “கூத்தாடி கிழக்கே பார்ப்பான்
  கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்”
  என்றும் ஒரு பழமொழியும் உண்டு.

  கூத்துக்கள் இரவு பொழுதில் நடைபெறும் என்பதையும் விடியும் வரையும் நிகழ்த்தப்படும் என்பதையும் உணர்த்துகிறது. இப்பழமொழி. இரவு பொழுது மகிழ்ச்சிக்கரமாக அமையும் வகையிலே இக்கூத்து நிகழ்த்தப்படும்.

  கிராமியக் கூத்துகளில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் இடம் பெறுகின்றன. ஆயினும், பாட்டின் செல்வாக்கே அதிகம் காணப்படுகிறது. கதை தொடர்ந்து செல்லுகையில் இடையில் விளக்கம் உரைப்பதற்கு உரையாடல் இடம்பெறுகின்றது. மத்தளத்தின் இசைக்கேற்ப நடிகர் ஆடுவர். மத்தள அடிகள் ஒவ்வொன்றும் பாத்திரங்களினது வருகையையே குறிப்பதாக அமையும். பொதுவாக மத்தளம் இல்லாமல் கூத்தில்லை என்பதை உணரலாம்.

  கூத்துகளின் இறுதியில் நடைபெறுவது இறைவழிபாடாகும். கூத்தாடிய அத்தனை பேரும் மேடைக்கு வந்து நின்று பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு ஆடுவர். பின்பு தாம் கூத்தாடிய மேடையைத் தெய்வமாக எண்ணித் தொட்டுக் கும்பிட்டுச் செல்வர்.

  அடியார்க்கு நல்லாரும் கூத்தை அவிநயம், நாடகம் என இரண்டாகப் பிரிக்கின்றார். அதில் அவிநயமென்பது, ஒரு குறிப்பிட்ட பாடலுக்கு உடலசைவு செய்து ஆடும் நடனமென்றும், நாடகமென்பது ஒரு கதை தழுவி வரும் பாடலுக்கோ அல்லது ஒரு விரிவுரைக்கோ தக்கவாறு ஆடுதல் என்றும் விளக்கப்படுகிறது. கூத்தின் வளர்ச்சியே நாடகம் என்றால் மிகையாகாது.

  கூத்துகள் உற்சாகப் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் தெய்வபக்தி நல்லொழுக்கம், அழகுணர்ச்சி முதலானவற்றுடன் மக்களின் வாழ்க்கைக்குப் பயன்படும் வகையிலும் அமைகிறது.

  நாட்டுப்புறக் கூத்துகள் நம்பிக்கையின் அடிப்படையிலும், தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையிலும் நடத்தப்படுகிறது. திருமணமாகதவர்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என நடத்தப்படும் “காமன் கூத்து” இதனை உணர்த்துகிறது. காமன் கூத்து நடைபெறும் பகுதிகளில் விரைவாக திருமணங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 16:54:47(இந்திய நேரம்)