தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • கட்சிப் பாட்டு்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  கட்சிப் பாட்டு என்பது வில்லிசைக் கலையுடன் தொடர்புடையது. மலையாள மொழியில் ‘மல்சரப் பாட்டு’ எனக் கூறுகின்றனர். இரண்டு குழுக்கள் தனிக் கட்சிகளாகப் பிரிந்து பட்டிமன்றம் போல் விவாவதம் நிகழ்த்துவதால் இது கட்சிப் பாட்டு எனப் பெயர் பெற்றது.

  கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் தல்லுகவி என்ற நாட்டுப்புற கலையுடனும் வில்லிசைக் கலையுடனும் இணைந்து கட்சிப் பாட்டு உருவானது. வில்லிசைக்குரிய வில்லைப் பயன்படுத்துதாலும், வில் இசைக்குரிய கதைகளே இக்கலையிலும் பாடப்படுவதாலும் இக்கலைக்கும் வில்லிசைக்கும் உள்ள தொடர்பு விளக்குகின்றது.

  கலையை உருவாக்கியவர் யார் என்பதைக் குறிப்பிட்டுக் கூற முடியவில்லை. ஆனால் கட்சிப் பாட்டிற்குரிய பாடல் வடிவங்களை எழுதிப் பயிற்றுவித்தவராக மணவாளக்குறிச்சி, மாதவன், ஆசான், கண்ணனூர் சங்கரன் ஆசான் ஆகியோரைக் குறிப்பிடலாம். இக்கலை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவானது என்று கூறலாம்.

  இக்கலையைப் பெரும்பாலும் நாடார், ஈழவர், கிருஷ்ண வகையினர் ஆகிய சாதியினர் நிகழ்த்துகின்றனர். பெரும்பாலும் ஆண்களே இக்கலையில் பங்கு கொள்கின்றனர். சில குழுக்களில் இளம்பெண்களும் இடம்பெறுகின்றனர்.

  கட்சிப் பாட்டு நிகழ்த்துக்கலைகள் ஒரே மேடையில் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து நிகழ்த்தப்படுகிறது. ஒரு குழுவில் 6 முதல் 8 பேர் வீதம் ஆக 12 பேர் முதல் 16 பேர் இருக்கின்றனர். ஒவ்வொரு கட்சிக் குழுவிற்கும் தனித்தனி தலைவர் உள்ளனர். குழுத்தலைவர் ஆசான் எனப்படுவார். இரண்டு கலைஞர்களில் குழுத்தலைவர்கள் தலைப்பாகை அணிந்திருப்பார். பிற கலைஞர்கள் விருப்பப்படி ஆடை அணியலாம்.

  படம் குழுப்படம்

  கட்சிப் பாட்டிற்குரிய இசைக் கருவிகள் வில், குடம், டோலக், ஜால்ரா, கட்டை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இதில் குறைந்த அளவு மணிகளே தொங்கவிடப்பட்டிருக்கும். கட்சிப் பாட்டிற்கென்று தனியாகக் குடம் கிடையாது. கோவிலைச் சார்ந்தவர்களிடமிருந்தே மண் அல்லது செப்புக் குடத்தைப் பெறுகின்றனர்.

  கட்சிப் பாட்டின் குழுத்தலைவர் மேடையின் நடுவில் தான் அமரவேண்டும் என்ற கட்டாயமில்லை. அவரது குழுவைச் சார்ந்தவர்களின் நடுவிலும் அமர்ந்து கொள்ளலாம். வில்லை இயக்குபவர் மட்டும் முன்புறம் நடுவில் அமருவார்.

  வில்லிசையைப் போன்றே இக்கலையிலும் அவை வணக்கம், குரு வணக்கம், கடவுள் வாழ்த்து ஆகியன பாடப்படுகின்றன. இப்பாடல்களை இரு குழுவினரும் இணைந்தோ அல்லது தனித்தோ பாடுகின்றனர். கதை தொடர்பான பாடலை ஒரு குழுத்தலைவர் பாடுவதும் அக்குழுவின் பின் பாட்டுக்காரர்கள் இணைந்து பாடுவதும், அடுத்த குழு அதற்குப் பதில் பாடுவதும், அந்தக் குழுவின் பின் பாட்டுக்காரர்கள் இணைந்து பாடுவதும் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

  கட்சிப் பாட்டுக்குரிய பாடல்கள் தமிழ் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உள்ளன. ஒரு பாடலைத் தமிழிலும் அடுத்த பாடலை மலையாளத்திலும் பாடலாம். கட்சிப் பாட்டுக் கலையின் ரசிகர்களின் பெரும்பாலோர் கிருஷ்ண வகைச் சாதியினராக உள்ளனர். இருபாலாரும் இக்கலை நிகழ்ச்சிக்கு வந்தாலும் ஆண்களே பெருமளவு உள்ளனர். இரு குழுத்தலைவர்கள் மற்றும் துணைக் கலைஞர்களின் பாடல்கள் கேள்விகளுக்கு ஏற்றவாறும் பார்வையாளர்களுக்கு ஏற்றவாறும் எதிர் வினை புரிகின்றனர். இதே செயல் இறுதியில் இரு கட்சிச் சண்டையாகவும் மாறியிருக்கிறதாம்.

  கட்சிப் பாட்டுக் கலைஞர்களில் பெரும்பாலோர் கூலித்தொழிலாளர்களாகவும் விவசாயிகளாகவும் உள்ளனர். மிகக் குறைந்த அளவே ஊதியம் பெறுகின்றனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:48:20(இந்திய நேரம்)