தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மற்போர்

  • மற்போர்

    முனைவர் சி.சுந்தரேசன்
    துறைத்தலைவர்
    நாட்டுப்புறவியல் துறை

    படைக்கலன்கள் ஏதுமின்றி இரு உடல்கள் மோதிக்கொள்ளும் வீர விளையாட்டே “மற்போர்” என்பர். மனித வரலாற்றின் தொடக்கக் காலத்திலிருந்து எல்லா வகையான மனித இனங்களிடத்திலும் வழக்கத்திலிருந்து வந்துள்ளது. ஒரு குழு அல்லது இனத்தில் வலிமை மிக்க ஒருவன் தலைவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த வழக்கத்தின் பின்புலத்தில் இம்மற்போர்க்கலை தோன்றி உள்ளதாகக் கருதுகின்றனர். வலிமையும், ஆற்றலும் மிக்க ஒருவன் தலைவனாக இருந்தால் தான் தங்கள் எதிரிகளிடமிருந்து காக்க முடியும் என எண்ணியதே பலமிக்கவரைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தமைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

    எனவே, பெரும்பாலும் மற்போரை ஒத்த மற்போர் முறை இந்தியாவில் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வந்துள்ளது எனச் சான்றுகள் ரிக்வேதத்திலும், இராமாயணம், மகாபாரதம் போன்ற தொன்மையான காப்பியங்களிலும் கிடைக்கின்றன. சீனாவில் இம்மற்போர் கி.மு 300 க்கு முன் இருந்தே வந்துள்ளதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பண்டைய கிரேக்கர்கள் ஒலிம்பியா என்னும் சமவெளியில் சீசு என்னும் தம்முடைய தேவதையின் வழிபாடாக நடத்தி வந்த ஒலிம்பிக் ஆட்டங்களில் மற்போர் ஒன்றாக இருந்து வருகின்றது. மற்போரில் வெற்றி பெற்ற மல்லன் அக்காலத்தில் மக்களால் பெரிதும் மதிக்கப் பெற்றான். நாடு, மொழி, இனம், மதம் வேறுபாடு இன்றி அனைவரும் இக்கலையில் பெருவிருப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

    மல்யுத்தம் என உலகம் முழுவதும் போற்றிப் புகழப்பட்டு வருகின்ற வீர விளையாட்டு பண்டைய தமிழகத்தில் மற்போர் என்னும் பெயரால் தமிழர்தம் போர் முறைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. ‘மல்’ என்பது வலிமை எனப் பொருள்படும். ஒருவன் தன் உடல் வலிமையால் செய்யும் போர் மற்போர் என்பர். மற்போர் புரியும் வீரன் மல்லன் என்று அழைக்கப் பெற்றான். தொல்காப்பியம் புறத்திணையில் இடம்பெற்றுள்ள வாகைத் திணையில் மற்போரின் வெற்றியைக் குறிக்கும் ஒரு துறையான ‘மல்வென்றி’ என்னும் துறை இடம் பெற்றுள்ளது. இதனால் மற்போர் தமிழகத்தில் பண்டு தொட்டே நிலவி வந்துள்ளது என அறியலாம். புறநானூற்றில் மற்போர் நிகழ்ச்சி ஒன்று பாடலாக இடம்பெற்றுள்ளது.

    இலக்கிய நூல்களில் மல்லரைப் பற்றிய செய்திகள் கலித்தொகை (52, 134) ஐந்திணை ஐம்பது (1) புறப்பொருள் வெண்பாமாலை (9, 4, 12, 3) போன்ற நூல்களில் காணப்படுகின்றன. பாரதப் போரை விவரித்து மகாபாரதத்தின் வீமன், சராசந்தன், கீசகன், கண்ணன் போன்றோர் சிறந்த மற்போர் புரியும் ஆற்றலுடையவர்களாக விளங்குகின்றன. இப்பாடல்களில் இடம்பெரும் செய்திகளைத் திரட்டினால் இந்திய மற்போர்க் கலையின் இலக்கணத்தை வரையறுத்துக் கூறிவிடலாம்.

    எனவே, இருவர் கைகோத்துக் கால்களாலும், தலையாலும், இடித்தும், உரைத்தும் ஒருவரை ஒருவர் வெற்றி பெற வேண்டிச் செய்யும் போர் மற்போராகும். எனவே மற்போர்களின் வகைகளை எட்டு வகையாகப் பிரிக்கலாம். தொடக்கத்தில் பகைவரைக் கொல்லும் போர் முறைகளில் ஒன்றாக இருந்த மற்போர் பின்னர் வீர விளையாட்டுகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மற்போர் கழகங்கள் உள்ளன. அவை நடத்தும் போட்டிகள் இந்தியா மற்போர் பெடரேசன் கண்காணிப்பில் நடைபெறும் முதல் உலகப்போருக்குப் பின் தொழில்முறை மற்போரின் போக்குகளினால் மற்போர் அழியத் தொடங்கியது விழாக்களில் மட்டுமே நடத்தப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 18:04:35(இந்திய நேரம்)