தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருமணச் சடங்கு

  • திருமணச் சடங்கு

    முனைவர் சி.சுந்தரேசன்
    துறைத்தலைவர்
    நாட்டுப்புறவியல் துறை

    திருமணம் – விளக்கம்

    திருமணம் என்ற சொல்லுக்கு விளக்கம் பார்க்கும் போது இருவரும் ஒன்று சேரும் நிலையைக் குறிப்பதாகும். ஒத்த பருவம் எய்திய ஆணையும் பெண்ணையும் கணவன் மனைவியாக்கியதற்குக் கூறப்படுவதாகும். எல்லா மனித இனங்களிடையேயும் திருமணச் சடங்கு நிறைவேற்றப்படுகிறது. சமூகத்திலுள்ள மற்றவர்களுக்கு இச்சம்பவத்தைத் தெரிவிப்பதற்கே இத்திருமண முறை பின்பற்றப்படுகிறது.

    1. திருமணத்திற்கு முன் நடைபெறும் சடங்கு

    2. திருமணத்தன்று நடைபெறும் சடங்கு

    3. திருமணத்திற்கு பின் நடைபெறும் சடங்கு

    என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

    திருமணத்திற்கு முன் நடைபெறும் சடங்கு

    பெண் பார்த்தல்

    உறவுக்காரர் அல்லது நண்பர்கள் மூலம் பெண் எங்குள்ளது என்று முதலில் விசாரித்துப் பெண்ணைப் பார்ப்பார்கள். பெண் பிடித்து விட்ட பிறகு மாப்பிள்ளை வீட்டார் ஒரு நாள் வருகிறோம் என்று கூறி விட்டுச் சென்று, மறுபடியும் ஒரு நாள் வந்து பெண் எங்களுக்குப் பிடித்திருக்கிறது, நீங்கள் மாப்பிள்ளை வீடு பார்க்க வாருங்கள் என்று கூறுவார்கள். உணவு சாப்பிட்டுச் சென்று விடுவார்கள்.

    மாப்பிள்ளை பார்த்தல்

    பெண் பார்க்கச் செல்லும் போது மாப்பிள்ளையும் கூடச் செல்வார். சில சாதியங்களில் மாப்பிள்ளை செல்வதில்லை. ஆனால் மாப்பிள்ளை வீடு பார்க்கச் செல்லும் போது பெண் கூடவே செல்லும் பழக்கமில்லை. பெண்ணின் தாய், தந்தை, தாய்மாமன் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சென்று மாப்பிள்ளை வீடு சென்று மாப்பிள்ளை பிடித்திருக்கிறது என்று கூறி உணவு சாப்பிட்டு, திருமணத்தை எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுப்பார்கள். சாதகம் பொருந்தி இருந்தால் மட்டும் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

    நிச்சயம் செய்தல்

    பெண் வீட்டாருக்கும் பெண்ணுக்கும், மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டாரையும் பிடித்து இருந்து–மாப்பிள்ளை வீட்டாருக்கும் மாப்பிள்ளைக்கும் பெண்ணையும் பெண்ட்டாரையும் பிடித்துவிட்டால் இருவீட்டாரும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சிதான் “நிச்சயம் செய்தல்” இதைத்தான் பரிசம் போடுதல் என்று கூறுகிறார்கள்.

    “பரிசம் போட்டாலே பாதி பொண்டாட்டி”

    “பரிசம் போட்டாலே பாதி புருசன்” என்று கூறப்படும்.

    முகூர்த்த ஓலை

    பரிசம் போட்ட பிறகு பெண் மாமன் பெண் வீட்டு உறவினர்கள் மாப்பிள்ளை மாமன் – மாப்பிள்ளை வீட்டு உறவினர்கள் இணைந்து வள்ளுவரின் மூலம் நல்ல நாள் பார்த்து, இரு வீட்டார் சம்மத நாளில் திருமண நாள் குறிக்கப்படுகிறது. ஒரு வெள்ளைத் தாளை எடுத்து நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவி, பெண் - மாப்பிள்ளை இவர்களை மையமாக வைத்து, இன்னார் மகளுக்கும் இன்னார் மகனுக்கும் திருமணம் நடைபெறும் என்று எழுதித் தட்டில் வைத்துவிடுவார். இதை இரு வீட்டுத் தாய் மாமனும் தட்டு மாற்றிக் கொள்வார்கள்.

    பத்திரிக்கை படைத்தல்

    அச்சடித்து வந்த பத்திரிக்கையை ஒரு நல்ல நாள் பார்த்து தெய்வத்தை வேண்டி உறவுக்காரர் மத்தியில் படைக்கப்படுகிறது. படைக்கப்பட்ட பத்திரிக்கையில் நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவி, அந்தப் பத்திரிக்கை தெய்வத்திற்கு வைக்கப்படுகிறது

    பந்தல் போடுதல்

    திருமணத்திற்கு முன்பு ஐந்தாம் நாள் பந்தல் போடப்படுகிறது. பச்சை மூங்கிலை வெட்டி முகூர்த்தக்கால் நடப்படுகிறது. ஏனென்றால், மூங்கிலைப் போல் வம்சம் விருத்தி அடைய வேண்டும் எனவும், இரு பக்கம் வாழை மரம் கட்டுவார்கள். வாழையடி வாழையாக்க் குடும்பம் வளரவேண்டும் என்பதற்காகவும் இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

    நலுங்கு வைத்தல்

    பந்தல் போட்ட பிறகு மாலை நேரத்தில் பெண் வீட்டில் பெண்ணுக்கும் மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளைக்கும் நலுங்கு வைப்பது வழக்கமாக உள்ளது. நலுங்கு என்ற சொல் நலங்குதல் நலம் – பொங்குதல் என்ற சொல்லின் சுருக்கம் என்பார்கள். மணவாழ்க்கையில் மணமக்கள் அனைத்து நலங்களையும் வளங்களையும் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் வைக்கப்படும் ஒரு நிகழ்வு.

    பெண் அழைப்பு

    திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் நிகழ்வு இது. மாலையில் மாப்பிள்ளை வீட்டார் வருவார்கள். வரும்போது புதுப்புடவை, பூ, பழம், சந்தனம், குங்குமம், மாலை, நெல் போன்றவற்றை எடுத்து வந்து, பெண்ணை அலங்காரம் செய்து உறவுக்காரர் – அவ்வூர் நாட்டாண்மை – தாய்மாமன் – மாப்பிள்ளை வீட்டார் முன்னிலையில் சபையில் அமரவைத்து இருப்பார்கள். பெண்ணுக்குப் பொட்டு வைத்து பணம் வைத்து கொடுப்பார்கள். பெண் முதியவர்களின் காலில் விழுந்து வாழ்த்துப் பெறுவாள். பெண் வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிட்டு விட்டு நல்ல நேரம் பார்த்து பெண்ணை அனுப்புவார்கள். வெள்ளிக்கிழமை பிறந்த பெண்ணாக இருந்தால் வாசற்படிக்கு முன் நிற்க வைத்து எதாவது தடையை (மோதிரம்) கழற்றி கொண்டு விடுவார்கள். பழங்காலத்தில் மாட்டு வண்டியிலும் இக்காலத்தில் வாகனத்திலும் பெண்ணை அழைத்து வரும் பழக்கம் உள்ளது.

    திருமணத்தன்று நடைபெறும் சடங்கு

    பெண்ணை அழைத்து வந்து மணமகனுக்குத் தெரிந்த வீட்டில் தங்க வைப்பது வழக்கம். இன்று நகரத்திலுள்ள மண்டபங்களில் திருமணம் நடைபெறுவதால் மண்டபங்களிலே பெண்ணைத் தங்கவைத்து விடுகிறார்கள். விடிந்து பெண்ணை அலங்காரம் செய்து தயார் நிலையில் வைத்திருப்பார்.

    அரசாணிக்கால் நடுதல்

    ஒதியங்கால் தரையில் ஊன்றி இருக்கும். அதனைத் தொட்டவாறு ஐந்து அல்லது ஏழு பானைகள் அடுக்கி இருக்கும். ஒதியங்காலில் மா இலை, நாணல் கட்டப்பட்டு இருக்கும். அம்மிக்கல், குத்துவிளக்கு, வாழை இலை, அரிசி, அதன் மேல் சிறிய கலையத்தில் மா இலை வைத்து, நடுவில் தேங்காய் மஞ்சள் பூசி வைக்கப்பட்டிருக்கும். சிறு குச்சுகளை வைத்துத் தீ வளர்க்கப்படும். முதலில் மாப்பிள்ளை வந்து அமர்ந்து அவர் கையில் கங்கணம் கட்டி மல்லிப் பூ மாலை போட்டு, சீக்காய் கழித்து, பட்டு வேட்டி பட்டுச் சட்டை, துண்டு, தேங்காய் பூ மணமாலை வைத்த தாம்பாலம் கொடுக்கப்படும். அதேபோல் பெண்ணையும் அழைத்து, சிறிய மாலை போட்டு, சீக்காய் கழித்து, ஒரு தாம்பூலத்தில் பட்டுப்புடவை, பட்டு ரவிக்கை, மணமாலை, பூ, தேங்காய் போன்றவை வைத்து மணமகள் தாய்மாமனிடம் கொடுக்கப்படும். அவர்கள் அலங்காரம் செய்து மணமேடைக்கு வருவார்கள்.

    அரசர் காலத்தில், அரசனின் அனுமதி பெற்றுத்தான் திருமணம் நடைபெற வேண்டும். அதன்படி அரசவையிலிருந்து வருகின்ற கோலை வணங்கிய பிறகுதான் திருமணச் சடங்குகளைத் தொடர வேண்டும். இந்த மரபின் தொடர்ச்சிதான் இன்றைய நாளும் அரசனின் ஆணையாக வந்த காலை அரசானைக்காலாகக் கொண்டு சடங்கு செய்து வருகின்றனர்.

    பாத பூசை செய்தல்

    மணமக்கள் தங்கள் பெற்றோருக்குப் பாத பூசை செய்வார்கள். எவ்வாறெனில் ஒரு தாம்பாளத்தில் பெற்றோர்களை நிற்க வைத்து அவர்களின் பாதங்களைக் கழுவி பாதத்தின் மேல் சந்தனம் குங்குமத்தை வைத்து பூக்களைத் தூவி வணங்குவார்கள்.

    சபையோர் தாலியை வாழ்த்தி வணங்குதல்

    ஒரு தாம்பூலத்தில் மங்கல அரிசியும் தேங்காய் மேல் தாலியைக் கயிற்றோடு வைத்து அனைவரிடமும் காட்டி வாழ்த்துப் பெறுவர். அவர்கள் தாலியை வணங்கி, தட்டில் உள்ள மங்கல அரிசியைக் கொஞ்சமாக அள்ளி வைத்துக்கொள்வர். அந்த அரிசியைத் தாலிக்கட்டும் போது மணமக்கள் மேல் தூவுவார்கள்.

    தாலிக்கட்டுதல்

    வாழ்த்து பெற்று வந்த தாலியை வள்ளுவர் மணமகனிடம் கொடுப்பார். அதை எடுத்து மணமகன் மணமகள் கழுத்தில் கட்டுவார். அப்போது அனைவரும் மங்கல அரிசியை மணக்கள் மீது தூவுவார்கள். முதல் இரண்டு முடிச்சை மாப்பிள்ளை போடுவார். மூன்றாம் முடிச்சை மாப்பிள்ளையின் சகோதரி போடுவார். மணமகன் மணமகளை அணைத்தவாறு பின்பக்கமாகக் குங்குமத்தால் பொட்டு வைப்பார். முதலில் தாய் மாமன் பெண்ணின் நெற்றியில் (காசு) பட்டம் கட்டுவார். இதன் பிறகு நாத்திகள் மணமகள் நெற்றியில் பட்டம் கட்டுவர். அதன் பிறகு மற்றவர்கள் (காசு) பட்டம் கட்டுவார்கள். கல்யாண மாலையில் மனையில் இருக்கும் போது சுமங்கலிப் பெண்கள் வாழ்த்துவார்கள். மணமக்கள் வேட்டியில், மணமக்கள் சீலை முந்தானையில் முடிச்சு போட்டுத் தீயைச் சுற்றி வருவார்கள். தீ வலம் வந்த பிறகு அம்மிக்கல்லில் மணமகள் காலை வைக்கச் சொல்லி நாத்தனார் மிஞ்சி அணிவிப்பார். மொய் எழுதி, பரிசு பொருட்களை வழங்கி விருந்து சாப்பிட்டுச் செல்வார்கள்.

    மண மாலையை கழட்டுதல்

    மணமக்கள் கழுத்திலிருக்கும் மாலையைத் தானாகக் கழட்டும் பழக்கம் இல்லை. தாய்மாமன் மாலையைக் கழட்டுவார். அதற்குத் தாய் மாமனுக்குப் பணம் கொடுப்பார்கள். அரசாணிப் பானையை எடுத்து அதிலுள்ள ஒதியங்காளை வீட்டிற்குச் சென்று மாப்பிள்ளை வீட்டுத் தோட்டத்தில் நடுவார்கள்.

    வரவேற்பு

    இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மணமகள் வீட்டில் வரவேற்பு நடைபெறும். மாலை கழுத்துடன் அமர்ந்திருக்கும் மணமக்களை வரவேற்பார்கள். அங்கேயும் மணமக்களுக்கு மாலையிடுதல், சீர் வரிசை பொருட்கள் எழுதுதல், மொய் எழுதுதல், உணவு கொடுத்தல் போன்றவை நடைபெறும்.

    சாந்தி முகூர்த்தம்

    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மணமக்கள் மணமகன் வீட்டிற்கு வந்து விடுவார்கள். மாப்பிள்ளை வீட்டாரிடம் சாந்தி முகூர்த்தத்திற்குரிய பொருளை வாங்கி வரும்படி கூறுவார்கள். அதன்படி பால் பழ வகைகள், பூ, வெற்றிலை, பாக்கு, இனிப்பு வகைகள் வாங்கி வருவார்கள். பெண்ணை அலங்காரம் செய்து ஒரு சொம்பில் பாலைக் கொடுத்து வயதான சுமங்கலிப் பெண்கள் மாப்பிள்ளை இருக்கும் அறைக்குள் அனுப்புவார்கள். பிறகு அவர்களின் இல்லற வாழ்வைத் தொடங்குவார்கள்.

    திருமணத்திற்கு பின் நடைபெறும் சடங்கு

    மறுவீடு அழைத்தல்

    சாந்தி முகூர்த்தம் முடிந்த பிறகு பெண்ணையும் மாப்பிள்ளையையும் பெண் வீட்டிற்கு அழைப்பார்கள். இதைத் தனியழைப்பு அல்லது மறுவீடு அழைத்தல் என்று கூறுவர். தாலிப்பெருக்கிப் போடுதல்.

    திருமணமான மூன்றாம் மாதம் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வருவார். மாப்பிள்ளைக்கு வேட்டி, சட்டை, துண்டு, பெண்ணிற்குப் புடவை, இரவிக்கை போன்றவற்றை எடுத்துக் கொடுப்பார்கள். மஞ்சள் நூல் கயிற்றில் இரு பக்கமும் காசுகளை கோர்த்து நடுவில் தாலி இருக்கும். அதைப் பெண் அணிந்துக்கொள்வார்.

    ஆடி அழைப்பு

    பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஆடி மாதம் சேர்த்து வைக்கும் பழக்கமில்லை. ஆடி மாசத்தில் ஒன்று கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும். வெயில் காலத்தில் பிறக்கும் குழந்தை வெயில் துன்பத்திற்கு உள்ளாகும். இதனால் பெண்ணையும் மாப்பிள்ளையும் சேர்த்து வைப்பதில்லை.

    வரிசை எடுத்தல்

    தலை (முதல்) தீபாவளி, தலைப் பொங்கலுக்கு வரிசை எடுத்தும் ஆண்டுதோறும் பண்டிகைக் காலங்களிலும் வரிசை கொடுக்கப்படும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. (தகவலாளர் சி.புண்ணிய மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம் )

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 17:11:57(இந்திய நேரம்)