தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தேவராட்டம்

  • தேவராட்டம்

    முனைவர் ஆ.சண்முகம் பிள்ளை
    உதவிப் பேராசிரியர்
    நாட்டுப்புறவியல் துறை

     

    கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சார்ந்த ஆண்கள் ஆடுகின்ற ஆட்டம் ‘தேவராட்டம்’ எனப்படுகிறது. தேவர்களை வணங்கி ஆடுகின்ற ஆட்டம் என்பதால் தேவராட்டம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

    தேவராட்டத்தின் தோற்றம் குறித்த கதை அக்கலைஞர்களிடம் வழக்கில் உள்ளது. இக்கதை தேவராட்டத்தை ஆடும் கம்பளத்து நாயக்கர்களின் ஒரு பிரிவினரான சில்லவார்களுடன் தொடர்புடையது.

    கலைக்கோட்டு மாமுனிவரின் மகள் ஆண் உறவின்றி புத்திரப் பேறு வேண்டும் எனத் தந்தையிடம் வரம் கேட்டாள். அவர் அவருக்கு எலுமிச்சம் பழம் ஒன்றைக் கொடுத்தார். அப்பழத்தின் மூலம் ஒரு குழந்தை பிறந்தது. அவர்கள் எலுமிச்சம் பழத்தைக் கண் பழம் என்றும் அழைப்பர். தேவரிஷியின் வம்சத்தில் பிறந்த அக்குழந்தையின் மரபினர் கண்பழத்தார் – கம்பழத்தார் எனப் பெற்றனர். இவர்கள் தேவரின் ஆட்டத்தை அறிந்து ஆடினர். இவர்கள் ஆடிய ஆட்டம் தேவராட்டம் ஆனது.

    தேவராட்டத்தின் தோற்றம் குறித்த வேறு ஒரு கதையும் உள்ளது. ஏழு உலகங்களையும் படைத்த பின்னர் சிவபெருமானும் பார்வதியும் தேவர் உலகில் வீற்றிருந்தார்கள். அப்போது தேவர் உலகை உருவாக்கிய சிற்பி விஸ்வகர்மா புதிய இசைக் கருவி ஒன்றைப் படைத்தார். அது உடுக்கையைப் போன்று இருந்தது. ஆனால் உடுக்கையைவிட உருவத்தில் பெரிதாக இருந்த அந்த இசைக்கருவியைத் தேவர்களிடம் கொடுத்து இசைக்கும்படி சொன்னார். தேவர்கள் அந்தக் கருவியை ‘தேவதுந்துபி’ என்று அழைத்தனர்.

    தேவர்கள் அந்த இசைக் கருவியை இயக்க முயன்றனர் முடியவில்லை. அதை இயக்க யாருமே முன்வராத நிலையில் சிவனுக்கு மாலை கட்டும் பண்டாரம் வந்தார். அவர் சிவனின் கால்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு தேவதுந்துபியை இயக்கினார். அந்தக் கருவியின் தாளத்திற்கேற்பத் தேவர்களும் ஆடத் தொடங்கினர். அந்த ஆட்டம் தேவராட்டம் எனப் பெயர் பெற்றது.

    தமிழகத்தில் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் முதலான கம்பளத்து நாயக்கர்கள் வாழும் பகுதிகளில் இந்த நிகழ்த்துக் கலை அதிகமாகக் காணப்படுகிறது.

    தேவராட்டத்தில் எட்டு முதல் பதின்மூன்று பேர் ஆடவேண்டும் என்பது பொது மரபாக இருந்தாலும் ஆடுவோர் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை. நூறு பேர் கூட ஒரே சமயத்தில் ஆடலாம். இந்த ஆட்டத்தின் போது ஆண்கள் ஒப்பனை செய்து கொள்வதிலை. அண்மைக் காலமாக இக்கலை மேடையில் நிகழ்த்தப்படுகிறது. அச்சமயத்தில் ஆடுபவர்கள் ஒரே வண்ணத்தில் ஆடை அணியும் போக்குக் காணப்படுகிறது.

    இடையில் சாதாரணமாக உடுத்தும் வேட்டி, கைகளில் சிறிய துணி, கால்களில் சலங்கை, தலையில் தலைப்பாகை, சலங்கை மணிகளை நீளமாக நூலில் கோத்துக் காலில் கட்டிக் கொள்கின்றனர்.

    இவ்வாட்டத்தில் பாடல்கள் பாடப்படுவதில்லை. இசைக்குத் தகுந்தாற்போல் ஆடும் ஆட்டமாக உள்ளது. உறுமி என்னும் இசைக் கருவி இந்த ஆட்டத்தின் போது இசைக்கப்படுகிறது. இதனைத் ‘தேவதுந்துமி’ என்று கம்பளத்து நாயக்கர் அழைப்பர். இக்கருவி வேங்கை மரத்தில் செய்யப்படுகிறது. நடுவில் குறுகியும் ஓரங்களில் பருத்தும் காணப்படும். ஆட்டிக்குட்டியின் தோலைப் பயன்படுத்தி இக்கருவியை உருவாக்குகின்றனர். இடப்பக்கத் தோலில் வளைந்த நொச்சி குச்சியை அழுத்தி இழுத்து ஓசை எழுப்புவர். வலப்பக்கத் தோலில் வளைந்த விராலி அல்லது புரசன் குச்சியைப் பயன்படுத்தி அடித்து ஒலி எழுப்புவர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ‘மாலா’ என்னும் பிரிவினர் இக்கருவியை இசைக்கின்றனர்.

    இவ்வாட்டத்தின் ஆடுகளம் சூழலுக்கேற்ப அமைகிறது. தேவராட்டத்தில் பயிற்சி பெற்ற ஒருவர் தலைமை ஏற்று ஆடுவார். மற்றவர்கள் அவர் உடலசைவுகளைக் கவனித்து அவனைப் பின்பற்றி ஆடுவார்கள். தேவராட்டத்தில் இருபத்தி மூன்று ஆட்டங்கள் உள்ளதாகக் கூறுவர். நிலுடிஜம்ப்பம், சிக்கு ஜம்ப்பம் என்பன போன்ற பெயர்களால் ஆட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு வகையான ஆட்டத்திற்கும் உறுமி மேளத்தில் இசைக்கப்படும் தாளக்கட்டுக்கள் மாற்றமடைகின்றன. பெண்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கமுடியும்.

    தேவராட்டத்தில் பதினெட்டு அடவுகள் உள்ளன. இவற்றை அடிப்படை அடவுகள் என்று கூறலாம். அடிப்படை அடவுகளை நான்கு நிலைகளில் வேறுபடுத்துவதன் மூலம் 72 அடவுகளை உருவாக்க இயலும். இந்த 72 அடவுகளும் ஆறு சப்தக் கூறுகளை உடையவை. ஒவ்வொரு அடவும் தனித்தனியே ஆடப்படும் போது இந்த ஆறு ஒலிக் கூறுகள் மட்டுமே மறுபடியும் மறுபடியும் இசைக்கப்படுகின்றன. இவ்வாறு ஆடப்படும் அடவுகள் இணைந்தே தேவராட்டமாக உருப்பெறுகிறது. இக்கலையின் அடிப்படை அடவுகள் பதினெட்டும் கட்டாயமாக ஆடப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது.

    ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வந்த கம்பளத்து நாயக்கர்களின் இனக்குழு ஆட்டமாகத் தேவராட்டம் கருதப்படுவதால் இக்கலை ஆந்திராலிருந்து தமிழகத்திற்கு வந்ததாகக் கருதலாம். இந்த ஆட்டத்தைப் பிற சாதியைச் சார்ந்தவர்கள் பெரும்பாலும் ஆடுவதில்லை. கர்நாடகத்திலிருந்து தமிழகத்தில் குடியேறிய ஒக்கலிகள், குறும்பைக் கவுண்டர் ஆகிய சமுகத்தவரிடையேயும் இக்கலையைக் காணமுடிகிறது. ஆந்திரத்தைச் சார்ந்தவர்கள் ‘தேவுடு ஆட்டம்’ என்று தேவராட்டத்தைக் குறிப்பிடுவர்.

    கம்பளத்து நாயக்கர்களின் வாழ்வியல் சடங்குகளிலும் வழிபாட்டுச் சடங்குகளிலும் தேவராட்டம் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. பூப்புச் சடங்கில் பதினாறாம் நாள் பெண்ணை மந்தைக்கு அழைத்துச் சென்று சடங்குகளைச் செய்து விட்டு வீட்டிற்கு வருகையில் தேவராட்டம் ஆடப்படுகிறது. மணமகனைக் குதிரையில் வைத்து திருமண ஊர்வலமாக அழைத்துச் செல்லும் போது தேவராட்டம் ஆடப்படுகிறது. மணப் பெண் சில சடங்களைச் செய்து முடித்து விட்டு வீடு திரும்பும் போது இவ்வாட்டம் ஆடப்படுகிறது. இறப்பு நிகழ்வில் பதினாறாம் நாள் மந்தையிலிருந்து வீடு திரும்பும் போது இக்கலையை நிகழ்த்துகின்றனர்.

    ஆடி மற்றும் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் சக்கம்மா வழிபாட்டின் போது தேவராட்டம் நிகழ்த்தப்படுகிறது. வீரபாண்டியிலுள்ள கௌமாரியம்மன் சித்திரைத் திருவிழாவில் ஐந்தாம் நாளன்று இரவில் பல ஊர்களைச் சார்ந்த கம்பளத்து நாயக்கர்களும் வந்து தேவராட்டம் ஆடுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 18:08:41(இந்திய நேரம்)