தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தலித் நிகழ்த்துக் கலைகள்

 • தலித் நிகழ்த்துக் கலைகள்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  தலித் நிகழ்த்துக் கலைகள் என்பன தலித்துகளால் நிகழ்த்தப்படக்கூடிய நாட்டுப்புறக் கலைகளாகும். இக்கலைகள் காண்போருக்கும் நிகழ்த்துவோருக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்படுத்துவதாக உள்ளன. ஏனெனில் இவை மக்களின் வாழ்வை அப்படியே பிரதிபலிக்கும் தன்மையுடையனவாகும். இக்கலைகளின் நிகழ்விடம் பெரும்பாலும் ஊரின் மையப்பகுதியாக, ஊரைச் சார்ந்த இடமாக, குறிப்பாக மந்தை, பொட்டல், வயல்பகுதி என அமைவது இயல்பு. இஃது தற்போது உலக அரங்கில் அரிய பெரிய மேடைகளைத் தன்வயப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும். தலித் நிகழ்த்துக் கலைகள் பற்றியும் அதன் தன்மை மற்றும் தற்கால நிலை குறித்தும் பின்வருமாறு காண்போம்.

  தலித் கலைகள் என்பன உழைக்கும் வர்க்கத்தினரான தலித் மக்களால் தங்களது உழைப்பின் வலி, சோர்வு நீங்க வேண்டியும், பொழுதுபோக்கிற்காகவும் ஏற்படுத்திக் கொண்டவையாகும். இவர்களால் நிகழ்த்தப்படும் கலைகளாகக் கரகாட்டம், குறவன் – குறத்தி ஆட்டம், இராசா ராணி ஆட்டம், மாடுபிடி ஆட்டம் போன்ற முகப்போலி உரு நடனங்கள், காவடி ஆட்டம், தப்பாட்டம், கும்மி ஆட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம் போன்ற ஆட்ட வகைகள் உள்ளன. தவில், தப்பு (பறை), பம்பை, உறுமி, உடுக்கை போன்ற இசைக்கருவிகளைக் கொண்டிசைக்கப்படும் இசை வகைகளும்; தெம்மாங்குப் பாடல்கள், சிந்துப் பாடல், கண்ணி, நையாண்டி, இசைப்பாடல்கள், ஒப்பாரி, தாலாட்டு, கோடாங்கி இசைப்பாடல், வண்டிக்காரன் பாட்டு ஆகியனவாகும். தொழிற் பாடல்கள் மற்றும் சடங்கு முறைப் பாடல்களும் இவ்வகையினவாகும். காண்போர் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் நாடகப் பாங்குடன் கூடிய கூத்துக் கலைகளான இராசா ராணி ஆட்டம், கணியான் கூத்து, டப்பாங்கூத்து மற்றும் தெருக்கூத்து ஆகியவற்றில் வரும் கோமாளியும், தோல்பாவைக் கூத்தில் வரும் உச்சிக்குடும்பன் மற்றும் உழுவைத் தலைவன் ஆகியோரும் தலித்தின குறியீடாக இருப்பதைக் கவனத்தின் கொள்வோமானால் அவர்களது குரல்கள் நமக்கு நன்கு புரியும். அவ்வாறு தலித் நிகழ்த்துக் கலைகளில் தலித்துகளின் மீதான ஆதிக்கச் சாதிகளின் ஒடுக்கு முறைகள் வெளிப்படுவதையும் காணமுடிகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 16:31:58(இந்திய நேரம்)