தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கழைக்கூத்து

 • கழைக்கூத்து

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  மூங்கில் கம்புகளுக்கிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டும் கலை, கழைக்கூத்து எனப்படும். மூங்கிலைக் குறிக்கும் ‘கழை’ என்ற சொல்லுடன் கூத்தும் சேர்ந்து ‘கழைக்கூத்து’ என்று பெயர் பெற்றது. இதற்கு ‘ஆரியக்கூத்து’, ‘ஆரியக்கழைக்கூத்து’ என்ற பெயரும் இதற்கு உண்டு. வடநாட்டிலிருந்து வந்த கூத்தாதலால் ஆரியக்கூத்து எனப் பெயர் பெற்றது. இக்கூத்து மிகவும் பழமை வாய்ந்தது. கம்பங்கூத்து என்றும் அழைப்பர்.

  கழைக்கூத்து தமிழகத்தில் பரவலாக நிகழ்த்தப்படுகிறது. இது முக்கியமாக விருதுநகர் மாவட்டத்திலுள்ள அத்திக்குளம், வேதானம், காலியாப்பட்டி, கோவில்பட்டி, புதுப்பட்டி, கழுதி போன்ற ஊர்களில் பெருமளவு நடத்தப்படுகின்றது. இக்கழைக்கூத்து வைகாசி, ஆடி, ஆவணி, மாதங்களில் ஊர்க் கோவில் கொடை அல்லது திருவிழாக்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் நடத்தப்படுகிறது.

  ஆனால், இந்தக் கூத்தானது இரவு நேரங்களில் நடத்தப்படமாட்டாது. பகலில் காலை எட்டு மணியிலிருந்து பதினொரு மணி வரையும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் இந்தக் கழைக்கூத்து நிகழ்த்தப்படுகிறது.

  இந்தக் கழைக்கூத்தினைத் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட காட்டு நாயக்கர்கள் நடத்தி வந்தார்கள். இவர்கள் ஆரியக் கூத்தாடிகள், டொம்பர்கள், ரெட்டி டொம்பர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். இவர்கள் வட நாட்டிலிருந்து ஆந்திராவில் குடியேறியவர்கள் என்றும், பின்னர் நாயக்கர் காலத்தில் தமிழகத்திற்கு வந்தனர் என்றும் கூறுவர்.

  இக்கழை கூத்தில் சிறிய தவில் மட்டுமே இசைக் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தக் கூத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் எனஅனைவரும் பங்கு பெறுவதால் இதனைக் குடும்பக்கலை என்றும் சொல்லுவார்கள். இக்கூத்தினை ஊர் மக்கள் அனைவரும் கண்டுகளித்த பின்னர் அவர்கள் கொடுக்கும் பொருளே, நன்கொடையே (அரிசி, புளி, மிளகாய், உப்பு, பணம்) கலைஞர்களுக்கு சம்பளமாகப் பெறப்படுகிறது.

  பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கு ஏற்றவாறும், ஆண்கள் தரையில் கர்ணம் அடித்து விளையாட்டுக் காட்டுவதற்கு வசதியாகவும் மணற்பாங்கான இடத்தைத் தான் தேர்ந்தெடுக்கின்றார்கள் கூத்துக் கலைஞர்கள்.

  இக்கழைக்கூத்து நடத்த நான்கு வலிமையான (கழைகள்) மூங்கில்கள் தேவை. இவை 9 மீட்டர் உயரத்திலிருந்து 18 மீட்டர் உயரம் வரை இருக்கும். முந்தைய காலத்தில் மிக உயரமான மூங்கில்களைப் பயன்படுத்தினார்கள். இரண்டு மூங்கில்களைப் பெருக்கல் போல் குறுக்காக வைக்க வேண்டும். அதற்கு நேர் எதிரே மீதியிள்ள இரு மூங்கில்களையும் குறுக்காக வைத்து இவ்விரு பெருக்கல் மூங்கில்களையும் கயிற்றால் இணைக்க வேண்டும்.

  பெருக்கல் மூங்கில்கள் அசையாமல் இருக்க மாட்டுத் தோலாலான கயிற்றால் கட்டித் தொய்வு இல்லாமல் இழுத்து (பூமியில்) தரையில் இரும்பு கம்பியை நட்டுக் கட்டிவிடுவர். இதுபோல் மறுபுறமும் செய்யவேண்டும். இப்போது மூங்கில்கள் உறுதியாக இருக்கும். கயிற்றில் நடப்பதற்கு நன்றாக இழுத்துக் கட்டப்பட்டிருக்கும்.

  கூத்து தொடங்குவதை அறியும் விதத்தில் சிறிய மேளம் இசைக்கப்படும். கூத்தாடுபவர்கள் தரையில் கிடக்கும் ஊசியைக் கண்களால் எடுப்பது. கண்ணைக் கட்டிக்கொண்டு பெண்கள் மீது கத்தியை வீசுவது, ஆண்கள் தரையில் நின்றபடி குட்டி கர்ணம் அடிப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். கயிற்றில் நடக்கும் வித்தையைப் பெண்களே செய்கின்றனர். கட்டப்பட்ட மூங்கில்களின் இரு முனைகளிலும் இரண்டு பெண்கள் நிற்பார்கள். இருவர் கைகளிலும் சிறிய கம்பு இருக்கும். ஒரு பெண் ஒரு முனையிலிருந்து நடந்து வந்து திரும்புவார். பின்பு அதே போல் அடுத்தவளும் அப்படியே நடந்து சென்று திரும்புவாள். கூத்தின் உச்சகட்டமாக ஒருத்தி வயிற்றில் தேங்காய் மூடியை வைத்துக் கொண்டு கயிற்றில் பொருத்திப் படுத்த நிலையில் சுற்றுவாள்.பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளைக் காணும் போது திகைப்புடன் கண்ணிமைக்காமல் பார்ப்பார்கள். நிகழ்ச்சி முடிவில் ஆரவாரம் செய்வார்கள். இக்கலை இப்போது பெருமளவாக வழக்கில் இல்லை. இந்தக் கூத்து கலைஞர்களை ஆதரிக்கும் பெரிய ஊர்ச் செல்வந்தர்களும், கிராமத்து மக்களும் தற்போது இல்லை என்பதே இக்கலைகள் நலிவதற்குக்கான காரணமாக உள்ளது.

  “ஆரியக்கூத்தாடியானாலும் காரியத்தில்

  கண்ணாய் இருக்க வேண்டும்”

  என்ற பழமொழி வழக்கில் உள்ளது. இது, இக்கூத்தின் பெயரால் நமக்கு வழங்கப்படும் அறிவுரையாக அமைகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 16:23:17(இந்திய நேரம்)