தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேவற் கட்டு

 • சேவற் கட்டு

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  நாட்டுப்புற மக்களின் மன நிலையில் பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தும் முக்கிய விளையாட்டு ‘சேவற்கட்டு’. நாட்டுப்புற இளைஞன் ஒருவன் சேவற்கட்டின் போது களத்தில் தன் சேவலிடத்துத் தன்னையும், எதிராக நிற்கும் சேவலிடத்துத் தன் எதிரியையும் காண்கிறான். சேவல் சண்டை நடைபெறும் பொழுது தானே எதிரியுடன் சண்டையிடுவது போன்ற உணர்வினைப் பெறுகிறான்.

  மக்களிடத்தில் இத்தகைய உளவியல் ரீதியான மன உணர்வுகள் மிகுந்திருப்பதால் இன்றும் கூட சேவற்கட்டுப் போன்ற வீரவிளையாட்டுக்கள் நிலைத்து நிற்கின்றன. பல்வேறு தடைகளையும், கட்டுப்பாடுகளையும் ஏற்று, கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

  இரண்டு சேவல்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்கிற இப்போர் விளையாட்டில் “சேவற்கட்டு”, “கட்டுச்சேவல்” என்ற வார்த்தைகளால் அமைந்திருக்கின்றனர். சேவல் ஒன்று சேவற்கட்டுக்கு ஏற்ற வகையில் வளர்க்கப்படுகிறது. சில வழிமுறைகளையும், உத்திகளையும் இதற்கெனக் கையாளுகின்றனர். இச்சேவலைப் பிற சேவல்களுடனோ அல்லது கோழிகளுடனோ சேராமல் பிரித்து தனியே கட்டி வைத்துப் பராமரிப்பதனால் “கட்டுச்சேவல்” என்று பெயர் வந்திருக்கலாம் என்பர்.

  இரண்டு சேவலின் படங்கள் :

  எதிரியைக் கண்டு கலங்காத மன உறுதியோடு, உடலுறுதியும் கொண்ட சேவல் என்ற பொருளில் “சேவற்கட்டு” என்ற சொல் புழக்கத்தில் வந்ததெனக் கூறுவர்.

  கோழிகளின் உடலமைப்பு மற்றும் மரபுக் கூறுகளின் அடிப்படையில் அவைகளை ஐந்து வகையாகப் பிரிப்பர். அவையாவன,

  1. காட்டுக்கோழி

  2. கருங்கோழி

  3. நாட்டுக்கோழி

  4. சீமைக்கோழி

  5. சீனிக்கோழி

  இவற்றுள் நாட்டுக்கோழி இனமே போர்க்குணம் மிகுந்தது. நாட்டுப்புற மக்கள் பல்வேறு காரண-காரிய அடிப்படையில் சேவல்களுக்குப் பெயர் வைத்திருக்கின்றனர். சேவலின் காலமைப்பு, அதன் வடிவமைப்பு, கொண்டை இவைகளைக் கொண்டு சேவலின் குணநலன்களை அறிந்திடுவர். அவர்களின் அனுபவ அறிவு சேவலின் விலங்கியல் தன்மையையும் வீரமிகு போர்த்திறனையும் அறிய உதவுகிறது.

  இதன் மூலம் சேவற்கட்டுக்கெனப் பெருவெடைச் சேவல்களைத் தேர்ந்தெடுப்பர். அதன் பூட்டு எலும்பின் அமைப்பு, கழுத்து, இறகுகள், கால்கள் போன்ற உறுப்புகளை ஆய்வு செய்து சேவலைத் தேர்வு செய்வார்கள். அத்தகைய சேவலுக்குக் கட்டுக்களத்தில் சண்டையிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

  இந்நிலையில், சேவலைப் பிற கோழிகள் மற்றும் சேவலுடன் சேராமல் தடுத்து கட்டி வைத்திருப்பர். அதற்குக் கட்டுத்தரை என்று பெயர். கட்டுத்தரையில் கட்டி வைத்து வளர்க்கத் தொடங்கிய பிறகு வாரம் ஒருமுறை சண்டைக்கான முன்பயிற்சியைக் கொடுக்கின்றனர். இதில் சேவலின் காலில் கத்தி கட்டி விடப்படுவதில்லை. வெறுங்காலுடன் சண்டையிடும் இப்பயிற்சிக்குப் “பறவை விடுதல்” என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

  சேவற்கட்டு நிகழும் கட்டுக்களம், ஊரின் எல்லையிலிருந்து சற்று விலகிய இடமாக இருக்கும். சூரிய வெப்பம் அதிகம் தாக்காத நிழல் நிறைந்த தோப்புகளில் சமமான நிலப்பகுதியில் செவ்வக வடிவில் களத்தினை அமைத்திடுவர்.

  கட்டுக்களத்தின் நீளம் சுமார் 25 அடியும், அகலம் சுமார் 12 அடியும் கொண்டதாக இருக்கும். இதிலுள்ள நீளப்பகுதி தெற்கு வடக்காகவும், அகலப் பகுதி கிழக்கு மேற்காகவும் அமைந்திருக்கும் இந்த அளவில் எல்லைக் கோட்டினைத் தெளிவாக ஆழமாக நன்கு கோடிட்டு வைத்திடுவர். நீளத்தின் மையத்தில் இரு பக்கத்திலும் இணைத்து நடுக்கோட்டினை வரைந்திடுவர். இதன் நான்கு பக்கங்களிலும் பார்வையாளர்கள் அமர முடியும் அல்லது நிற்க முடியும். இதில் ஒவ்வொரு அணியும், சேவல் கட்டுமிடம், அமருமிடம் என அனைத்தும் கட்டுப்பாடான விதிமுறைகளுடன் முடிவு செய்யப்படும்.

  சேவற்கட்டின் நிகழ்வுக்கென வரையறுக்கப்பட்ட காலம் பகல் நேரமேயாகும். காலை எட்டு மணி முதல் தொடங்கி மாலை ஆறு மணி வரை எந்நேரத்திலும் முடிக்கலாம். கட்டுக்களத்தில் ஒவ்வொரு அணிக்கும் சேவலுக்குக் கத்தி கட்டுபவர் என்ற நிலையில் ஒருவரும், சேவலைக் களத்தில் இறக்கி, எடுப்பவர் என்ற நிலையில் ஒருவரும் இருப்பர். சில இடங்களில் ஒருவரே இப்பணியைச் செய்வதுண்டு. செவ்வக வடிவ எல்லைக்குள் சேவலை விட்டு எடுப்பவர் தவிர வேறுயாரும் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை.

  போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணியினரில் யாராவது ஒருவர் செவ்வக வடிவ களத்தின் மையத்தில் தமது சேவலைக் கொண்டு நிறுத்தி, பின் கையில் எடுத்துக்கொள்வர். இதற்கு நடவு போடுதல் என்று பெயர். நடவு போடுதல் செய்த பின்பு எதிரணியினர் நடவு போட்ட சேவலுக்கு இணையான, அதே நிற, இன, அளவுள்ள சேவலைச் சண்டைக்கு விடுவர். இந்நிலையில் இரு சேவலுக்கும் காலில் கத்தி வைத்துக் கட்டப்படுகிறது.

  சேவல் விடுபவர்கள் களத்தின் உள்ளே சென்று இரு சேவலுக்கும் இடையில் சுமார் 10 அடி இடைவெளியில் நிறுத்துவர். அப்பொழுது இரு சேவலும் ஒன்றையொன்று பார்க்கும் படி இருக்கும். இதற்கு “முகைய விடுதல்” என்று பெயர். அது தான் உன் எதிரி என்று அடையாளம் காட்டுவது போல் இது இருக்கும்.

  இந்நிலையில் இரு சேவல்களும் ஒன்றையொன்று நோக்கி ஓடி வந்தும், பறந்தும் காலில் கட்டியுள்ள கத்தியால் மற்றதன் உடல் பகுதியில் குத்தியும் பல காயங்களை ஏற்படுத்துகின்றன. அப்போது தொடர்ந்து சண்டையிடாமல் சேவல் விடுவோர் தம்தம் சேவல்களைக் கையில் பிடித்துக்கொள்வர். அதற்கு தண்ணீர் தந்து களைப்பை நீக்குவர். ஈரத்துணியால் காயங்களைத் துடைத்து மருந்திடுவர். மீண்டும் சேவலின் முதுகில் தட்டிக் கொடுத்து களத்தில் விடுவர்.

  போரிட்டுக் கொள்ளும் இரு சேவல்களின் போர்ச்செயல்முடிவே இவ்விளையாட்டின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது. இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்துவிட்டாலோ, களத்தைவிட்டு ஓடிவிட்டாலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றியடைந்ததாகிறது. தோற்ற சேவல் உயிருடனோ, இறந்த நிலையிலோ வெற்றியடைந்த சேவலின் உரிமையாளருக்கு கிடைக்கிறது. இதற்கு “கோச்சை” என்று பெயர்.

  நாட்டுப்புற மக்கள் சேவற்கட்டுக்குக் கிடைத்த பரிசான “கோச்சை”யைச் சமைத்து உறவோடு உண்டு மகிழ்வது தமிழரின் விருந்தோம்பல் பண்புக்கு உதாரணமாகத் திகழ்கிறது. போர் வெற்றியின் திறத்தையும், சுற்றத்தாரின் மகிழ்வையும் விளையாட்டு வெளிப்படுத்துகிறது.

  தைப்பொங்கல் விழாக்களின் நிறைவு நாளன்று தஞ்சாவூரில் ஆண்டு தோறும் சேவற்கட்டு விழா காவல் துறை பாதுகாப்புடன் தேசிய அளவிலான போட்டி விழாவாக நடை பெற்று வருகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:14:07(இந்திய நேரம்)