தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மயான கொள்ளை

 • மயான கொள்ளை

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  அங்காளம்மன் அல்லது அங்காள பரமேசுவரி வழிபாடு, கடலூர், விழுப்புரம், வடார்க்காடு, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் காணப்படுகிறது. இந்த வழிபாட்டுச் சடங்கின் முக்கிய நிகழ்வாக “மயான கொள்ளை” நிகழ்ச்சி நிகழ்த்தப்படுகிறது. “மயானத்தில் நிகழ்த்தப்படும் கொள்ளை” என்று பொருள்படும். ஆனால், “கொள்ளை” என்பது “திருட்டு” என்ற பொருளில் இங்குக் கூறப்படவில்லை. மாறாக வழிபாட்டுச் சடங்கியல் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றிற்காக உருவாக்கப்படும் உருவத்தை அழித்து அந்த உருவம் உருவாக்கப்படும் சாம்பலை அல்லது பொருட்களை எடுத்தல் என்ற பொருளில் கூறப்படுகிறது.

  மயான கொள்ளை (சுடுகாட்டில்) :

  மாசி மகாசிவராத்திரி அன்று நண்பகலில் நிகழ்ச்சி தொடங்குகிறது. தற்போது இறந்த பிணங்களின் சாம்பல், மண் ஆகியவற்றால் 3 அல்லது 4 மீட்டர் நீளமுள்ள அம்மன் (பார்வதி) உருவம் படுத்திருப்பது போல் அழகுற செய்யப்படுகிறது. அன்று மாலை பூவால் செய்யப்பட்ட கரகம் சோடித்து, இரவு முழுவதும் அம்மன் ஊர்வலம் நடைபெறுகிறது. பின்னர் விடியற்காலையில் மயானத்திற்குச் சென்று அம்மனுக்குக் கண் திறந்து பம்பைக்காரர்கள் பாடல் பாடுவர். காலையில் பூசாரி பதினாறு கைகள் கொண்ட அம்மனை அலங்கரித்து சிம்ம வாகனத்தில் ஏற்றுவர். காளி வேடமிட்டு கொண்டு நேர்த்திக் கடன் வேண்டியவர்கள் ஆடி வருவார்கள்.

  புடவை கட்டி, முகத்தில் சிகப்பு வண்ணம் பூசி, நீண்ட முடியுடன் ஒப்பனை செய்திருப்பர். அவர்களுள் ஒருவர் ஆட்டு ஈரலை வாயில் கவ்வி கையில் தீச்சட்டி ஏந்தி வருவார். சேவல் பலி, பூசை, ஊர்வலம், முடிந்த பிறகு பூசாரி ஒப்பனை செய்துகொண்டு படுத்திருக்கும் அம்மன் தலைமீது ஆவேசமுற்று விழுவார்.

  அப்போது அங்கு கூடியிருக்கும் மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த முருங்கைக்காய், மஞ்சள், கொழுக்கட்டை ஆகியவற்றை வான்நோக்கி வீசுவார்கள். மக்கள் கூட்டத்தில் பெண்களே அதிகம் காணப்படுகிறார்கள். பின்னர் அம்மனை உருவாக்கியிருக்கும் சாம்பல், மண் போன்றவற்றைச் சண்டை போட்டுக் கொண்டு மக்கள் கொள்ளையடிக்கிறார்கள். பூசாரி அம்மன் தலை மீது விழுந்தவுடன் அம்மன் உருவம் சிதைக்கப்படுகிறது.

  அப்போது எடுக்கப்படும் மண் அல்லது சாம்பல் தீய சக்திகளையும், நோய்களையும் விரட்டும் ஆற்றல் வாய்ந்ததாகவும் மக்களால் நம்பப்படுகிறது. அதனை நிலத்தில் புதைத்தால் நல்ல விளைச்சல் உண்டாகும். அதனை பூசாரி திருநீறு போல் மக்களுக்கு வழங்குவர்.

  “மயான கொள்ளை” நிகழ்ச்சியின் போது பம்பைகாரர்கள் பாடல் இசைப்பார்கள். விழுப்புரம் அருகிலுள்ள தெளி என்ற ஊரில் பூசாரியின் சகோதரர் அங்காளம்மன் வேடமிடுவார். பெண் வேடமிட்டவர் தலையில் கிரீடம் அணிந்து அவரை வணங்குகிறார். தனக்கு உடல்நலமில்லாத போது சிலர் தான் சாகும் வரை காட்டேரி வேடம் போடுவதாக நேர்ந்து கொண்டு, அதனால் உடல்நலம் பெற்றதாகவும் நம்புகிறார்கள்.

  கேரளத்திலும், கேரளத்தையொட்டிய குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழ்த்தப்படும் அம்மன் கோயில்களில் “களமொத்தும் பாட்டும்” என்ற நிகழ்ச்சி மயான கொள்ளையோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. களமொத்து பாட்டு அம்மன் உருவத்தைத் தரையில் வரைந்து வண்ணம் தீட்டி பாடல் பாடியும் களச்சித்திரம் அழிக்கப்படும்.

  குமரி மாவட்டத்தில் நாயர் சமூகத்தினரால் நிகழ்த்தப்படும் இந்த நிகழ்ச்சி நம்பூதரி அல்லது பிராமணரால் பூசை செய்யப்படுகிறது. நம்பூதரிதான் தரைச்சித்திரத்தை அழிப்பார். கால் பகுதியிலிருந்து சித்திரம் அழிக்கப்படுகிறது. மார்புப் பகுதியில் இருக்கும் அரிசி “திருமலை பிரசாதம்” என நம்பப்படுகிறது.

  இந்த அரிசியில் ஒன்றிரண்டை கஞ்சி வைத்து குடித்தால் குழந்தை பெற்ற பெண்களுக்குப் பால் சுரக்கும் என நம்பப்படுகிறது. சிதைக்கப்பட்ட ஓவியத்திலிருந்து எடுக்கப்படும் வண்ணப்பொடிகள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. பேய், பிசாசுகளை விரட்டும் ஆற்றல் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

  மயான கொள்ளை நிகழ்த்துதலில் காளி, அங்காளம்மன், காட்டேரி, பேய்ச்சி போன்ற பல வேடங்கள் போடப்படுகின்றன. வேடம் ஏற்பவர் பம்பை இசைக்கேற்ப ஆடுகிறார். பம்பைகாரர்கள் பாடும் பாடலும், ஆடலும் சிறப்பிடம் பெறும். ஆயினும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மயான கொள்ளை என்னும் வழிபாட்டு நிகழ்ச்சியின் சடங்குகளாக நிகழ்த்தப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:12:58(இந்திய நேரம்)