தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மயில் ஆட்டம்

 • மயில் ஆட்டம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

   

  மயில் உருவத்தைக் கொண்டு செய்யப்பட்ட பொம்மையில் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு நையாண்டி மேளத்தின் இசைக்கேற்ப ஆண் கலைஞர்களால் ஆடப்படும் ஆட்டம் மயிலாட்டம். இது மயில் நடனம் எனவும் அழைக்கப்படும். செவ்வியல் கலையான பரதநாட்டியத்தில் பெண்கள் மயிலாட்டம் ஆடுகின்றனர். அவர்கள் பொம்மை மயில் கூட்டினைச் சுமப்பத்திலை. மாறாக பச்சை, நீல வண்ண உடைய அணிந்து பின்புறம் மயில் தோகையைக் கட்டி ஆடுகின்றனர்.

  நாட்டுப்புற ஆட்டக் கலைஞர் மயில் கூட்டினுள் மறைந்து கொள்வதால் அவரின் வயது, தோற்றம், பற்றி யாரும் கவனிப்பதில்லை. ஆடக்கூடிய ஆற்றல் பெற்றவராக இருந்தால் போதுமானது. பொழுதுபோக்கிற்காகத் தனியொரு கலைஞரால் நிகழ்த்தப்படும் கலை இது. கரகாட்டத்தின் துணைநிலை ஆட்டமாகவே கருதப்படுகிறது. கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் முதலான ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் பொழுது மயிலாட்டத்தையும் ஏற்பாடு செய்வர். பிற ஆட்டங்களோடு மயிலாட்டமும் ஆடப்படும். இதனைத் தனித்ததொரு ஆட்டமாக யாரும் ஏற்பாடு செய்வதில்லை.

  வட தமிழகத்தின் பல பகுதிகளிலும், மதுரையிலும் மயிலாட்டம் ஆடும் கலைஞர்கள் உள்ளனர். ஆயினும் தஞ்சை மயிலாட்டக் கலைஞர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். திருச்சியைச் சார்ந்த சுந்தரராவ் என்பவரே மயில் நடனத்தை முதலில் கண்டுபிடித்து ஆடிய கலைஞராகக் கருதப்படுகிறார். இன்று இந்நடனம் தஞ்சை கொந்தளக்காரத் தெருவில் வசிக்கும் மராட்டிய குடும்பங்களுக்குரிய கலையாகவும் விளங்கி வருகிறது என்கின்றனர்.

  பொய்க்கால் குதிரை செய்வது போலவே மயில் கூட்டையும் செய்கின்றனர். தலை, உடல், இறக்கைகள் முதலியவைகள் தனித்தனியே செய்யப்பட்டு அவற்றின் மீது மயிலைப் போல் வண்ணம் தீட்டுகின்றனர். மயில் தலையில் கம்பியாலான கொண்டைகளும், குவி லென்சு, கண்ணாடியாலான கண்களும் அமைக்கப்படும். திறந்து மூடுவதற்கேற்ப மயிலின் வாய் தகடுகளால் அமைக்கப்பட்டு இருக்கும். இதற்காக வாயிலிருந்து கட்டப்படும் சூத்திரக்கயிறு ஆட்டக் கலைஞரிடம் இருக்கும். மயில் கூட்டின் அடிப்பக்கத்தில் மயிலிறகுகள் பொருத்தப்படும்.

  இந்த மயிலிறகுகள், ஆட்டக்கலைஞர் நிமிர்ந்து ஆடும் போது குவிந்தும், குனிந்து ஆடும் போது விரிந்தும் இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். மயில் கூட்டின் வாயும் இறக்கைகளும், மயில் தோகையும் அசைந்து உயிருள்ளவை போலக் காட்டுவதற்கேற்ப அமைக்கப்படுகின்றன.

  மயிலாட்ட கலைஞர் மயிலாக ஒப்பனை செய்துகொள்ளும் போது மயிலின் கூம்பு போன்ற கழுத்து பகுதியைத் தன் தலையில் வைத்துக் கட்டிக்கொள்வர். அக்கழுத்துப் பகுதியில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள நீலத்துணி கலைஞரின் கழுத்தினை மறைத்துக் கொள்ளும். மயிலின் உடல் கூட்டினைத் தோளில் சுமக்குமாறு கட்டிக்கொள்கின்றனர். உடல் கூட்டிலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்ட பச்சை வண்ண துணி ஆட்ட கலைஞரின் கால்களை மறைத்துக் கொள்ளும் சலங்கைகள் கட்டப்பட்ட கால்கள் மட்டுமே வெளியில் தெரியும். இரண்டு கைகளிலும் மயிலின் இரண்டு இறக்கைகள் கட்டப்படும்.

  நையாண்டி மேள இசைக்கேற்ப ஆட்டக் கலைஞர் மயிலின் அசைவுகளை ஆடிக் காட்டுவர். மயில் நடத்தல், ஓடுதல், தலையை அசைத்தல், தோகையை விரித்தல், அகவுதல் போன்ற செயல்களைக் கலைஞர் எவ்வளவு நுட்பமாகச் செய்கிறாரோ ஆட்டம் அவ்வளவு சிறப்பாக அமையும். வாயைத் திறந்து மூடுதல், பாத்திரத்தில் வைக்கப்படும். நீரினை மயில் வாயால் உறிஞ்சிக் குடித்தல் முதலானவற்றைக் கலைஞர் செய்யும் போது பார்வையாளர்களிடமிருந்து மகிழ்ச்சி ஆரவாரம் ஏற்படும். தரையில் போடப்படும் பணத்தை மயில் கவ்வி எடுப்பதாகவும் நடித்துக்காட்டப்படும் ஒருவர் முருகன் வேடமிட்டு வர மயில் அவருடைய வாகனமாக நடிப்பதும் உண்டு. மயிலாட்டம் சிறுவர், சிறுமியர்களை மகிழ்விக்கும் சிறந்த கலையாக உள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 17:30:38(இந்திய நேரம்)