தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மோடியாட்டம்

 • மோடியாட்டம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  மோடியாட்டத்தைப் பேச்சு வழக்கில் “மகிடி ஆட்டம்” எனக் கூறுகின்றனர். மந்திரத்தால் பொருளை மறைத்தலும், அதனைக் கண்டெடுத்து விவாதத்தில் ஈடுபடுவதும் மந்திரக்காரர்களுக்குள் நிகழுவதே மகிடி என்பதாகும். மேலும் மகிடி என்பது புதைத்ததைக் கண்டெடுப்பது.

  மோடியாட்டம் என்பது மந்திரப் பொருளை மறைத்து வைத்து, பின் எடுப்பதாக, அதைத் தொடர்ந்து கூத்து நிகழ்வதாக உள்ளன.

  இக்கலை தென் ஆற்காடு மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில் உள்ள நல்லாண் பிள்ளை பெற்றாள் என்ற கிராமத்தில் நடைபெறுகிறது.

  தீபாவளி அன்றும் அல்லது அதற்கு அடுத்த நாளிலும் நடக்கிறது. ஆடுகளமாக ஊரின் தெருவும், கோவிலின் முன் பகுதியும் உள்ளன.

  இக்கலையில் கோமாளியே முக்கிய நடிகராக உள்ளார். அதன் பின் ஊர் மக்களும் மோடியை எடுக்க வரும் அரசர்களும் ஒரு பெண்ணும் உள்ளனர்.

  இக்கலைக்குரிய இசைக்கருவிகள் மத்தளம், ஜால்ரா, ஆர்மோனியம் ஆகும்.

  மோமாளி காக்கி நிறத்தில் முழுக்கால் சட்டையும் காக்கி நிற முழுக் கைச் சட்டையும் அணிந்திருப்பார். காலில் கறுத்த ‘ஷூ’வும் போட்டிருப்பார். தாடி, மீசை வைத்திருப்பார்.

  இவரின் கையில் உலக்கை இருக்கும். அதில் குட்டிச் சாத்தான் பொம்மை இருக்கும். அப்பொம்மை 25 செ.மீ நீளமுடையதாகவும், பார்ப்பதற்கு விகாரமாகவும் பயங்கரமாகவும் இருக்கும்.

  உலக்கையை ஆட்டிக் கொண்டே நடக்கும் பொழுது பொம்மை அசையும். அவரும் ஆடிக் கொண்டே நடப்பார். அப்பொழுது தண்டோரா மேளம் ஒலிக்கும். ஊர்ப்பொதுமக்கள் பின்னே செல்லுவர். சிறுவர்கள் பொருள் இல்லாத சொற்றொலியை (சத்தம்) முழங்குவர்.

  அவர் ஊரின் தெருமுனையில் நின்றதும், இசைக்கருவிகளின் முழக்கம் அடங்கி, சிறுவர்களின் சலசலப்பும் நிற்கும். அவர் ஊர்ப்பொதுமக்களைப் பார்த்து, “நான் மந்திர சக்தியுள்ள ஒரு மோடியை ஊர்க்கோவிலின் முன்னே புதைத்து வைக்கப் போகிறேன். இதை வீரமுள்ள, தீரமுள்ள ஆண்மகன் வந்து எடுக்கட்டும்” எனக் கூறுவார். ஊர் மக்களும் “ஆமாமாம் ஆமாமாம்” எனக் கத்துவார்கள்.

  பின்னர் ஊர்க்குடுமி அடுத்த தெருவிற்குச் சென்று அங்கேயும் இதேபோல் செய்வார்.

  அடுத்த நாள் தீபாவளி நோன்பு அன்று நண்பகல் இந்த நிகழ்ச்சி தொடரும். அன்றும் ஊர்க்குடுமி முந்தைய நாள் போலவே ஊரைச் சுற்றி வருவார். ஆனால் அவர் கையில் எதுவும் இருக்காது. மோடியை எடுப்பவர் எடுக்கலாம் எனச் சவால் விட்டு இறுதியில் புதைத்த இடத்துக்கு வருவார்.

  அதன் பின் பார்வையாளர்களான ஊர்ப்பொதுமக்கள் அவரை வட்டமாகச் சுற்றி நிற்க ஊர்க்குடுமி அந்த மோடிக்கு மந்திர சக்தி உள்ளது என்றும், அதை எடுப்பவர் இரத்த வாந்தி எடுத்து இறப்பார் என்றும் கூறுவார். பின் நகைச்சுவையாகப் பேசி தெம்மாங்குப் பாடலைப் பாடும் பொழுது இசைக் கலைஞர்கள் கருவிகளை இயக்குவர்.

  இப்படி அவர் ஆடிக் கொண்டிருக்கையில் பார்வையாளர்களில் சிலர் மோடி எடுக்க வருவர். இவர்களும் ஆட்டக்காரர்களே. ஆனால் தங்களை அரசகுமாரர்களாகப் பாவித்து இந்தக் காட்டு இளவரசன் என அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.

  இவர்கள் அனைவரும் ஆடிக்கொண்டும், பாடிக் கொண்டும் வந்து மோடியை எடுக்கச் செல்வர். ஆனால் மோடி தாக்குவதாக ஆடிப்பாடி, ரத்தம் கக்குவதாக நடித்து கீழே விழுவர். இப்படியே எல்லா இளவரசர்களும் வரிசையாக வந்து கீழே விழுவர்.

  கடைசியில் அந்தச் சகோதரர்களின் ஒரே சகோதரியான மந்திர சிகாமணி வந்து, பாடிக் கொண்டே மோடியை எடுத்து விடுவாள். அதன் பின் ஊர்க்குடுமி இறப்பார். இதோடு நிகழ்ச்சி முடிவடையும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 18:05:13(இந்திய நேரம்)