தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வேதாள ஆட்டம்

 • வேதாள ஆட்டம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  கணியான் ஆட்டத்தின் துணை ஆட்டம். இவ்வாட்டத்தைப் ‘பேயாட்டம்’ என்றும் கூறுவர். வேதாளம் முகமூடியை அணிந்து கொண்டு ஆடுவதால் ‘வேதாள ஆட்டம்’ என்றும், பேய் போல் அச்சமூட்டிய படி ஆடுவதால் ‘பேயாட்டம்” எனவும் கூறுவர்.

  கணியான் ஆட்டம் நிகழும் சுடலை மாடன் கோவில்களில் இவ்வாட்டம் நிகழ்கிறது. பெருமளவில் திருநெல்வேலி, தூத்துக்குடியிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்த அளவிலும் நிகழ்கிறது. கோவிலின் நிதி நிலையைப் பொறுத்து இந்த ஆட்டத்தின் ஏற்பாடு அமையும். இவ்வாட்டத்தைக் கணியான் சாதியைச் சார்ந்த ஒருவரே ஆடுவர். வேதாள ஆட்டம் ஆடுவதற்கு என்றே இவரை அழைத்து வருவர்.

  இவர் உடல் முழுவதும் திருநீறு பூசியும், வேட்டியைத் தார்ப்பாய்ச்சியும், இடுப்பில் காவி அரைக்கச்சையும் கட்டியிருப்பார். அச்சமூட்டுகிற வகையில் முகமூடி அணிந்திருப்பார்.

  இவ்வாட்டம் கோவில் வழிபாட்டின் கூறாகவே உள்ளது. சுடலைமாடன் கோவில் விழாக்களில் வெள்ளிக்கிழமை கைவெட்டு நிகழ்ச்சி முடிந்ததும் சாமியாடிக்கு அருள் வரத் தொடங்கி, அவர் நின்ற இடத்திலேயே ஆட ஆரம்பிப்பார். பின் ஆவேசமாக ஆடுவார். அப்பொழுது வேதாள ஆட்டக்காரருடன் அவர் சேர்ந்து ஆடுவார். அவருடன் கணியான் பெண் ஆட்டக்காரர்களும் ஆடுவர். இவர்களில் வேதாள ஆட்டக்காரரின் ஆட்டம் தனித்தன்மை பெற்றதாகவும், சாமியாருக்கே அருளைக் கூட்டுவதாகவும் உள்ளது.

  அவருடைய ஆட்டத்திற்குத் தகுந்தவாறு அண்ணாவியும் சுடலைமான் கதையிலுள்ள குறிப்பிட்ட பகுதிகளையும் பாடுவார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 18:07:24(இந்திய நேரம்)