தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கழியல் ஆட்டம்

 • கழியல் ஆட்டம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  ஆடலும் பாடலும் ஒருங்கிணையுமாறு நிகழ்த்தப்படும் கலை கழியல் ஆட்டம். இது போர்கலை, தற்காப்புக் கலை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்றாகும். கம்பு (கழி) என்ற பொருளைத் தருவதால் இது கழியல் ஆட்டம் எனப் பெயர் பெற்றது. இந்தக் கழியல் ஆட்டம் களியல், கழலடி, களல், கழியல் என்று பல்வேறு பெயர்களிலும் வழங்கப்படுகிறது. இவை மட்டுமின்றி இக்கலையைக் கோல்களி, கோலடிக் களி, கோலடி, கம்புகளி, கம்படவுகளி, வெட்டும் தட என்னும் பல பெயர்களில் மலையாளத்தில் வழங்குகின்றனர்.

  கழியலாட்டம் நடத்தப்படும் இடத்தை ‘களரி’ அல்லது ‘இலங்கம்’ என்று கூறுவார்கள். இவ்வாட்டம் வட்டமாக ஆடப்படுகின்றது. முந்தைய காலங்களில் இரவில் இவ்வாட்டம் நடத்தப்பட்டது. நடுவில் விளக்கை ஏற்றி வைத்து ஆடுவார்கள். உரலைக் கவிழ்த்துப் போட்டு, குத்து விளக்கை வைத்தும் ஆடுவர். இப்போது பெட்ரோமாக்ஸ் மற்றும் மின் விளக்கைப் பயன்படுத்துகின்றனர்.

  ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்படும் இக்கலை, வேகம் தாண்டுதல், ஓடுதல், துள்ளுதல் போன்ற நிலைகளையும் கொண்டுள்ளது.

  இவ்வாட்டத்தை அருந்ததியர், ஈழவர், புலையர், பரதவர், நாடார், பறையர் ஆகிய சாதியினர் நடத்துகின்றனர். இதில் எல்லாச் சாதியினரும் கலந்து ஆடுவதில்லை. இவ்வாட்டம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு சூழல்களில் நிகழ்த்தப்படுகிறது. கிறிஸ்து பிறப்பு நாள், புத்தாண்டு விழா, கத்தோலிக்கத் திருவிழாக்கள், புதுமனைப் புதுவிழா, பூப்புச் சடங்கு போன்ற விழாக்களில் இவ்வாட்டம் ஆடப்படுகின்றது. அவை மட்டுமின்றி சவ ஊர்வலத்திலும் கழியல் ஆட்டம் ஆடப்படுகிறது. பொதுவாக, இன்ப துன்ப நிகழ்ச்சிகளின் போது கழியல் ஆட்டம் ஆடுவது வழக்கமாக திகழ்கிறது.

  கழியல் ஆட்டத்தில் கழியல் ஆட்டக் கோல்கள் எழுப்பும் ஓசையே முதல் இசையாக அமைகிறது. கழியல் ஆட்டக் கோல்களில் சலங்கை மணியினைக் கோத்தும், கால்களில் சலங்கை கட்டியும் ஆடுகின்றனர். இக்கலையில் எட்டுப் பேர் பங்கு கொள்கின்றனர். ‘கும்மி களியல்’ என்ற ஆட்டத்தில் பலர் கலந்து கொள்கின்றனர்.

  இக்கலைக்கான பயிற்சியைக் கற்றுக்கொடுப்பவர் அண்ணாவி ஆசான் என்பவர். இதில் கலைஞர்கள் பத்து அல்லது பன்னிரண்டு வயதில் பயிற்சி பெறுகின்றனர். இவ்வாட்டத்தில் 8 பேர் பங்கு பெற்றாலும் 10 பேருக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. ஏனெனில் ஆட்டக்காரர்களில் ஒருவர் நோய் வாய்ப்பட்டாலோ, அவர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ ஆட்டம் தடையின்றி நிகழ இது உதவுகிறது.

  கழியல் ஆட்டத்தின் பயிற்சிக் காலம் கற்போரின் திறமையைப் பொறுத்தே அமையும். பொதுவாகப் பயிற்சியின் தொடக்கம் அம்மன் கோவிலில் நிகழும். சாதாரண மாணவர்களுக்கு மாலை நேரங்களிலும், தொழிலாளர்களுக்கு இரவு நேரங்களிலும் பயிற்சி நிகழும். தொடக்க நிலைப் பயிற்சி ‘சுவடு வைப்பு’ என்றழைக்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் பணமாகவோ, பொருளாகவோ ஆசான்களுக்கு தட்சணை வழங்கப்படும்.

  கழியலாட்ட நிகழ்வுகளில் குழுவுக்கு குழு வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆசான் ஒருமுறை நிகழ்த்தியது போல மறுமுறை நிகழ்த்துவதில்லை. பிறமொழிப் பாடல்களாலும் பொருளற்ற பாடல்களாலும் இக்கழியலாட்டத்தை நடத்துகின்றனர். பார்வையாளர்களுக்கு ஏற்பவும், சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் கழியல் ஆட்டம் வேறுபடுவது உண்டு.

  கழியாட்டத்தின் நிகழ்வுகள் ‘அடவு’ என்ற சொல்லால் வழங்கப்படுகின்றது. நடனத்தின் ஒரு அசைவைக் குறிக்கிறது. கழியலாட்ட முறையில் கை, கால், உடல், அசைவுகள் நகர்வுகள் பாடல்கள் ஆகியவை இணைந்து ஒரு ஆட்ட முறையினை உருவாக்குகிறது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் விருத்தம், கும்பிடும் முறை, செய்தியைக் கூறும் பாடல்கள், மங்களம் என்று ஒரே முறையில் நிகழ்த்தப்படுகின்றன.

  • எல்லா ஆட்டத்திலும் விருத்தம் பாடப்படுகிறது. விருத்தப் பாடல் பாடப்படுவதால் இது விருத்த ஆட்டம் எனப்படுகிறது.

  • ‘கும்பிடுகிறேன்’ என்ற பாடலைப் பாடி ஆடும் ஆட்டம் கும்பிடும் முறை ஆட்டம் எனப்படும். இரண்டு கம்பு கும்பிடும் முறை, நாலு கம்பு கும்பிடும் முறை என இவ்வாட்டம் இரண்டு நிலைகளில் ஆடப்படுகிறது.

  • இறுதியில் மங்களம் பாடி இறுதி நிகழ்ச்சி நிறைவடைகிறது. ஒவ்வோர் ஆட்டக் குழுவும் தங்களது சமயம் சார்ந்த மங்கள வாழ்த்துப் பாடலைப் பாடி ஆட்டத்தை நிறைவு செய்கின்றனர்.

  இக்கலை கிராமங்களில் மிகுதியாக நடைபெறுவதால் கிராம மக்களே இதன் பார்வையாளர்கள். இக்கலை பெண்களின் தோலாட்டத்தை ஒத்திருப்பதால் பெண்கள் ஆர்வமுடன் கண்டு களிக்கின்றனர். பார்வையாளர்களே கலைஞர்களாக மாறுவதும் உண்டு. கழியலாட்ட கலைஞர்களைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கப்படுவதும் உண்டு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 16:22:31(இந்திய நேரம்)