தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகல் வேடம்

  • பகல் வேடம்

    முனைவர் சி.சுந்தரேசன்
    துறைத்தலைவர்
    நாட்டுப்புறவியல் துறை

    புராண இதிகாச மனிதர்களைப் போலவும், தெய்வங்களைப் போலவும் வேடமிட்டுக் கொண்டு பகலில் தெருத்தெருவாகவும், வீடு வீடாகச் சென்று பாடிக் கொண்டும், உரையாடிக் கொண்டும் பொருள் பெற்று வருவதைப் பகல் வேடல் என்று கூறுவர். மேலும், இவர்கள் பகலில் வேடம் போட்டு வருவதால் பகல் வேடம் என்றும் பலவகையான வேடங்களைப் போடுவதால் பல வேடம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

    தெருகூத்தைப் போலவே இதிலும் நடிகர் வேடமிட்டு வருகின்றனர். தெருக்கூத்து இரவில் ஒரே இடத்தில் நிகழ்த்தப்படுகிறது. ஆனால், பகல் வேடமானது பகலில் நகரும் கலையாக (moving theatre) நடமாடும் அரங்கக் கலையாகிறது. இராமன், சீதை போன்ற காப்பிய மாந்தர்கள், சிவன், பார்வதி, திருமால் போன்ற தெய்வங்கள், சரித்திர கால வீரர்கள் என்னும் இவர்களின் வேடங்களைத் தாங்கி நம் இல்லங்களுக்கே இவர்கள் வருவதால் மக்கள் இவ்வேடங்களைக் கண்டு மகிழ்கின்றனர். அவர்கள் கூறுகின்ற புராண, இதிகாச நிகழ்ச்சிகளைக் கேட்பதில் ஆர்வம் உடையவர்களாகவும் இருந்து வருவதால் இக்கலையானது அழிந்து விடாமல் இருக்கிறது.

    இக்கலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு வழங்கி வரும் ஒரு கலையாகத் திகழ்கிறது. மன்னர்கள் இவர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒற்றர்களாகப் பயன்படுத்தினர். இக்கலை தஞ்சையில் வல்லம் பகுதியில்தான் முதன் முதலில் தோன்றியதாகவும், பின்னர் திண்டிவனம் பகுதியில் பரவியதாகவும் கருத்து நிலவுகிறது. தம் மூதாதையர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார் என்பதை இக்கலையில் ஈடுபட்டு பாலவடிவு எனும் கலைஞர் கூறுகிறார்.

    தமிழ்நாட்டிலுள்ள வேறு பகுதி மக்கள் இக்கலையில் செயல்படுவதில்லை. ஆனால் ஆந்திராவிலிருந்து அதிகமாகப் பகல் வேடக் குழுக்கள் இங்கு நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். இதனால் தங்கள் வருவாய் பாதிக்கப்படுகின்றதை இக்கலைஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

    ஒரிசாவில் உள்ளூர்ப் புறங்களிலிருந்து கண்ணன்,கிருட்டிணன் கோபியர் வேடமிட்டு கலைஞர்கள் நகர்ப்புறத்திற்கு மிதிவண்டியில் வந்து இக்கலையை நிகழ்த்தி வசூலித்துச் செல்லும் பழக்கம் இன்றும் காணப்படுகிறது. இப்பகல் வேடம் அண்டை மாநிலங்களிலிருந்து இங்கு வந்திருக்க வேண்டும் என்ற கருத்து தோன்றுகிறது. தமிழ்நாட்டில் இக்கலையை நடத்துவோரின் தாய்மொழி தெலுங்காக இருப்பது இவ்வெண்ணத்திற்குச் சிறப்புடையதாக அமைகிறது.

    தென்களவாய் என்னும் கிராமத்திற்கு அருகில் இருக்கும் வயிரம் பேட்டையில் வாழும் பத்துக் குடும்பங்களும், ஒரு மைல் தொலைவிலுள்ள வேங்கை என்னும் கிராமத்தில் வாழும் பத்துக் குடும்பங்களும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குல்லுக்கவரை நாயுடு இனத்தைச் சார்ந்தவர்களாவார். இவர்கள் தங்களைப் பண்டாரங்கள் என்றும், இலிங்காயத்துகள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர். விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவும் திகழ்கின்றனர். இருபது குழுக்களாகப் பிரிந்து தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் எந்தெந்தக் குழுக்கள் எனப் பிரித்துக் கொண்டு ஆண்டுக்கு ஒரு தடவை தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதியில் இத்தனை நாட்கள் எனத் தங்கி இக்கலையை நிகழ்த்துகின்றனர். தொடர்ந்து ஒரு குழுவே ஒரு பகுதிக்குச் செல்வதால் அப்பகுதி மக்களிடம் நன்றாகப் பழகி, அம்மக்களின் மனநிலையை அறிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்கின்றனர்.

    ஒரு குழு என்பது இரண்டு அல்லது மூன்று கலைஞர்களைக் கொண்டது. இவர்கள் ஒரு இடத்தில் செலவிடும் நேரம் அந்த இடத்து மக்கள் காட்டும் ஆர்வத்தை ஒட்டியே அமைகிறது. சிறிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று நாட்களும் பெரிய கிராமமாக இருந்தால் பத்து, பதினைந்து நாட்களும் பகல்வேட நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டு இந்நிகழ்ச்சியை நடத்தப் புறப்படும் போது தங்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துச் செல்கின்றனர். வேடங்களைப் போட்ட பின்னர் கடைசி நாள் வேடமின்றி வசுலுக்குச் செல்கின்றனர். பாலவடிவின் பகல் வேடக் குழுவில் இவரும் தம்பி சுந்தரராசனுமே முக்கிய நடிகர்களாவார்கள்.

    இக்குழுவினர் இதுவரை காசிபிராமணாள், தீட்சிதர், பட்டாச்சாரி, அர்த்த நாரீசுவரர், ஞானவெட்டியான் போன்ற இருபத்தொரு வகை வேடங்களைப் போட்டுள்ளதாகவும் வள்ளுவரும் வாசுகி அம்மையாரும், ஔவையாரின் பெருமை, துரோணர் முதலான பத்தும் புதிய பகல் வேடங்களைப் போடவும் திட்டமிட்டு இருப்பதாகக் கூறுகின்றனர். அனைத்துப் பகல் வேடக் குழுக்களும் பெரும்பாலும் இது போன்ற வேடங்களையே நிகழ்த்துகின்றனர். மகாபாரதமும், இராமாயணமும் இவர்களின் கதைகளுக்கு மூலக் கருவூலமாக இருக்கின்றன.

    கதையமைப்பில் பொறுத்தவரை ஒரு பாத்திரம் இன்னொரு பாத்திரத்திடம் கதை கூறும் போக்கில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட புராண, தெய்வ நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன. தீட்சிதாள், பட்டாச்சாரி அல்லது சிதம்பரத் தல வரலாறு என்னும் பகல் வேட நிகழ்ச்சியில் சைவ, வைணவ அடியார்கள், தில்லைக் கோயில் வருமான உரிமையாருக்குரியது என்பது குறித்து வாதமிட்டுக் கொள்வதாக நிகழ்ச்சி தொடங்குகிறது. இருவரும் தங்கள் கடவுளரின் பெருமை பேசுவதும், மற்றவரைக் குறைத்துப் பேசுவதும், ஒருவரையொருவர் திட்டிக்கொள்வதுமாக நிகழ்ச்சி வளர்கிறது. பின்னர் இரு அடியவர்களும் சமாதானம் அடைவதாக நிகழ்ச்சி முடிகிறது.

    நிகழ்ச்சிகளின் அமைப்பு முறை என்பது வேடமிட்டு வந்துள்ள பாத்திரங்களில் ஒரு பாத்திரம் கதையைச் சொல்லுவதாகவும், மற்ற பாத்திரம் ‘ம்ம்’ கொட்டியும், ‘ஆமாம்’ சொல்லியும் ‘ஓஹோ’ என்று இடையிடையே சொல்லியும், அவ்வப்போது கதையைத் தொடர்வதற்கு ஏதுவான சிறு சிறு வினாக்களைக் கேட்டும் கதையைத் தொடர்ந்து சொல்ல வழிவகுக்கிறது. இப்பாத்திரப் பேச்சு ஒரு நிகழ்ச்சியில் 10 சதவிகிதப் பேச்சாக இருக்கிறது. எஞ்சிய 90 சதவிகிதப் பேச்சு கதையைக் கூறும் பாத்திரமாகவே திகழ்கிறது.

    கால மாற்றம், இடமாற்றம் என்னும் இவைகள் பாத்திரங்களின் இட, வல மாற்றத்தினால் குறிக்கப்படுகிறது. அனைத்துக் கதை நிகழ்ச்சிகளையும் கூறும் பாத்திரமாக வரும் பால்வடிவின் தனித்திறமையே இந்நிகழ்ச்சிகளின் உயிர்நாடியாக உள்ளது. புராண, இதிகாச, தெய்வ நிகழ்ச்சிகளைத் தனிப்பட்ட வகையில் சேர்த்து, அவைகளைக் கதைகளாகச் சொல்லும் போது ஒரு பாத்திர வேடத்தில் இருப்பினும், அந்தப் பாத்திரங்கள் பேசுவது போலவே நிகழ்ச்சி காணப்படுகிறது. அடுத்தடுத்து என்ன என்ற ஆவலை உண்டாக்கும் வகையில் தனது கதை கூறும் முறையை அமைத்திருப்பதால் இந்நிகழ்ச்சியைக் காண்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.

    உடும்பின் தோலால் ஆன கஞ்சரா என்ற சிறு பறையை அடித்து பாட்டிற்கேற்ப ஒலியெழுப்பியும், அதற்குப் பக்க வாத்தியமாகச் சால்ரா வாசித்துக் கொண்டும் பாடல்களைப் பாடுகின்றனர். தொடக்கம், முடிவும் பாடல்களாகப் பாடப்படும் “கணபதியே வருவாய்”, “பக்தர் போற்றும் பக்தாசலனே”, “தேவி உனது திருப்பாதமே கதியென” போன்ற பாடல்களைப் பாடுகின்றனர்.

    இதில் முகபாவங்களோ, உடலசைவுகளோ, இயக்கமோ, இசையின் இணைவோ, மிகுதியாக இல்லை. வேடம் போட்டுக் கதை சொல்லல் அல்லது கதாகாலட்சேபம் செய்தல் என்னும் நிலையிலேயே இப்பகல் வேடம் அமைகிறது.

    இக்கலை தெருவில், பகலில் பலரும் பார்க்கும்படி நிகழ்த்தப்படுகிறது. சைவ, வைணவ அடியார்களின் வாதங்களாக அமைகிறது. “கன்னத்தில் கொடுப்பேன்”, “தயிர்ப்பட்டையால் அடிப்பேன்”, “நாமத்தைக் கலைப்பேண்டா” போன்ற ஏச்சுக்களின் மூலம் அடியார்கள் பேசிக்கொள்கிறார்கள். இதனால் இக்கலை நகைச்சுவையுள்ளதாக இருக்கின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 17:14:40(இந்திய நேரம்)