தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செட்டியார் – செட்டிச்சி பொம்மை நடனம்

  • செட்டியார் – செட்டிச்சி பொம்மை நடனம்

    முனைவர் சி.சுந்தரேசன்
    துறைத்தலைவர்
    நாட்டுப்புறவியல் துறை

    தமிழக நாட்டுப்புற நடனங்களில் நகைச்சுவை உணர்ச்சியை ஊட்டுவதற்காகப் பல உத்தி முறைகளைக் கையாளுகின்றனர். குறவன் குறத்தி நடனத்தில் குறவனும் குறத்தியும் ஒருவரையொருவர் ஏசியும் திட்டியும் ஆடுவதாக அமையும். பபூன் கோமாளி கேளிக்கையூட்டும் ஆட்டக்காரன் ஆவான். ஒவ்வொரு ஆட்டக்காரர் இடையே புகுந்து ஆடுவான். அவ்வாறு ஆடுவது பார்வையாளர்களுக்கு நகைப்பை உண்டாக்கிறது.

    பபூன் வேடக்காரர் மட்டுமின்றி பெரிய தலைக்கட்டை அணிந்து வித்தியாசமாகத் தோன்றும் வயதான செட்டியார் எனப்படுவர். செட்டிச்சி நடனம் நகைச்சுவையை உண்டாக்கவே இடம்பெறுகிறது. சிறிய உடம்பில் பெரிய தலைக்கட்டை அணிந்து செட்டியார் வேடக் கலைஞர் பெரிய தொந்தி போட்ட வயதானவராகக் காணப்படுகிறார்.

    வங்காளத்தின் பூரா பூரி

    வங்காளத்தில் மைமன் சிங் என்னுமிடத்தில் சிறப்புடன் முகமூடி நடனங்களின் பூரா - பூரி (கிழவன் – கிழவி) நடனம் புகழ்வாய்ந்தது. நகைச்சுவை உணர்வை ஊட்டுகிறது. கிழவன், கிழவி தலைக்கூட்டுப் பொம்மைகளில் அவர்கள் வயதானவர்கள் என்ற தோற்றம் போல் இருக்கும். மிக வயதான காலத்திலும் காதலும் குறும்பும் இவர்களிடம் இன்னும் போகவில்லை என்பதைக் குறிக்கிறது. பறை வாத்தியத்தில் இசைக்கப்படும் தாள இசைக்கேற்ப இவர்கள் ஆடியும் அசைந்தும் நகைப்பை உண்டாக்குகிறார்கள். இந்நடனத்தின் மூலம் இத்தம்பதியினரின் நீண்ட நாளைய மகிழ்ச்சியை விளக்குகிறது. இந்நடனம் ஆழமான நீண்ட செய்திகளை உள்ளடக்கியதாக உள்ளது.

    கோவாவின் பொம்மையாட்டம்

    செட்டியார் – செட்டிச்சி பொம்மையுடன் கோவாவிலிருந்து இங்கு வந்த கலையாகும். 1976இல் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்நடனமும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. விழாவின் முடிவில் தமிழக நாட்டுப்புற கலைஞர் ஒருவர் செட்டிச்சியை மணக்க விரும்பினர். முதலில் மறுக்கும் இளம் பெண் செட்டியாரின் செல்வத்திற்கு ஆசைப்பட்டு மணக்கச் சம்மதிப்பது வெறும் சைகைகளால் வெளிப்படுத்துவது போல் அமைகிறது.

    தமிழகச் செட்டியார் செட்டிச்சி பொம்மையாட்டம்

    மனித முகத்தை மூன்று நான்கு மடங்கு பெரியதாக உள்ளது போல அமைத்து ஆடுவது மனிதத் தலைக் கூட்டுப் பொம்மையைத் தயாரித்துக் கொள்கின்றனர். இக்கூட்டின் மேற்புறத்தில் மரத்தூள் பச்சை கலந்த கலவையைப் பூசிக் கொள்கின்றன. இளமையான உடற்கட்டுடன் பெண் தலையில் பெரிய தலைப் பொம்மையை அணிந்து அழகாக ஆடி வருகிறாள். செட்டியார் வேடமணிந்து ஆடும் போது முதுமை, தொப்பை பெரிய உருவம் இவைகளைக் கண்டு பெண் அருவெருப்புடன் முதலில் ஒதுங்கிப் போகும் பெண் செட்டியாரின் செல்வத்திற்காக மணக்க நேரிடுகிறது. கிழவர் உரிமையுடன் நெருங்கும் போதெல்லாம் அடித்து விரட்டுவது போலவும் சைகைகள் செய்வது பார்வையாளர்களைச் சிரிப்பூட்டும் விதமாக அமைகிறது.

    செட்டியார் உடை

    கிழவரின் தலைப் பொம்மைக்கேற்ப அவர் தொந்தி விழுந்தவராகத் இருப்பார். தொளதொள என ஆடை இருக்கும். முழுக்கை ஜிப்பா அணிந்திருப்பார். பட்டு வேட்டியைக் கீழ்ப்பாய்ச்சு விட்டுக் கட்டியிருப்பார். உடம்பின் மேல் விசிறி மடிப்புடன் கூடிய அங்கவஸ்திரத்தை அணிந்திருப்பார்.

    செட்டிச்சி உடை

    பெண்ணின் இயல்பான உடல் உருவத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்படித் தோன்றும். இப்பெண் பட்டுப் பாவாடை, ஜாக்கெட், தாவணி அணிந்து இருப்பாள். கிழவரை விரும்புவது போல் இருப்பாள். ஆனால் நெருங்கும் போது கையை ஓங்கிக் கண்ணத்தில் அறைவதும் அணைக்க வரும் போது சம்மதிப்பது போல் நெருங்கித் திடீரென அவரைப் பிடித்துக் கீழே தள்ளுவதும் போல தான் இந்தப் பெண் ஆட்டக் கலைஞரின் குறும்புச் செயல்கள் மகிழ்ச்சியை உண்டாக்கிச் சிரிப்பை உணர்த்துகிறது.

    கேரளாவின் புரட்டு

    செட்டிச்சி பொம்மை நடனம் போல் கேரளாவில் புரட்டு என்னும் பெயரில் ஒரு நாட்டுப்புற நடன நாடகம் வழங்கி வருகிறது. புரட்டு என்பது போலச் செய்தல் அல்லது கேலியும் பரிகாசமும் செய்தல் என்று பொருள் குறிக்கிறது. இந்நாட்டுப்புற நடன நாடகத்தில் பாடப்படும் பக்க இசை பெரும்பாலும் தமிழ்ப் பாடல்களாக அமைந்துள்ளன. இந்தப் புரட்டு நாட்டுப்புற நடன நாடகம் கேரளத்து உழவர்களாலும் புலையர்களாலும் நிகழ்த்தப்படுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 17:52:37(இந்திய நேரம்)