தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒயிலாட்டம்

 • ஒயிலாட்டம்

  முனைவர் ஆ.சண்முகம் பிள்ளை
  உதவிப் பேராசிரியர்
  நாட்டுப்புறவியல் துறை

   

  ஒயில் என்னும் சொல்லுக்கு ஒய்யாலும், அழகு, அலங்காரம் போன்ற பொருள்கள் உண்டு. ஒய்யாலும் என்ற சொல் கம்பீரம், எடுப்பு போன்ற பொருள்களைத் தரும். ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டமாக ஒயிலாட்டம் இருப்பதால் கம்பீரமும் எடுப்பும் மிக்க ஆட்டம் என்று ஒயிலாட்டத்திற்குப் பொருளமைதி காணலாம். அழகுள்ள ஆட்டம் என்பதாகும்.

  இராமநாதபுரமும், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட மக்கள் வேளாண்மை மற்றும் குடிநீருக்குப் பெரும்பாலும் மழையையே நம்பி வாழ்கின்றனர். இவர்கள் மழை வேண்டி அம்மன் கோயில்களில் முளைப்பாரி அல்லது முளை கொட்டுத் திருநாளைச் சிறப்பாக்க கொண்டாடுகின்றனர். அத்தருணத்தில் வழிபாட்டின் ஒரு அங்கமாக ஒயிலாட்டம் ஆடப்படுகிறது.

  இக்கலை கோயில் திருவிழாவின் போதும் பொது நிகழ்ச்சிகளிலும் நிகழ்த்தப்படுகிறது. முன்னோர்களையும் ஊர்த் தெய்வங்களையும் வழிபடும் போதும் அம்மன் கோயில் விழாக்களிலும் விநாயகர் கோயில், கத்தோகிக்கக் கிறித்தவக் கோயில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. கோயில் கும்பாபிசேக நிகழ்ச்சிகளிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது.

  ஒயிலாட்டம் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களைச் சார்ந்த முக்குலத்தோர் குறிப்பாக மறவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். மதுரை மாவட்டத்தில் மலை வேடர், நாயக்கர், வலையர், மூப்பனார், பள்ளர், நாடார், ஆசாரி, சேர்வை ஆகிய சமூகத்தவரிடையே இக்கலை காணப்படுகிறது. இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களே ஒயிலாட்டத்திற்கான மையப் பகுதி எனலாம்.

  இவ்வாட்டத்தில் பங்கேற்போர் எண்ணிக்கை இடத்துக்கு இடம் அல்லது ஆடப்படும் சூழலுக்கேற்ப மாறுபடுகிறது. ஒயிலாட்டத்தில் கலந்து கொள்ளும் ஆட்டக்காரர்களுக்கு வயது வரையறை இல்லை. ஒரு குழுவில் வெவ்வேறு வயதினர் இடம்பெறுவதுண்டு. சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது ஒத்த வயதினர் ஆடுகின்றனர். பெண்கள் பங்கேற்பதில்லை.

  ஒயிலாட்டம் ஆடுபவர்கள் வேட்டியைக் கீழ்ப்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு மேலே வெள்ளைச் சட்டை அணிந்து இரண்டு அல்லது மூன்று வண்ணங்களாலமைந்த துணியால் தலைப் பாகைக் கட்டி வலக்கையில் வண்ணக் கைக் குட்டையைப் பிடித்திருப்பார்கள். கோயில் சடங்குகளில் ஆடும் ஆட்டக்காரர்கள் சட்டை அணியாமல் விபூதி, சந்தனம் பூசி மாலை அணிந்திருப்பார்கள்.

  இராமாயணம் போன்ற குறிப்பிட்ட கதைப் பாடல்களைப் பாடி ஆடுகின்றவர்கள். அக்கதையின் முக்கிய பாத்திரங்களாக ஆட்டக்காரர்களுள் சிலர் வேடம் புனைந்து கொள்வர். பெண் வேடம் போடுபவர் புடவை கட்டியிருப்பார்.

  இவ்வாட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் கச்சம் அல்லது மணிச் சலங்கையை அணிந்திருக்க வேண்டும். கூடுதலான மணிகளைக் கொண்ட கச்சத்தைக் கட்டிக் கொண்டு நீண்ட நேரம் ஆடுபவர் சிறப்பு மிக்க ஆட்டக்காரராகக் கருதப்படுவார்.

  இம்முறையில் அமைந்த ஒப்பனைகளுடன் ஆடுபவர்கள் ஒரு வரிசையாகவோ, இரு வரிசையாகவோ நிற்பர். அண்ணாவி அல்லது வாத்தியார் வரிசைக்கு முன்னால் நின்று ஆட அவருடைய வழிகாட்டுதலுடன் ஏனையோர் ஆடுவர். ஒன்றுக்கு மேற்பட்டோரும் முன்னால் நின்று ஆடுவதுண்டு.

  இவ்வாட்டத்தில் பாடல் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றது. அண்ணாவி முன் பாட்டைப் பாட ஏனைய ஆட்டக்காரர்கள் குழுவாகப் பின்பாட்டுப்பாடுவர். இந்தப் பாடல்கள் மந்த கதியில் தொடங்கப் பெற்றுத் துரித கதியில் சென்று அதி துரித கதியில் முடியும்.

  இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் ஒயிலாட்டத்தின் போது தவில் மற்றும் மிருதங்கம் பயன்படுத்துகின்றனர். திருநெல்வேலிப் பகுதியில் குடமுழவோடு, கேசியோ என்னும் மேனாட்டு இசைக் கருவியும் பயன்படுத்தப்படுகிறது. அனைத்துப் பகுதிகளிலும் ஒயிலாட்டத்தின் போது வெண்கலத்தாலான தாளம் பயன்படுத்துவதைக் காணமுடியும்.

  இந்த நிகழ்த்துக் கலை எவ்வளவு காலமாக மக்களிடையே நிகழ்த்தப்பட்டு வருகிறது என்பது குறித்த வரலாற்றுச் சான்றுகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

  ஒயிலாட்டத்தைக் கற்பவர்கள் அண்ணாவி அல்லது வாத்தியார் ஒருவரின் மேற்பார்வையில் இவ்வாட்டத்தைக் கற்றுக்கொள்ளுகின்றனர். கற்றுக்கொள்ளும் காலம் ஆடுவோரின் ஆர்வம் திறமையைப் பொறுத்து அமைகிறது. எனினும் சுமார் மூன்று மாதம் பயிற்சிக்கான கால அளவாக அமைகிறது. ஒருவர் அண்ணாவியாக மாற வேண்டுமானால் நல்ல முறையில் ஆடுகின்ற திறமையைப் பெற்றிருப்பதோடு பாடுகின்ற திறமை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

  இந்த ஆட்டத்தின் போது வாய்மொழியாக வழங்கி வரும் பாடல்களையே கூடுதலாகப் பயன்படுத்துகின்றனர். தாங்கள் கற்றுக்கொள்ளும் பாடல்களை ஒயிலுக்கு ஏற்ப பாடும் திறமை ஒயிலாட்டத்தில் ஈடுபடுவோருக்கு இருக்கிறது.

  ஒயிலாட்டக்காரர்கள் தங்கள் ஊர்க்கோயில் விழாக்களில் ஆடுவதோடு விரும்பி அழைத்தால் வேறு ஊர்க் கோயில் விழாக்களிலும் சென்று ஆடுகின்றனர். ஆடுபவர்களின் போக்குவரத்துச் செலவு மற்றும் உணவுச் செலவுகளை அழைப்பவர்கள் அளிக்கின்றனர். ஊதியமாக எதையும் பெறுவதில்லை. இக்காலத்தில் தொழில்முறைக் குழுக்கள் பல தோற்றம் பெற்று வருகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 18:08:03(இந்திய நேரம்)