தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சக்கையாட்டம்

 • சக்கையாட்டம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  நான்கு தேக்கு மரத்துண்டுகளை விரல்களுக்கு இடையே வைத்து, அடித்து ஒலி எழுப்பும்படி ஆடும் ஆட்டம் ‘சக்கையாட்டம்’ ஆகும். சக்கை என்ற மரத்துண்டுகளை அடித்துக் கொண்டு ஆடுவதால் இது ‘சக்கையாட்டம்’ எனவும் பெயர் பெற்றது.

  பாண்டிச்சேரி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள மாரியம்மன், முருகன் கோவில்களில் பெரிய மற்றும் சிறிய விழாவாக நிகழ்த்தப்படுகிறது. விழாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் அடிப்படையில் இதன் நேரம் தீர்மானிக்கப்படுகிறது.

  குந்தளம், ஜால்ரா ஆகியன இவற்றிற்குரிய இசைக்கருவிகள். அரைக்கால் சட்டை, தோளில் சதுரமான துண்டு, தலையில் தலைப்பாகை, அரைக்கால் சட்டை, தோள்பட்டை நுனியில் குஞ்சம் என இவர்களின் ஆடை முறை அமைந்திருக்கும். இவர்கள் ஒரே மாதிரியான ஆடையை அணிந்தும் பல்வேறு வண்ணங்களில் அமையுமாறு இக்கலை உள்ளது. இக்கலையில் ஆண்கள் மட்டுமே பங்கு கொள்கின்றனர். 8 முதல் 12 கலைஞர்கள் இருப்பர். சக்கையாட்டத்தில் பாடப்படும் பாடல்கள் புராணக் கதைகள் தொடர்பாகவும், தேச உணர்வுப் பாடல்களாகவும், நீதிப் பாடல்களாகவும் உள்ளன.

  இவ்வாட்டத்திற்குரிய சக்கை தேக்கு மரத்தால் ஆனது. ஒரு ஆட்டக்காரரின் கையில் 4 சக்கைகள் இருக்கும். அது 16 செ.மீ நீளம் 2 செ.மீ அகலமும் உடையது. நான்கு துண்டுகளையும் மெல்லிய நூலால் பிணைத்து விரல்களுக்கிடையே வைத்துக் கொண்டு சக்கையை அடிப்பர்.

  இவ்வாட்டம் இணைக் கோடாகவும், வட்டமாகவும் ஆகிய இரண்டு நிலையில் நடைபெறும். ஆட்டம் வட்ட நிலையில் இருந்தால் முதல் பாட்டுக்காரர் அதாவது ஆசிரியர் நடுவில் நிற்பார். இணைக் கோடாக இருக்கும்பொழுது முன் பகுதியில் நிற்பார். ஆசிரியர் பாடலைத் தொடங்கிய பின் மற்றவர்களும் தொடர்ந்து பாடி ஆடுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 17:52:03(இந்திய நேரம்)