தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சில்லாக்காட்டம் அல்லது சில்லு விளையாட்டு

 • சில்லாக்காட்டம் அல்லது சில்லு விளையாட்டு

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  மனிதன் கூடி வாழத் தொடங்கிய நாள் முதல் இயற்கையோடு இயைந்து வாழ முற்பட்டான் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது. இவ்வகையில் நாட்டுப்புற விளையாட்டுக்களும் நாட்டுப்புறவியலின் முக்கியக் கூறுகளாக அமைகின்றன.

  சில்லாக்காட்டம்:

  ஓட்டுச்சில்லைப் பயன்படுத்துவதால் சில்லாக்காட்டம் என்றும் நொண்டியடித்துக் கோடிட்டு விளையாடுவதால் நொண்டிக்கோடு ஆட்டம் என்றும் பெயர் பெற்றது.

  ஆடுகருவி:

  நான்கு சமக்கட்டங்கள் கொண்ட நீள்சதுர அரங்கும் ஆளுக்கொரு சில்லும் கருவிகளாகப் பயன்படுகின்றன. அரங்கின் மேற்பகுதியான இடத்திற்கு மலை என்று பெயர்.

  ஆடும் முறை:

  முதற்கட்டத்தில் சில்லையெறிந்து நொண்டியடித்து அந்தக் கட்டத்தைத் தாண்டி அடுத்த கட்டங்களை ஒவ்வொரு காலடி மிதித்துச் சென்று கடைசிக் கட்டத்திற்கு வெளியே காலூன்றி மீண்டும் முன்போல் நொண்டியடித்துக் கீழ் வந்து சில்லை மிதித்து வெளியே தள்ளி அதை ஓர் காலடியில் மிதித்தல் வேண்டும்.

  இவ்வாறு பிற கட்டங்களிலும் தொடர்ந்து சில்லை எறிந்து ஆடல் வேண்டும். மேல் கட்டங்களில் எறிந்த சில்லை ஒவ்வொரு கட்டமாய்க் கீழே தள்ளிக் கொண்டு வந்து ஆடிக் கட்டத்திலிருந்து வெளியே தள்ளி ஒரே காலடியில் மிதித்தல் வேண்டும்.

  கட்டங்களின் வழியே செல்லும் போதும் திரும்பும் போதும் நொண்டியடிக்க வேண்டிய போதெல்லாம் நொண்டியடித்தே சென்று திரும்ப வேண்டும். எறியப்பட்ட சில்லு கட்டத்திற்கு அப்பால் விழுந்தாலும் கட்டத்திற்குள் விழாமல் கோட்டின் மேல் மிதித்தாலும் நொண்டியடிக்கும்போது தூக்கிய காலைக் கட்டத்திற்குள் ஊன்றினாலும் காலால் வெளியே தள்ளப்பட்ட சில்லை முதல் கட்டத்தினின்று ஒரே காலடியில் மிதிக்க முடியாதவாறு நெடுந்தொலைவிற்குச் சென்றாலும் ஆடுபவர் தோற்றவராவார். அதன் பின் அடுத்தவர் ஆடல் வேண்டும். அடுத்தவரும் தவறினால் முன்னவர் மீண்டும் ஆடல் வேண்டும். இப்படியாக ஆட்டம் முடியும் வரை இருவரும் மாறி மாறி ஆடுவர்.

  அதன் பின் தலைமேல் சில்லை வைத்துக் கொண்டு ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வோர் காலடியில் மிதித்து மலை வரை நடந்து சென்று நடந்து திரும்ப வேண்டும். பின்பு அரங்கிற்கு முன் நின்று மலையில் அல்லது மேற்புற வெளியில் சில்லெறிந்து முன்போல் நொண்டியடித்துச் சென்று அதை மிதித்தல் வேண்டும். பின்பு அங்கிருந்து நொண்டியடித்து திரும்பி வந்து அதை மிதித்தல் வேண்டும்.

  ஒருமுறை பழம் போட்டவர் மறுமுறை முந்தியாடுவார். மறுமுறை பழத்திற்கு சில்லெறியும் போது அது பழக்கட்டத்தில் விழுந்து விடின் தவறாகும்.

  ஒருவரோ அல்லது இருவருமோ எல்லாக் கட்டத்திலும் பழம் போட்ட பின் விளையாட்டு கலைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்படும். மேற்குறிப்பிட்ட ஆட்டம் ஒற்றைச் சில்லாக்காட்டம் எனப்படும். அவ்வாட்டத்திற்கு இரட்டை மற்றும் வட்டச் சில்லாக்காட்டம் எனப் பல வகைகளும் உண்டு.

  சில்லாக்காட்டம் ஆடும்பொழுது பாடும் பாடல்

  “உங்க வீட்டு நாயி

  எங்க வீட்டுக்கு வந்துச்சு

  கல்லால் அடிச்சேன் – அது

  காலொடிஞ்சு போச்சு

  காலொடிஞ்சு போச்சு

  காலொடிஞ்சு போச்சு”

  என்றெல்லாம் அவரவர்களுக்கேற்ப பாடி விளையாடுவர்.அதிகமாக சிறுமிகளும், ஒரு சில நேரங்களில் சிறுவர்களும், சில நேரங்களில் இருவரும் சேர்ந்தும் விளையாடுவர்.

  வரைபடம்:

  சில், பானை, சட்டி உடைந்தவை அல்லது மாங்கொட்டை (சில்லி) வீட்டில் உடைந்த ஓட்டுப் பகுதி.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:14:17(இந்திய நேரம்)