தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாம்பு நடனம்

 • பாம்பு நடனம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  நாதஸ்வரத்தில் வாசிக்கப்படும் மகுடி இசைக்கேற்ப பாம்பைப் போல் வளைந்து நெளிந்து பெண்களால் ஆடப்படும் நடனத்தைப் பாம்பு நடனம் என்கின்றனர். இந்த நடனம் கரகாட்டத்தின் துணைநிலை ஆட்டமாகக் கூறப்படுகிறது.

  தொழில்முறைக் கலைஞர்களால் பொழுதுபோக்கை நோக்கமாகக் கொண்டு ஆடப்படுகிறது. மாரியம்மன் கோயில் திருவிழாக்களில் பாம்பு நடனம் ஆடப்படுகிறது. மாரியம்மன் பாம்போடு தொடர்புபடுத்திப் பேசப்படுவதால் நடனத்தை ஏற்பாடு செய்யப்படுகிறது என்ற நம்பிக்கையும் உள்ளது. பாம்பு நடனம் வேண்டுமானால் ‘பாம்பு நடனப் பயிற்சி பெற்ற கரகாட்டப் பெண்கள் பாம்பு நடனத்திற்கேற்ப இறுக்கமான உடையணிந்து கரகமின்றிச் செய்வர். பாம்பு நடனம் மேடை நிகழ்ச்சிக்கு மட்டுமே ஏற்புடையது ஊர்வலம் தெருக்கள் போன்ற இடங்களில் விழுந்து புரண்டு ஆட இயலாது என்றும் கூறப்பட்டது.

  ஆடைகள் வீணாகும் என்பதால் ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியை அதிகம் ஒப்புக்கொள்வதில்லை என்று அறியமுடிகிறது. உடலை ஒட்டினாற் போன்ற வெண்ணிற ஆடையை மார்பிலிருந்து கால்வரை முன்புறம் வெண்ணிற ஆடையும் பின்புறம் கருப்பு நிற ஆடை அணிந்து இவர்கள் தங்களை ஒப்பனை செய்து கொள்வார்கள்.

  கரகாட்டத்திற்குரிய அதே இசைக்கருவிகள் தான் பாம்பு நடனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. நாதஸ்வரத்தில் மகுடி வாசிக்கப்படும். தவில் பம்பை மெல்ல வாசிக்கப்படும்.

  “எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுதே’

  ஆடு பாம்பே”

  என்பன போன்ற திரை இசைப் பாடல்கள் பாம்பு நடனத்தின் போது வாசிக்கப்படும்.

  பாம்பு நடன நிகழ்ச்சி

  நாதஸ்வர வாசிப்பதற்கேற்ப பாம்பு நடனம் ஆடுவர். பாம்பு படமெடுப்பது போலவும், சுழன்றாடுவது போலவும், வளைந்து நெளிந்து செல்வது போலவும் ஆடுவர். சிறிது நேரம் ஆடி முடித்தப் பின்னர் நாதஸ்வரத்தில் மகுடி வாசிக்கப்படும். காமடி நடிகர் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு மகுடி வாசிப்பது போல பாவனைச் செய்து நடிப்பார்.

  பாம்பு ஆட்டக்காரப் பெண் காமடி நடிகருடன் அருகில் சென்று ஆடுவார். வட்டமாகச் சுழன்றாடும் போது இசைக்கலைஞர்களைக் கொத்தச் செல்வது போல் பாவனைச் செய்வார். காமடியன் மகுடி வாசிப்பதனை நிறுத்திவிட பாம்பு ஆட்டக்காரர் அவரைக் கொத்திவிட்டதாகப் பாவனைச் செய்துவிட்டு ஆடுகளத்தை விட்டு வெளியேறி விடுவார். காமடியன் இறந்தவர் போல நடிப்பார்.

  பாம்பு நடனம் மட்டும் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்க இயலாது என்பதனால் இத்தகைய சம்பவங்களை நிகழ்த்திக் காட்டுகின்றனர். ஒருவர் பாம்பு கடித்து இறக்கும் போது அல்லது இறந்த சற்று நேரத்திற்குள்ளேயே கடித்த பாம்பை வரவழைத்துக் கடிவாயில் வைத்தால் பாம்பு தான் கக்கிய விஷத்தைத் திரும்பி உறிஞ்சிவிடும் என்றும் பாம்புக்கடிக்கு ஆளானவர் உயிர் பிழைத்துக்கொள்வார் என்றும் பின்னர் பாம்பு இறந்துவிடும் என்றும் பொதுவாக நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்படும்.

  இந்த நிகழ்ச்சியில் காமடியன், கரகாட்டக்காரர்கள் குறவன் குறத்தி ஆட்டக்காரர்கள், இசைக்கலைஞர்கள் அனைவரும் பங்கு கொள்ளும் பொது நிகழ்ச்சியாக இருப்பதால் அனைவரும் உற்சாகம் அடைவார்கள். கரகம் குறவன் குறத்தி ஆட்டங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட நிகழ்ச்சியாக உற்சாகத்தை ஏற்படுத்தும் நோக்கமாக இந்நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

  ஆட்டத்தொழிலில் புதுமையைப் புகுத்தும் நோக்கில் பத்து ஆண்டுகளுக்கு முன் பாம்பு நடனம் அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தகவல் குறிப்பிடப்படுகிறது. திரைப்படங்கள் பலவற்றில் பாம்பு நடனம் இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 18:02:38(இந்திய நேரம்)