தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கருப்பாயி ஆட்டம்

 • கருப்பாயி ஆட்டம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  கருப்பாயி என்ற ஒரு பெண்ணானவள் வேடம் ஏற்றும் நிகழ்த்தும் கலை கருப்பாயி ஆட்டம், இது கரகாட்டத்தை மையமாகவும் தனி ஆட்டமாகவும் நிகழ்கிறது.

  இந்த ஆட்டம் பெரும்பாலும் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைப் பகுதிகளில் நிகழ்கிறது. இவை கோவில் விழாக்களிலேயே நடைபெறும். பெரும்பாலும் நள்ளிரவு நேர்த்திலும் நாற்சந்தியிலும் நிகழ்த்தக்கூடிய ஆட்டம் கருப்பாயி ஆட்டம்.

  இக்கலையில் கருப்பாயி வேடமணிந்தவருடன் கரகாட்டப் பெண்களும், குறவன், குறத்தி வேடக்காரர்களும், நையாண்டி மேளக்காரர்களும் கலந்து கொள்கின்றனர். கருப்பாயி மற்றும் பிற கலைஞர்கள் அவர்களுக்குரிய இயல்பான ஒப்ப்னையுடன் இருப்பார். கருப்பாயி வேடத்தை ஆண் கலைஞரே புனைகின்றார். இவர் முழங்கால் வரை சேலை கட்டியிருப்பார். மார்புக்கச்சு மட்டும் அணிந்திருப்பார். ரவிக்கை அணிவதில்லை. மார்புக் கச்சில் வட்டமான வெள்ளை நிறமிருக்கும். மாராப்பு சேலை விலகும் போது இந்த வெள்ளை நிறம் தெரியும்படி இருக்கும். பனை ஓலையால் செய்த போலிப்பல்லை வாயில் கட்டியிருப்பார். இது மேலும் கீழும் அசையும். மரத்தால் ஆன தாலி கழுத்தில் தொங்கும். கருப்பாயின் ஒப்பனையைப் பார்க்கும் போது நகைச்சுவையாக இருக்கும்.இவர் கையில் சிறு கூடை ஒன்று வைத்திருப்பார்.

  இவர்களின் உரையாடல் நாடகப் பாணியில் இருக்கும். ஆரம்பமே கும்மியில் தொடங்கும். கரகாட்டப் பெண்களும், குறத்தியும், கருப்பாயியும் கும்மியடிப்பர்.

  தண்ணிக்குடமெடுத்து ஓ புள்ள கருப்பாயி

  தங்கமக தண்ணிக்கு வந்தா…. ஓ புள்ள கருப்பாயி

  என்று பாடிக் கும்மி அடிப்பர். கும்மி முடிந்ததும் கருப்பாயிடம் பிற கலைஞர்கள் உரையாடுவார்கள். அப்போது இந்த உரையாடல் நகைச்சுவையுடனும், பாலியலாகவும் இருக்கும். உரையாடல் ஊருக்கு ஊர், நேரத்திற்கு நேரம் வித்தியாசப்படும். கடைசியில் கரகாட்டப் பெண்ணொருத்தி கருப்பாயின் சேலையைப் பிடித்து இழுப்பாள். அந்தச் சேலை கையோடு வந்துவிடும். அப்போது கருப்பாயி பாவாடை மார்புக் கச்சுடன் நிற்பாள். அவள் கரகாட்டக்காரியிடம் சேலையைக் கொடு என்று கேட்பாள். அதற்கு கரகாட்டக்காரி மறுப்பாள். கருப்பாயி தன் பாவாடையை மடித்துக் கட்டிக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடுவாள். அதோடு இந்த நிகழ்ச்சி முடியும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 17:42:48(இந்திய நேரம்)