தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நெல்லி மரம்

  • நெல்லி மரம்

    முனைவர் கு.க.கவிதா,
    உதவிப் பேராசிரியர்,
    சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

    வேறு எந்த ஒரு கனியிலும் இல்லாத அளவிற்கு வைட்டமின் ‘சி’ உடையது நெல்லிக்கனி. இந்தியா முழுவதும், பாலைப் பகுதியைத் தவிர இதர இடங்களில் இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது. இதன் அருமையான கனிகளுக்காகத் தோட்டங்களிலும் வீடுகளிலும் வளர்க்கப்பட்டு வருகிறது.

    தாவரவியல் பெயர் : பில்லாந்தஸ் எம்பிலிகா அஃபீசினாலிஸ் (Phyllanthus emblica L/)
    தாவரக் குடும்பம் : யுபோர்பியேசி (Euphorbiaceae)

    நெல்லி மரம் 8-12 மீட்டர் உயரம் வளரக்கூடியது. அடிமரம் 45 செ.மீ அளவிற்குப் பருத்து சிறிது உயரத்தில் கிளைகளைப் பரப்பிக் கொண்டு, ஓரளவிற்கு அடர்ந்து காணப்படும். பட்டை கருமைச் சாம்பல் நிறத்தில் சொரசொரப்பாக இருக்கும்.

    நெல்லி மரம்
    புதுத்தளிர்கள் உருவாகத் துவங்கியதும் அதன் சந்துகளிலிருந்து பூக்களும் தோன்ற ஆரம்பிக்கும். தமிழகத்தில் நெல்லிமரம் இரு முறை பூக்கின்றன. பிப்ரவரியில் ஒரு முறையும் ஜூலையில் மற்றொரு தடவையும் பூக்கும். ஆனால் பிப்ரவரியில் அதிக அளவு காய்கள் உருவாவதில்லை. ஜூலையில் பூக்கும் சமயமே நிறைய காய்கள் கிடைக்கின்றன.

    பயன்கள் :

    தழை, கால்நடைகளுக்குத் தீவனமாகும். தழையை எருவாகவும் பயன்படுத்துகின்றனர். தழையில் 25% டானின் உள்ளது. தழையிலிருந்து சாயப்பொருட்கள் எடுக்கலாம். முன்னர் டஸ்ஸார் பட்டிற்குச் சாயமேற்ற இதனை உபயோகித்துள்ளனர்.

    மரப்பட்டையில் 8-9% அளவில் டானின் உள்ளது. சிறு கிளைக்குப் பட்டையில் 21% அளவில் டானின் உள்ளது. இதைப் பயன்படுத்தி தோலைத் திறம்பட பதனிடலாம். மற்றும் தோலிற்குச் சிவப்பு கருமை நிறமும் ஏற்படும்.

    கனியில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. நெல்லிக்கனியிலுள்ள வைட்டமின் ‘சி’ சத்து 100 கிராம் சதையில் 720 மில்லி கிராம் வரை சில கனிகளில் இருக்கும். கடலில் பயணம் செய்வோரும் நெல்லிக்கனிப் பொடியை உணவுடன் கலந்து உண்டால் கடல் நோய் (sea - sictness) வராது. நெல்லிக்கனியில் நிறைய பெக்டினும் உள்ளது. நெல்லிக்கனியுடன் கடுக்காயையும் சேர்த்து தோல் பதனிட உபயோகிக்கின்றனர்.

    நெல்லிக்காயிலிருந்து எழுதும் மையும் சாயப்பொருளும் தயாரிக்கலாம். காயிலிருந்து எடுக்கப்படும் ஒருவித எண்ணெய் தலை முடியை வளர்க்கும் எனக் கருதப்படுகிறது.

    இதற்கு நறுமணமும், பூசன மற்றும் பாக்டீரியா நாசினியாகச் செயல்படும் திறனும் உள்ளன.

    நெல்லி விதையில் புரதத்தையும் கொழுப்பையும் சிதைக்கும் என்ஸைம்கள் உள்ளன.

    மரத்துண்டுகளையும், கிளைகளையும் கலங்கிய நீரில் போட்டு வைத்திருந்தால் அதாவது கிணறுகளில் நீர் தெளிந்துவிடும். மற்றும் உப்பு நீரில் உப்பின் கடுமையைக் குறைத்துவிடும்.

    நெல்லி

    மருத்துவப் பயன்கள் :

    மரத்தைத் தவிர, இதரப் பகுதிகள் அனைத்தும் மருத்துவப் பயன்களுடையவை.

    இலைக்கொழுந்து சீதக் கழிச்சலுக்குக் கொடுக்கலாம்.

    நெல்லிப்பூ குளிர்ச்சியுண்டாக்கி மலமிளக்கி ஆகிய பண்புகள் கொண்டது. நெல்லிவேர் வாந்தி, சுவையின்மை ஆகியவற்றைக் குணப்படுத்தும். நெல்லிக்கனி குளிர்ச்சியுண்டாக்கி, சிறுநீர் பெருக்கி, மளமிலக்கி, உரமாக்கி ஆகிய பண்புகளும் வைட்டமின் ‘சி’யும் கொண்டுள்ளது.

    நெல்லி விதை ஆஸ்துமா, பித்தம், சளி ஆகியவை குணப்படுத்தும் திறன் விதைக்கு உள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:54:50(இந்திய நேரம்)