தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

  • கும்பி காத்தல்

    முனைவர் வா. ஹஸீனாபேகம்
    பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
    சித்த மருத்துவத்துறை

    நமது உடல் உறுப்புகளில் முக்கியமாக கல்லீரல், இருதயச் சிறுநீரகம், நுரையீரல் போன்றவை பாதுகாப்பாக இருப்பதற்கான ஆரோக்கிய வழிமுறைகளை மேற்கொள்கிறோம். இதில் உணவுப் பாதையின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய சிந்தனை மிகக் குறைவாகவே உள்ளது.


    குடற்பகுதி / உணவுக் குழாய் பகுதியைச் சீராக வைத்துக் கொண்டாலே நமது உடல் ஆரோக்கியம் சீராக்கப்படும் என்று இன்றைய அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.


    நுரையீரலுக்கு அடுத்ததாக அதிக பரப்பளவு கொண்ட உறுப்பு உணவுப் பாதை ஆகும். குடற்பகுதி இரண்டாவது மூளை என்று குறிக்கப்படுகின்றது. அதாவது நமது மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் அனைத்து நரம்பு கடத்தி வேதிமக் காரணிகளும் நமது குடற்பகுதியிலும் உள்ளன என்றும், குறிப்பாக செரட்டோனின் ஹார்மோன் மிகுந்து சுரக்கப்படுகின்றது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.


    மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்பட்ட நிலையில் மூளையின் பாதிப்பு குடற்பகுதியைத் தூண்டுகின்றதால் மிகுந்த நரம்பு கடத்திகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.


    இதனையே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கொள்ளலாம். குடற்பகுதியில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் நரம்பு மண்டலத்தூண்டுதலால் முகத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன என்று கொள்ளலாம்.


    மேலும், குடற்பரப்பின் உட்பரப்பில் 400க்கு மேற்பட்ட நுண்ணுயிரி வகைகள் ஒட்டிக் கொண்டுள்ளன. நமது உணவுப் பழக்கங்கள் மாறுதல்களால் பயனுள்ள நுண்ணுயிரிகள் எண்ணிக்கை குறைகின்றது.
    பொதுவாக குடற்பரப்பில் 1 கிலோ பயனுள்ள நுண்ணுயிரிகள் உள்ளன. அவை நமது உடலில் காணப்படும் செல்களின் எண்ணிக்கையைவிட 10 மடங்கு அதிகமானதாகும். கரையும் நார்ச்சத்துடைய மாச்சத்து உணவுப் பொருட்களைச் சிதைக்கும் நொதி நமது குடற்பகுதியில் இல்லாததால் இப்பொருள் அடங்கிய உணவு செரிமானம் அடையாமல் கடைக்குடல் பகுதிக்குச் சென்றடைகின்றன. அங்கு பயனுள்ள நுண்ணுயிரிகளால் சிதைக்கப்படுகின்றன. இந்நிலையில் நுண்ணுயிரிகள் பெருக்கமடைவதுடன் உடலுக்கு நன்மையளிக்கும் சிறிய கொழுப்பு அமிலங்கள் உற்பத்தி செய்கின்றன.


    இந்தக் கொழுப்பு அமிலங்களில் புயூட்ரிக் அமிலம், புரோபியூனிக் அமிலம் போன்றவை அடங்கும். இந்தப் புயூட்ரிக் அமிலம் கடைக் குடற்பகுதியில் புற்றுச்செல்களைச் சிதைத்து புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன. மேலும் இந்தப் புரோப்பியோனிக் அமிலம், இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகுதலைத் தடுத்து நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கின்றது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.


    மேலும், பயனுள்ள நுண்ணுயிரிகள் பெருக்கம் அடையும் போது ‘பாக்டீரியோசின்’ என்ற புரதத்தை வெளியிடுகின்றன. இது தீய நுண்ணுயிரிகள் அழிக்கும் கிருமி கொள்ளி நாசினி ஆகச் செயல்படுகின்றது. பயனுள்ள நுண்ணுயிரிகள் பெருக்கமடைந்த நிலையில் குடற்பரப்பில் ஒட்டிக்கொள்வதால் தீய நுண்ணுயிரிகளை வெகுவாக அழிக்கப்பட்டு அவற்றால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, சீதக்கழிச்சல் போன்ற நோயிகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.


    மேலும் நோய் எதிர்ப்பாற்றலைத் தரும் இம்மியுனோகுளோபின் உற்பத்தியைத் தூண்டுவதால் உடல் ஆரோக்கியம் காக்கப்படுகின்றது. உண்ணும் உணவுச் செரிமானத்தைத் தூண்டும் நொதிகள் உள்ளதால், சீரண சக்தி அளித்து உடல் காக்கின்றது.


    எனவே நாம் குடற்பகுதியை ஆரோக்கிய உணவு உட்கொண்டு பாதுகாத்தால் அவை பயனுள்ள நுண்ணுயிரிகளைப் பெருக்கமடையச் செய்து உடல் ஆரோக்கியத்தைக் காக்கின்றன. ‘கும்பி’ என்ற குடலைச் சீராக வைத்துக் கொண்டால் உடலில் எந்தவித நோயுமின்றி வாழலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:15:25(இந்திய நேரம்)