தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மருதாணி

 • மருதாணி

  முனைவர் ந.நாகராஜன்
  உதவிப் பேராசிரியர்
  தொல்லறிவியல் துறை

  தாவரவியல் பெயர் : Lowsonia inermis L.

  குடும்பம் : Lythraceae

  ஆங்கிலம் : Henna

  வளரிடம் : இத்தாவரம் மத்திய கிழக்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவினைச் சார்ந்தது.

  வளரியல்பு : நல்ல மணமுள்ள புதர் அல்லது சிறியமரமாகும். 6மீ உயரமுள்ளது. சில முட்கள் கொண்டது. இலைகள் தோல் போன்றவை, முட்டை வடிவம், மலர்கள் பசும் மஞ்சள் அல்லது வெண்மை நிறத்தினது, நறுமணம் கொண்டவை, நுனி மஞ்சரிகளாக அமைந்துள்ளன, கனிகள் அமுங்கியவை, கோணவடிவின, விதை பல எண்ணிக்கையிலானவை.

  மருத்துவப் பயன்கள் : முழுத்தாவரம், இலைகள், பட்டை மலர்கள் மற்றும் கனிகள் பயனுள்ளவை. தலைவலி மற்றும் தலைவலிக்கு முழுத்தாவரமும் அரைக்கப்பட்டு பற்றுப் போடப்படுகிறது. இலைகள் தசையிறுக்கும் தன்மையின; குருதிப் போக்கினைத் தடுக்கும், மாதவிடாய் சுலபமாய் இருக்க உதவும், தொண்டைக் கரகரப்புக்குக் கொப்பளிப்பு நீராகும். இலைச்சாறு வயிற்றுப் போக்கு மற்றும் சீதபேதியினைக் கட்டுப்படுத்தும்.

  பெண்களின் வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாயில் அதிகப்படியான குருதி போக்கு ஆகியவற்றைத் தீர்க்கும். காலில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்க பசையாக உதவும். பாலுடன் கலந்து விந்துகளின் ஊட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இலைகளிலிருந்து தயாரித்த களிம்பு காயங்களையும் நாட்பட்ட புண்களையும் போக்க வல்லது. வேர், பட்டை உடலின் நலத்தினை நோய்க்குப் பின் மேம்படுததும். தசை இறுக்கி, துயில் தூண்டுவி, வடிச்சாறு கல்லீரல், கணையம் மற்றும் தோல் வியாதிகளைக் குணப்படுத்தல். பட்டையின் கசாயம் மஞ்சள்காமாலைக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலைகள் மனிதனின் தலை முடிகளுக்குச் சாயமிடவும், குதிரைகளின் பிடரி மற்றும் வாய்களுக்குச் சாயமிடவும் உதவுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:29:46(இந்திய நேரம்)