தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

  • வல்லாரை

    மூலிகையின் வேதிமச் செயற்பண்புகளும் மருத்துவப் பயன்களும்


    முனைவர் வீ.இளங்கோ,
    உதவிப்பேராசிரியர்,
    சித்த மருத்துவத்துறை


    சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடும் சில முக்கிய மூலிகைகளில் வல்லாரையும் ஒன்றாகும். தேரையர் குணவாகடம், தேரையர் வெண்பா மற்றும் அகத்தியர் குணபாடநூல்கள் வல்லாரையின் முக்கிய மருத்துவப் பண்புகளைக் கூறுகின்றன. இதன் வேறு பெயர்கள், சண்டகி, மற்றும் யோசனைவல்லி. இதில் குறைந்த அளவில் பக்குவப்படுத்தி உண்ணும்போது மருந்துப் பயனையும், அளவுக்கு மீறி உண்டால் தலைவலி, தலைச்சுற்றலையும் உண்டாக்கும்.

    மூலிகை வேதிமச் செயற்பண்புகள்

    வல்லாரை மூலிகையின் வடிசாற்றில் இதன் குறியீட்டு வேதிமமாக ஆசியோடிக்கோசைடு என்ற மூலிகையினம் விளக்குகிறது. இதில் பலவகை டிரைடெர்பின் வேதிமங்கள் உள்ளன. ஆசியாட் டிக்கோசைடு என்ற மூலிகை வேதிமம் தொழுநோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பிராமினோசைடு, ஐசோபிராமிக் அமிலம் மற்றும் பிராமிக் அமிலடிரைடெர்பின்கள் வல்லாரையில் உள்ளன. அரிதாக காணப்படும் தான்குனிக் அமிலம், வல்லாரையில் உள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளது. மடகாஸ்கோசைடு மற்றும் கேம்பரால் ஆகிய மூலிகை வேதிமங்கள் வல்லாரையில் உள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளன.

    மருத்துவப் பயன்கள்

    வல்லாரை மூலிகையைப் பக்குவப்படுத்தி தொண்டை கமறல், யானைக்கால் நோய், விரைவீக்கம், மேகப்புண், காயம், ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் வாய்ப்புண் மற்றும் இரத்தப்போக்கு, வயிற்றுக்கடுப்பு ஆகிய நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. வல்லாரையிலிருந்து தயாரிக்கப்பயன்படும் மாத்திரைகள் நினைவாற்றலை வளர்க்கவும், சில தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. முதியவர்களுக்கு உண்டாகும் நரம்பு நோய்கள், சுரம் மற்றும் மேக நோய்களுக்கும் வல்லாரை இலைச்சாறு மருந்தாகப் பயன்படுகிறது. சித்த மருத்துவம் மற்றும் வட இந்திய மருத்துவ நூல்களில் வல்லாரை மூலிகையைப் பலப்படுத்தும் மருந்தாகத் தொன்றுதொட்டு பயன்படுத்தி வரப்படுகிறது என்று அறியலாம். இரைப்பு நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

    அறிவியல் ஆய்வுகள்

    பல்வேறு ஆய்வகங்களில் மேற்கொண்ட ஆய்வுகளில் வல்லாரையில் உள்ள ஆக்ஸியாட்டிகோசைடு, பிராமினோசைடு, பிராமோசைடு மற்றும் பிராமிக் அமிலம் ஆகிய மூலிகை வேதிமங்கள் நினைவாற்றல் அதிகரிக்கவும், தோல் நோயால் தோன்றும் கோளாறுகளுக்கும் மருந்தாகப் பயன்படும் செயல்திறன் பெற்றுள்ளதாக ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. மேலும், நரம்புத் தளர்ச்சி மற்றும் வலிப்பு நோய்க்கு இதன் வடிசாறு மருந்தாகச் செயல்படுகிறது என்பதை மருந்தியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. ஆசியோட்டிகோசைடு வல்லாரையிலுள்ள நரம்பு காயங்களைப் போக்கும் முக்கிய மருந்தாகும். மேலும், கீல்வாத நோயில் உண்டாகும் கொலாஜன் குறைபாட்டைச் போக்குவதுடன், புதிய கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும் செயல் திறன் கொண்டதாக ஆசியாட்டிக் அமிலம் செயல்படுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வில் குறுகிய கால மற்றும் நாட்பட்ட வாத அழற்சி நோயை வல்லாரையின் சாராய வடிசாறு போக்க வல்லது என்பது மருந்தியல் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:14:54(இந்திய நேரம்)