தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

 • மருந்திற்குப் பயன்படும் பட்டைகள்

  முனைவர் மரு.பெ.பாரதஜோதி
  இணைப்பேராசிரியர்
  சித்த மருத்துவத்துறை

  மருதம் பட்டை (Terminalia arjuna) :

  - மருதம் பட்டையைக் குடிநீரிட்டுக் கொடுத்து வர இரைப்பு, இருமல், கழிச்சல், சுரம் போன்ற நோய்கள் தீரும்.

  - மருதம் பட்டை, நாவற்பட்டை, மாம்பட்டை இவற்றைச் சமஅளவு எடுத்து இரவில் குடிநீரிட்டு காலை வரை ஊறவிட்டு காலையில் 30 மி.லி அருந்தி வர இரத்த வாந்தி தீரும்.

  - மருதம் பட்டை, செம்பருத்திப்பூ, வெண்தாமரைப்பூ இவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து உலர்த்திப் பொடித்து திரிகடி (மூவிரல்) அளவு உட்கொண்டு வந்தால் பல இதய நோய்கள் குணமாகும்.

  - மருதம் பட்டைச் சூரணத்தை ஆடாதொடை இலைச் சாறுடன் சாப்பிட நுரையீரல் நோய்கள் தீரும்.

  - மருதம் பட்டைச் சூரணத்துடன் மஞ்சள் கரிசாலைச் சூரணம் கலந்து சாப்பிட கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் (organomegaly) குறையும். - மருதம் பட்டைச் சூரணத்துடன் வாய்விடங்கம், கருங்காலிப் பட்டைச் சூரணம் சமஅளவு கூட்டி காலை, மாலை 1 கிராம் அளவு உண்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

  - மருதம் பட்டையுடன் அத்திப்பட்டை சேர்த்துக் குடிநீரிட்டுக் குடித்து வர உடல் பருமன் குறையும். சூதக சம்பந்தமான நோய்கள் தீரும்.

  அத்திப்பட்டை (Ficus racemosa)

  - அத்திப்பட்டையுடன், நாவல் பட்டை, ஆவாரம் பட்டை இவற்றைச் சமஅளவு எடுத்துப் பொடித்துக் கொண்டு, காலை மாலை 1 கிராம் அளவு தேனில் உண்டு வர சிறுநீரகத் தொற்று நீங்கும்.

  - சிறுநீரில் இரத்தம் கலந்து வந்தால் அத்திப்பட்டையைக் குடிநீர் செய்து வழங்கலாம்.

  - அத்திப்பட்டையைப் பசுமோர் விட்டு இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி 80 – 100 மி.லி வரை கொடுத்து வர பெரும்பாடு நீங்கும்.

  - அத்திப்பட்டைக் குடிநீரால் கீழ்வாய்க் கடுப்பு, சீதக்கழிச்சல், வெள்ளை போன்ற நோய்கள் தீரும்.

  மாவிலங்கப் பட்டை (Crataeva magna)

  - மாவிலங்கப் பட்டைக்குக் கற்கரைச்சி (Lithontriptic) செய்கை உண்டு.

  “மாவிலங்கப் பட்டையினால் வாதமொடு சன்னிகளும் பரவுகின்ற கல்லடைப்பும் மாறுமே”

  - மாவிலங்கப் பட்டைக் குடிநீரால் வாத நோய்கள், முப்பிணி மற்றும் கல்லடைப்பு நோய் தீரும்.

  - மாவிலங்கப் பட்டையுடன் மூக்கிரட்டை சேர்த்து குடிநீரிட்டு 20 மி.லி கொடுத்து வர நாட்பட்ட புண்கள், விரை வீக்கம் போன்றவை தீரும்.

  இலவங்கப் பட்டை (Cinnamomum verum)

  - இலவங்கப்பட்டை, கடுக்காய்ப்பூ, கிராம்பு ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து வறுத்துப் பொடித்துக் கொண்டு மூவிரல் கொள்ளும் அளவு வெண்ணெயில் கொடுத்து வர இரத்தக் கழிச்சல், சீதக் கழிச்சல் தீரும்.

  - இலவங்கப்பட்டை, மூசாம்பரம், வறுத்த அன்னபேதி ஆகியவற்றை சம அளவு எடுத்துத் தேனில் அரைத்து மெழுகாக்கிக் கொண்டு 100 மி.கி இரு வேளை கொடுத்து வர கருப்பை தொடர்பான நோய்கள் நீங்கும்.

  - இலவங்கப்பட்டைச் சூரணத்தை நீரில் உண்டு வந்தால் சுவையின்மை தீரும். உடல் பொன்னிறமடையும்.

  - இலவங்கப்பட்டை 1 பங்கு, ஏலக்காய் 2 பங்கு, கற்கண்டு 16 பங்கு எடுத்து பொடித்து 1 கிராம் அளவு உண்டு வந்தால் கை, கால் எரிச்சல் தீரும்.

  - கடுக்காய்ப்பூவுடன் இலவங்கப்பட்டையைச் சமஅளவு கூட்டி வறுத்து பொடித்து 2-4 கிராம் அளவு கொடுத்து வர வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

  - இலவங்கப்பட்டைக் குடிநீரால் வயிற்றுவலி, பூச்சிக்கடி முதலியவை தீரும்.

  - இலவங்கப் பட்டை பொடி 500 மி.கி அளவு கொடுத்து வர பெரும்பாடு நீங்கும்.

  - இலவங்கப்பட்டையுடன் ஏலரிசி, சுக்கு சேர்த்து பொடித்து 200 மி.கி கொடுக்க வாந்தி தீரும்.

  பூவரசம் பட்டை (Thespesia populnea)

  - பூவரசம் பட்டை, பூவசரங்காய் இரண்டையும் குடிநீரிட்டு தேங்காய் எண்ணெயுடன் கலந்து தைல பாகத்தில் வடித்துக் கொண்டு சிரங்குகளில் பூசி வர சிரங்கு குணமாகும். மூட்டு வீக்கங்களுக்குப் போட வீக்கம் குறையும்.

  - பூவரசம் பட்டை, புவரசங்காய் இரண்டையும் குடிநீரிட்டு 60 மி.லி கொடுக்க கழிச்சலை உண்டாக்கி, காணாக்கடி, பெருவயிறு முதலிய நோய்களைப் போக்கும்.

  - முதிர்ந்த பட்டையின் சதையைச் சிதைத்துப் பிழிந்த சாறை வாயிலிட்டு நன்கு கொப்பளித்து சிறிது சிறிதாக விழுங்கிவிட உதட்டில் வரும் வெண்புள்ளி மறையும்.

  - நூறாண்டுகள் பழமை வாய்ந்த பூவரச மரத்தின் பூ, காய், பட்டை ஆகியவற்றைச் சம அளவு எடுத்துச் சூரணம் செய்து 1-2 கிராம் அளவு இருவேளை கொடுத்து வர தீராத நாட்பட்ட தோல் வியாதிகள் அனைத்தும் தீரும்.

  - பூவரசம் பட்டையினால் தயாரிக்கப்பட்ட தைலம் குழந்தைகளுக்கு ஏற்படும் 18 வகை கரப்பான்களையும் நீக்கும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:10:13(இந்திய நேரம்)