தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆல மரம்

  • ஆல மரம்

    முனைவர் கு.க.கவிதா,
    உதவிப் பேராசிரியர்,
    சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

    தாவரவியல் பெயர் : ஃபைகஸ் பென்கலன்சிஸ் (Ficus bengalensis Linn.)
    குடும்பம் : மொரேசியே (Moraceae)

    ஆழமாக வேரூன்றி, விழுதுகளைப் பரப்பி வளரும் மரங்களுள் ஆலமரம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதை ஆல் என்றும் அழைப்பர். இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் இயற்கையாக வளர்கிறது. இமயமலைச் சாரலின் சரிவுகளில் இது காட்டு மரமாக வளர்கிறது. சாலை ஓரங்கள், ஆலயங்கள், மேடைக் கோவில்கள் ஆகியவற்றின் அருகிலும் கிராமப் பொது இடங்களிலும் வளர்க்கப்படுகின்றது.

    ஆலமரம்

    இது 20 முதல் 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மிகவும் பருத்த அடி மரத்தைக் கொண்டது. அடிமரத்தின் சுற்றளவு 15 மீட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்கக்கூடும். கிளைகளிலிருந்து மெல்லிய வேர்கள் தோன்றிக் கீழ்நோக்கி வளர்கின்றன. இவை விழுதுகள் எனப்படும். நாளடைவில் பெருத்த தூண் போல ஆகின்றன.

    பயன்கள் :

    படர்ந்த, அடர்த்தியான நிழல் தரும் மிகச்சிறந்த மரமாகச் சாலையோரங்களில் வளர்க்கப்படுகின்றது. இம்மரத்தின் முட்டு வேர்களின் கட்டை உறுதியானது. அது கூடாரக் கம்பங்களாகவும், வண்டிகளின் ஏறுகாலாகவும் பயன்படுகிறது. இதன் பட்டை நாட்டு மருத்துவம், சித்தமருத்துவம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

    ஆலமரத்துப் பால், இலை, பட்டை, கனிகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

    இம்மரத்தின் பால் (Latex) மூட்டுவலிக்குப் பயன்படுகிறது. பட்டை நிரிழிவு நோய் தீர்க்கும். விழுதுகள் ஈறு நோய்களைப் போக்க வல்லது. ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்ற பழமொழி உண்டு. ஆலமரத்தின் விழுதுகளின் நுனியில் உள்ள குச்சி போன்ற மெல்லிய பகுதியைப் பல் துலக்கப் பயன்படுத்தப் பல் உறுதியாகும். இலைகள் ஆட்டுக்குத் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றன. கனிகளைப் பறவைகளும் குரங்குகளும் விரும்பி உண்கின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:59:23(இந்திய நேரம்)