தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

  • சீந்தில் கொடி

    மூலிகை வேதிமக் கூறுகளும் மருத்துவப் பயன்களும்


    முனைவர் வீ.இளங்கோ,
    உதவிப்பேராசிரியர்,
    சித்த மருத்துவத்துறை


    தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் சீந்தில் கொடி பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேறு பெயர்கள். அமிர்தவள்ளி, சாதா மூலி மற்றும் ஆயவள்ளி என்பவையாகும். சீந்தில் கொடி மூலிகையில் இருந்து எடுக்கப்படும் ஒருவிதச் சர்க்கரை, சீந்தில் சர்க்கரை எனப்படும். இதை நீண்ட நாட்கள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புத் திறன் மேலோங்கி அனைத்து நோய்களும் விலகும். இந்தச் சீந்தில் சர்க்கரை கல்லீரல், மண்ணீரல் ஊக்கம் பெறச்செய்து தாகம் மற்றும் வெப்பத்தைத் தணிக்கிறது. இதன் இலை, வேர் ஆகியவை மருந்தாகப் பயன்படுகின்றன.

    மூலிகை வேதிமச் செயற்பன்புக் கூறுகள்

    1சீந்தில் கொடியின் வேதிமப் பண்புக் கூறுகளை ஆய்வு செய்ததில் ஆல்கலாய்டு, டைடெர்பின், லாக்டோன்கிளைக்கோசைடு மற்றும் ஸ்டீராடுகள் உள்ளதெனக் கண்டறியப்பட்டன. இம் மூலிகையில் புரதச்சத்து, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்சுடன், வளியேற்றத் திறனுடைய சில மூலிகை வேதிமங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் டர்பெரின், பால்மெட்டின், கோலின், மற்றும் முதன்மையான அல்காலைடு, டைனோ ஸ்போரின் என்ற வேதிமம் உள்ளதெனக் கண்டறியப்பட்டது. இதன் குறியீட்டு வேதிமமாக டைனே காடிசைடு என்ற குளுக்கோசைடு உள்ளது. மேலும், கிளாயின்ஸ்டிராஸ்டு, டைனோஸ்போரோன் ஆகிய முக்கிய வேதிமங்கள் குறியீட்டு மூலிகை வேதிமமாகச் சீந்தில் கொடியில் உள்ளதெனக் கண்டறியப்பட்டது.

    சீந்தில் கொடியின் மருத்துவப் பயன்கள்

    சீந்தில் சர்க்கரை கல்லீரல் நோய்களைப் போக்கி, காமாலைக்கு மருந்தாகப் பயன்படுகிறது. மண்ணிரலைப் பலப்படுத்தும். சோகை, வீக்கம், வாந்தி, மயக்கம் ஆகியவற்றைப் போக்குகிறது, உலர்ந்த கொடியின் தூள் பனங்கற்கண்டுடன் உண்ண நீரிழிவு நோயைப் போக்கி உடல் மெலிவு,தாகம் ஆகியவற்றைப் போக்கும். காலை, மாலை தேனுடன் பருகும்போது நீண்டநாள் இருமல், காய்ச்சல் ஆகியவை குணமாகும்,
    சீந்தில் இலைவடிச்சாறு சூலை நோய், தோல் நோய் மற்றும் கை, கால்வீக்கம், வாந்தி, கோழை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். பெண்களுக்கு உண்டாகும் மேக வெட்டை, வெள்ளை, தலைச்சூடு ஆகியவற்றைப் போக்கி, இருதயத்திற்கு வலுவை உண்டாக்கும். உடலுக்கு ஊட்டமும் இரத்த விருத்தியும் உண்டாக்கும்.

    அறிவியல் ஆய்வுகள்்

    அறிவியல் ஆய்வுகள் மூலம் சீந்தில் கொடிச் சாறு நீரிழிவு நோய், வாத சுழற்சி, கீல் வாதநோய், மன அழுத்தம், கல்லீரல் நோய்கள் ஆகியவற்றைத் தீர்க்கும் செயல்திறன் பெற்றிருந்தமையும், புற்றுநோய் எதிர்ப்புதிறன் மற்றும் நோய் எதிர்ப்புத் திறனும் உள்ளதென ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகச் சித்தமருத்துவ மனையில் நீரிழிவு நோயாளிகளுக்குச் சீந்தில் கொடியின் சூரணம் ( 100 மில்லி) என்ற அளவில் 30 நாட்களுக்குக் கொடுத்தபோது நோயாளிகளுடைய ரத்த சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது. சீந்தில் கொடியில் உள்ள மூலிகை வேதிமங்கள் மற்றும் தாமிரம், குரோமியம் ஆகிய நுண் தனிமங்கள் நீரிழிவு நோயைக் குணமாக்கும் செய்கையில் பங்காற்றியமை விவாதிக்கப்பட்டுள்ளது.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:11:05(இந்திய நேரம்)