தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செண்பக மரம்

 • செண்பக மரம்

  முனைவர் கு.க.கவிதா,
  உதவிப் பேராசிரியர்,
  சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

  தாவரவியல் பெயர் : மைக்கேலிய செம்பகா (Michelia champaca (L.))
  குடும்பம் : மேக்னோலியேசி (Magnoliaceae)

  இரண்டு செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தைக் காணலாம் என்றும் உயிர்களைப் படைக்கும் கடவுள் பிரம்மா கூறியிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. திருத்தென்குடித்திட்டை, திருஇன்னம்பர், திருச்சிவபுரம், திருநாகேசுவரம், திருப்பெண்ணாகடம் முதலிய சிவத்திருக்கோயில்களிலும் திருச்சேறை, திருநந்திபுர விண்ணகரம் ஆகிய திருமால் கோயில்களிலும் தலவிருட்சமாகச் செண்பக மரம் விளங்குகிறது.

  வளரியல்பு :

  செண்பகம்

  இமயமலைப் பிரதேசங்களின் கிழக்குப் பகுதி, வட கிழக்கு இந்தியப் பிரதேசங்களான அஸ்ஸாம், பர்மா, அருணாச்சலப் பிரதேசங்களில் மிக அதிக அளவு காணப்படுகிறது. 30 மீட்டர் உயரம் வரையிலும் வளரும். பருமன் 35 மீட்டர் அடிமரம் 20 மீட்டர் அளவில் இருக்கும். இதன் இலை 20-25 செ.மீ நீளமும், 4 செ.மீ அகலமும் கொண்டும் செப்டம்பரில் பூக்கள் பூக்கும்.

  பயன்கள் :

  சுமார் 100 கிலோ அளவுள்ள பூக்களிலிருந்து 160-200 கிராம்கள் வரையிலான அத்தர் எடுக்கப்படுகின்றது. இதிலிருந்து பன்னீர் மற்றும் பலவிதமான வாசனைத் திரவியங்களும் தயாரிக்கப்படுகின்றன.

  இதன் பூக்கள் தலை நீர்க்கோர்வை, கண் நோய், தொண்டை வீக்கங்களைக் குணப்படுத்தும்.

  இதன் பூ வயிற்று உப்புசத்திற்கும் பயன்படுகிறது.

  இதன் இலை உடல் சூட்டைத் தணிக்கிறது. பசியைத் தூண்டுகிறது.

  இதன் இளந்தளிரை அரைத்து தண்ணீரில் கலந்து கண்களில் விடுவதன் மூலம் பார்வை நன்றாகத் தெரியும்.

  இதன் மரப்பட்டைகள் சளித்தொல்லைகளுக்கு நல்ல நிவாரணியாகச் செயல்படுகின்றன.

  இதன் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைக் கொண்டு வயிற்றுவலி, பாதவெடிப்புகள், அஜீரணம், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:58:10(இந்திய நேரம்)