தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

 • அனுபானமும் அறிவியலும்

  முனைவர் வா.ஹஸீனாபேகம்
  பேராசிரியர் மற்றும துறைத்தலைவர்
  சித்த மருத்துவத்துறை

  அன்றைய அறிவியல் ஞானிகளான சித்தர்கள் அனுபவத்தினாலும் ஞான சித்தியினாலும் உவந்து அளித்த மருந்துகள் சித்த மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை தமிழ் மொழியில் போதிக்கப்பட்டுள்ளதால் தமிழ் மருந்துகள் என்றும், அந்த மருத்துவ முறைகள் தமிழ் மருத்துவ முறைகள் அல்லது சித்த மருத்துவ முறைகள் என்றழைக்கப்படுகின்றன.

  சித்தர் வாக்கில் முதலில் வருவது உணவே மருந்தாகும். பின் மூலிகைகள், தாது வர்க்க பற்பங்கள், பாடாணங்கள், செய்முறைகள், மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

  சித்தர்கள் மருந்து முறைகளைத் தனி மருந்தாகவோ கூட்டு மருந்தாகவோ நோய் தீர்க்கும் முறைகளில் கூறியுள்ளனர். மேலும் மருந்துகளை அனுபானத்துடன் சேர்த்துக் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளனர். அனுபானத்துடன் மருந்துகளை அளிக்கும் போது மருந்துகளின் வேதிம மூலப் பொருட்கள் உறிஞ்சுவது எளிதாக்கப்படுவதுடன் நச்சுக் காரணிகளையும் பின் தங்கி விடச் செய்து வெளியேற்றமடைய உதவுகின்றன.

  அனுபானத்தில் மூலிகைச் சாறு, நீர், கருப்பட்டி, தேன், மோர், பால் போன்ற அடங்கும். ஒரே தாது சீவ மருந்துக்குப் பல வகைகளை நோய்களைத் தீர்க்கப் பல வகையான அனுபான முறைகளைக் கூறியுள்ளனர்.

  காயகல்ப மருந்தாகப் பரிந்துரைக்கப்படும் பூரணச் சந்திரோதய செந்தூரம், பாதரசம், தங்கம், கந்தகம் கலவையைச் செம்பருத்திப் பூ மற்றும் சோற்றுக் கற்றாழை சாறில் அரைத்துப் புடம் போட்டு எடுக்கப்பட்ட அருமருந்தாகும். இன்றும் அனைவராலும் பயன்படுத்தப்படும் காயகல்பம். சித்த மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் இன்றும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

  வெளிநாடுகளில் இதற்கு வரவேற்பு இருந்தாலும் வியாபார போக்கில் விற்பனை செய்வது கடினமாக உள்ளது என்று கூறப்படுகின்றது. காரணம், பாதரசம் கொண்டு தயாரித்த மருந்தில் தனித்த பாதரசத்தின் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறுகின்றனர்.

  ஆனால், சித்த மருத்துவர்கள் அனுபான முறைகளுடன் மேற்படி மருந்துகளைப் பரிந்துரைத்து வருகின்றனர்.

  இம்மருந்திற்கான அனுபானம், தேன் ஆகும். தேனில் எளிதில் செரிக்கும் சர்க்கரைச் சத்து இருப்பதுடன் பயனுள்ள நுண்ணுயிரிகள் மிகுந்து வளருவதற்கு உதவும் மித நீர் சர்க்கரை (FOS) கொண்டுள்ளன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

  பயனுள்ள நுண்ணுயிரிகள், நச்சுத் தன்மை உண்டாக்கும் தனித்த தனிமங்கள்/ தாதுக்களைக் குறிப்பாகப் பாதரசத்தை வெகுவாக நீக்கும் ஆற்றல் கொண்டுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர். மேலும், ஆக்கச் சிதை மாற்றத்தினால் ஏற்படும் தனித்த அயனிகளை அளிக்கும் நொதிகளை மிகுத்து, உடம்பின் செல்களில் நச்சுத் தன்மையால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கின்றன.

  நம் முன்னோர்கள் சித்தர்கள் அருளிய மருத்துவச் சிந்தனைகளை இந்த உன்னத அறிவியல் கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன. மேலும், தாது சீவ மருந்துகள் அனுபானத்துடன் அளிக்கும் போது தீமைகள் ஏற்படுவதில்லை என்பதையும் உறுதி செய்கின்றன.

  மேலும், தேன் போல மோர், கருப்பட்டி போன்ற அனுபானங்களும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவைகளும் மருந்துகளின் செயல் தன்மையை மிகச் செய்கின்றன. மேலும், பயனுள்ள நுண் தனிமங்கள் வைட்டமின் உறிஞ்சுதலையும் அதிகரித்து உடலுக்கு நன்மை பயக்கின்றன. மருத்துவப் பண்புகளை அதிகரிக்கும் நொதிகளைத் தூண்டுதல், நச்சுத் தாதுக்களை வெளியேற்றுதல் மற்றும் தீய நுண்ணுயிரிகளை அழித்தல் போன்ற பண்புகளைச் செய்கின்றன.

  பயனுள்ள நுண்ணுயிரிகள் கொண்டுள்ள மற்றும் அவற்றைக் குடற்பகுதியில் மிகச் செய்யும் அனுபானம் சித்தமருந்துகளின் மருத்துவ மகத்துவத்தின் சான்றுகள் ஆகும். இதன் விளக்கும் அறிவியல் ஆதாரங்கள் உண்மையில் விந்தைக்குரியன .

  எனவே, சித்த மருந்துகள் சாப்பிடும் போது காலம், மருந்தளவு குறிப்பிடப்பட்டுள்ள அனுபானங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு பயன்படுத்தினால் நோயில்லா நீண்ட ஆரோக்கிய வாழ்வு உறுதி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:15:36(இந்திய நேரம்)