தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

  • கரிசலாங்கண்ணி

    - மருந்துவச் செயற்பண்புக் கூறுகளும் மருத்துவப் பயன்களும்


    முனைவர் வீ.இளங்கோ,
    உதவிப்பேராசிரியர்,
    சித்த மருத்துவத்துறை


    சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மூலிகையாக விளங்கும் கரிசாலாங்கண்ணியின் வேறுபெயர்கள் கையாந்தகரை, கரிப்பான், கரிசாலை, கரியசாலை, கைவீருஇலை மற்றும் கைகேசி. அகத்தியர் குணபாடம், தேரன் வெண்பா ஆகிய சித்த மருத்துவ நூல்களில் கரிசலாங்கன்னியின் பல மருத்துவப் பயன்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. இதில், இம் மூலிகைப் பூக்களின் நிறத்தைப் பொறுத்து நான்கு வகைகளாகக் கிடைக்கின்றன. அவை நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை இவற்றுள் மஞ்சள் நிறமுடைய கையாந்தகரை பொற்றலை கையாந்தகரை இது வட இந்தியாவிலும் பயன்பாட்டிலுள்ள வகையாகும்.

    மூலிகை வேதிமச் செயற்பண்புக் கூறுகள்

    கரிசாலையில் அல்கலாய்டுகள், கிளைக்கோசைடுகள், டிரைடெர்பீனாய்டுகள், ஆகிய மூலிகை வேதிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கரிசாங்கண்ணியில் குறியீட்டு மூலிகை வேதிமங்களாக வெடிலோ லாக்டோன், டிமீனதல்-வெடிலோலாக்டோன் மற்றும் டீமீனதல்-வெடிலோலாத்டோன்-7-கிளைக்கோசைடு ஆகியவை தொற்று மூலம் தோன்றும் கல்லீரல் நோய்க்கு மருந்தாகப் பயன்படுவதைப் பல்வேறு உலகளாவிய உயிர்வேதிம மருந்தியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

    மருத்துவப் பயன்கள்

    மஞ்சள் கையாந்தகரையை மருந்தாகப் பயன்படுத்தும்போது உடலுக்கு நல்ல நிறத்தையும் பார்வைக் கூர்மையையும், தெளிந்த மனநிலையையும் உண்டாக்கும். இதைக் கீரையாகச் சமைத்து உண்ணும் போது பித்தம் குறையும், இருமல் நோய் தீரும். கரிசாலையின் சாறு மஞ்சட்காமாலை, உடல்வீக்கம், குட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. கரிசாலைக் சூரணத்தை உட்கொள்ளும்போது சோகை, நீர்க்கோவை ஆகிய நோய்கள் தீரும். பாம்பால் விஷங்கள் ஏற்பட்ட உடலில் நச்சுத்தன்மை நீங்கும். மேலும், யானைக்கால் நோய்க்கும், சிறுநீரில் இரத்தப் போக்கிற்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கையாந்தகரையுடன் நல்லெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சிய தைலம் கூந்தல் கருத்து வளரப் பயன்படுகிறது. அனைத்துக் கல்லீரல், மண்ணீரல் நோய்களுக்கும் கரிசாலை வேர்ப்பொடி மருந்தாகிறது. இரத்த சோகை, இருமல் மற்றும் காது, கண் நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. கரிசாலைச்சாறு தேனுடன் கலந்து சாப்பிட இளநரை மாறும்.

    அறிவியல் ஆய்வுகள்

    பல்வேறு மருந்தியல் ஆய்வுகளில் கரிசாலை கல்லீரல் நோய்கள், நீரிழிவு, அதிவளியேற்றம் ஆகிய நோய் நிலைகளில் குணமாக்கும் செயல்திறன் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மஞ்சட்காமாலை குறிப்பாக வைரஸ் தொற்றால் உண்டாகக் கூடிய காமாலைக்குச் சிறந்த மருந்தாகச் செயல்திறன் ஆற்றியமை பண்டுவ ஆய்வுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டது.

    தமிழ்ப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத் துறை ஆய்வுகளில் கார்பன் டெட்ரா குளோரைடு மூலம் உண்டாக்கப்பட்ட கல்லீரல் நோய் உண்டாக்கப்பட்ட எலிகளுக்கு கரிசாலை வடிசாற்றை மருந்தாகக் கொடுத்தபோது மஞ்சட்காமாலை நோயால் தோன்றும் அதிகரித்த இரத்த அழுத்தம், கல்லீரல் நொதிகள் மாற்றம் அடைந்த கல்லீரல் புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை மாற்றம் சீரடைந்து நோய் தீர்க்கும் செயல்திறன் பெற்றிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:12:28(இந்திய நேரம்)